திருச்சி என்ஐடி-யில் இன்று முதல் வரும் 16ஆம் தேதி வரை தொழில்முனைவோர் மாநாடு நடைபெறவுள்ளது.
கடந்த அரை நூற்றாண்டுகளில் கணினியிலிருந்து முன்னேறி ஸ்மார்ட்போனிலேயே உலகத்தைக் கையில் அடக்கும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது என்றால் பொறியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களின் யோசனைகளும் திட்டங்களும் இன்றியமையாதது.
இந்த நிலையில் வளரும் தொழில்முனைவோர் பயன்பெறும் வகையில் சிறந்த தொழில்முனைவோர்கள் பங்கேற்று உரையாற்றும் தொழில்முனைவோர் மாநாடு இன்று திருச்சி என்ஐடி-யில் தொடங்குகிறது.
இந்த நிகழ்ச்சியை E-Cell எனப்படும் திருச்சி என்ஐடி தொழில்முனைவோர் குழுமம் நடத்துகிறது. மாணவர்கள் பயன்பெறும் வகையில் வொர்க் ஷாப்ஸ், சிறந்த தொழில்முனைவோர்களின் விருந்தினர் உரைகள் மற்றும் சில முறைசாரா நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.
மாணவர்களின் உள்ளார்ந்த திறன், யோசனைகளை வளர்க்கவும் ஊக்குவிக்கவும் ‘E-SUMMIT: A CONFLUENCE TO INFLUENCE’ என்ற தலைப்பில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் என்ஐடி-யின் முன்னாள் மாணவர்கள் உட்பட பலர் பங்கேறவுள்ளனர்.
சிறப்பு விருந்தினராக பஜாஜ் நிறுவனத் தலைவர் அபூர் பஜாஜ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளார். மேலும் ஐஐடி, ஐஐஎம் சொற்பொழிவாளர்கள், முன்னாள் என்ஐடி இயக்குநர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி விவேக் அட்ரே எனப் பல முக்கிய நிறுவனங்களின் தலைவர்களும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.
**-கவிபிரியா**�,