கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு ஏன் வெளியிடவில்லை என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்.பி. கேள்வி எழுப்பி இருந்தார்.
மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்.பி. எழுப்பிய கேள்வி: கீழடி ஆய்வு முடிவுகளை பதிப்பிக்க ஒன்றிய அரசு தொடர்ந்து முட்டுக்கட்டைகள் போடுவதை குறிப்பிட்டு திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி. மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில் அவர், தொல்பொருள் ஆய்வு முடிவுகளை உரிய நேரத்தில் பதிப்பிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன? அறிக்கைகளை சமர்ப்பித்தல், மதிப்பாய்வு செய்தல் மற்றும் வெளியிடுவதற்கு வழக்கமான காலக்கெடு என்ன? சரியான நேரத்தில் வெளியிடுவதை உறுதி செய்வதற்காக ஒன்றிய அமைச்சகம் வகுத்திருக்கும் கொள்கைகள் என்ன? கீழடி முடிவுகளை எப்போது வெளியிட திட்டமிட்டிருக்கிறது. இவ்வாறு திருச்சி சிவா எம்.பி. கேள்வி எழுப்பினார்.
சாலை விபத்து மரணங்கள்
மக்களவையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எழுப்பிய கேள்வி: நாட்டில் 2024ஆம் ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளால் 1,80,000 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சாலை விபத்து இறப்புகளை குறைக்கவும் ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) இலக்கை மீறாமலும் இருக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் எந்த அளவுகோளில் இறப்பு விகிதங்கள் ஒப்பிடப்படுகிறது? வடிவமைப்பு குறைபாடுகள் கண்டறிந்து சரிசெய்யவும் அறிவியல் சாலைப் பாதுகாப்பு தணிக்கைகளை மேற்கொள்ளவும் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுடன் பாதுகாப்பான சாலைகளைப் பொறியியல் ரீதியாக வழங்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளின் விவரங்கள் என்ன? கடந்த மூன்று ஆண்டுகளில் சாலைப் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட மொத்த நிதி மற்றும் அவற்றின் செலவு விவரங்கள் என்ன? இவ்வாறு ஆ.ராசா எம்.பி. கேள்வி எழுப்பினார்.
