ADVERTISEMENT

கண்ணப்பனைத் துரத்தும் ஸ்டாலின் கோபம்… இதுதான் பின்னணி! 

Published On:

| By Aara

incharge minister change thangam thennarasu rajakannappan

நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் பதவியில் இருந்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக  நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக  அமைச்சர் தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டிருக்கிறார்.  இதற்கான அறிவிப்பு ஜூலை 21 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அமைச்சர் ராஜ கண்ணப்பன், தான் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுவதாக வருத்தத்தில் இருக்கிறார். நேற்று இரவு முதலே அவருக்கு நெருக்கமானவர்கள் அமைச்சரது எண்ணுக்கும், அவரது பி.ஏ.க்கள் செல்நம்பருக்கும் போன் செய்திருக்கிறார்கள். ஆனால் போனை எடுக்கவே இல்லை. இன்று  அமைச்சர் கண்ணப்பனை நேரில் சந்தித்தவர்களிடம், ‘ஏன்யா… போனெல்லாம் டேப் ஆகிட்டிருக்கு. நீ பாட்டுக்கு ஏதாச்சும் கேட்டு நான் பாட்டுக்கு ஏதாச்சும் சொன்னா என்னாகுறது?’ என்று புலம்பியிருக்கிறார்.

ADVERTISEMENT

incharge minister change thangam thennarasu rajakannappan
ஜெயலலிதாவின் 1991 ஆட்சியில் முப்பெருந்துறை அமைச்சர் என்று அழைக்கப்பட்டவர் கண்ணப்பன். பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை, நெடுஞ்சாலைத் துறை என வளமான துறைகளை வகித்தவர். ஆனால் இப்போது திமுக ஆட்சியில் மூன்று முக்கியமான சறுக்கல்களைதான் சந்தித்திருக்கிறார் கண்ணப்பன்.

ஆட்சி அமைந்த  ஆறு மாதங்களிலேயே அதாவது 2021 அக்டோபர் மாதமே போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு   ஸ்வீட்ஸ் வாங்கும் டெண்டரில் முறைகேடு என புகார் எழுந்தது. அதை மின்னம்பலத்தில்தான் அப்போது முதன் முறையாக வெளியிட்டோம். அடுத்த நாளே அதாவது 2021 அக்டோபர் 19 ஆம் தேதியே பொறுப்பு அமைச்சர்கள் என்ற அறிவிப்பு வந்தது.

ADVERTISEMENT

அதில் ராமநாதபுரத்துக்கு தங்கம் தென்னரசு பொறுப்பு அமைச்சர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது அமைச்சர்கள் இல்லாத மாவட்டங்களுக்குதான் பிற அமைச்சர்கள்  பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டார்கள். ஆனால் கண்ணப்பன் ராமநாதபுரம் மாவட்ட அமைச்சராக இருந்தபோதே அந்த மாவட்டத்துக்கு தங்கம் தென்னரசுவை பொறுப்பு அமைச்சராக நியமித்ததன் மூலம் முதலில் கண்ணப்பனுக்கு ஒரு செக் வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். அதேநேரம் கண்ணப்பனை திருநெல்வேலிக்கு பொறுப்பு அமைச்சராக நியமித்தார்.

2022 மார்ச்  மாதம் அரசு ஊழியரை சாதிப் பெயர் சொல்லி திட்டியதாக சர்ச்சை வெடித்தது. திமுகவின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளே கண்ணப்பன் மீது வன் கொடுமை வழக்குப் பதியவேண்டும் என்று கோரிக்கை எழுப்பினார்கள். இதனால் கண்ணப்பன் மீது மேலும் கோபம் அடைந்த முதலமைச்சர் ஸ்டாலின் அவரிடம் இருந்த வளமான போக்குவரத்துத் துறையை பறித்து,சிவசங்கரிடம் கொடுத்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆக்கினார்.  இது இரண்டாவது செக்.

ADVERTISEMENT

இப்போது திருநெல்வேலி பொறுப்பு அமைச்சர் என்பதையும் மாற்றி அங்கே தங்கம் தென்னரசுவை நியமித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். கண்ணப்பன் திருநெல்வேலியில் பொறுப்பு அமைச்சராக இருந்தபோது  மாவட்டச் செயலாளர்களிடம் இணக்கமாக இல்லை என்பது அவர் மீதான புகார்.  அப்துல் வஹாப் மத்திய மாவட்ட செயலாளராக இருந்தபோதே  அவர் கண்ணப்பனுக்கு எதிராக தலைமையிடம் புகார் சொன்னார்.

அதேபோல நெல்லை கிழக்கு மாசெவான ஆவுடையப்பனுக்கும் ராஜ கண்ணப்பனோடு முரண்பாடுகள் ஏற்பட்டன. கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடைய அதிகாரங்களில் தலையிடுகிறார், டெண்டர்களில் எல்லாம் அவருக்கு வேண்டியவர்களை சிபாரிசு செய்கிறார் என்றெல்லாம் ஸ்டாலினுக்கு புகார்கள் சென்றுள்ளன. மேலும் தனது பழைய கட்சியான மக்கள் தமிழ் தேசத்தில் இருந்தவர்களை எல்லாம் வைத்து நெல்லை மாவட்டத்தில் தனி ஆவர்த்தனம் வாசிக்கிறார் அமைச்சர் ராஜகண்ணப்பன் என்றும் திமுக தலைமைக்கு மாசெக்களே புகார்களை அனுப்பினர்.

மாசெ ஆவுடையப்பனும், சபாநாயகர் அப்பாவுவும் தங்களுக்குள் அரசியல் ரீதியாக மோதிக் கொண்டாலும்… இந்த இருவருமே கண்ணப்பனுக்கு எதிராக சில விஷயங்களை தொடர்ந்து தலைமைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

கண்ணப்பன் மீதான முதலமைச்சர் ஸ்டாலினின் கோபம் இதனால் அதிகரித்து, அதன் விளைவாகவே  திருநெல்வேலிக்கு தங்கம் தென்னரசுவை பொறுப்பு அமைச்சர் ஆக்கியிருக்கிறார் என்கிறார்கள் நெல்லை வட்டாரங்களில்.

அமைச்சர் தரப்பில் விசாரித்தபோது, ‘நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக சிறப்பாகவே செயல்பட்டார் அமைச்சர் கண்ணப்பன். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பல கோடிகளை நெல்லை மாவட்டத்துக்காக செலவழித்தவர். முதல்வரின்  நடவடிக்கையால் வருத்தம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கிறார். மீண்டும் வலிமையான துறையைப் பெறும் முயற்சியில் இருக்கிறார்” என்கிறார்கள்.

வேந்தன்

முத்தமிழ் பேரவை இசை விழா: முதல்வர் வைத்த கோரிக்கை !

டிஜிட்டல் திண்ணை: கேபினட்டில் சீறிய ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share