திருப்பதி: ஒரே மாதத்தில் 130 கோடி ரூபாய் காணிக்கை!

Published On:

| By admin

கடந்த இரண்டு வருடங்களாக மூடப்பட்டிருந்த திருப்பதி கோவில், தற்போது கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் திறக்கப்பட்டதிலிருந்து அதிக கூட்டத்தை கண்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக கடந்த மாதம் கோடை விடுமுறைகள் விடப்பட்டு இருந்ததால் பக்தர்கள் குடும்பங்களுடன் கூட்டம் கூட்டமாக திருப்பதி கோவிலை நோக்கி படையெடுத்தனர்.

கடந்த மே மாதத்தில், சில நாட்களில் கிட்டத்தட்ட 48 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலைக்கு பக்தர்கள் தள்ளப்பட்டனர். தற்பொழுது தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது. சாமி தரிசனம் செய்ய வரும் மக்கள் உண்டியல் காணிக்கை செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த மே மாதத்தில் மட்டும் 130 கோடி 29 லட்சம் உண்டியல் காணிக்கையாக வந்துள்ளது என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி தேவஸ்தான வரலாற்றிலேயே ஒரே மாதத்தில் உண்டியல் காணிக்கையாக இவ்வளவு பெரிய தொகை வந்துள்ளது முதல் முறையாகும். கடந்த மே மாதத்தில் மட்டும் 22.62 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துள்ளனர். 1.86 கோடி லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 10.72 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கடந்த மே மாதம் கடைசி வாரத்தில் பக்தர்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக அலை மோதியதால் திருப்பதி லட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆகையால் ஒரு பக்தருக்கு மூன்று லட்டுகளுக்கு மேல் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share