வாட்டியெடுக்கும் வெயிலில் ஐந்து நிமிடங்கள் நடந்தாலே மழையில் நனைந்ததுபோல வியர்த்துக்கொட்டி, ஆடைகள் நனைந்துவிடும். உடல் வேகமாகச் சோர்ந்துவிடும். ‘கோடையில் எல்லோருக்கும் இந்தப் பிரச்சினைகள் ஏற்படுவது இயல்புதான். என்றாலும், உடற்பயிற்சி செய்பவர்கள் இதையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்!’ என்கிறார்கள் பொதுநல மருத்துவர்கள். Tips For Exercising In Summer
“உடற்பயிற்சி செய்யும்போது உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். அத்துடன் கோடை வெயிலின் தாக்கமும் சேர்ந்துகொள்வதால், மிக எளிதாக உடலின் வெப்பநிலை அதிகரித்துவிடும். உடலின் வெப்பநிலை அதிகரித்தால், பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, கோடைக்காலத்தில் அதிகாலை நேரம்தான் உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்றது. காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கலாம்.
திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்பவர்கள், காலை 8 மணிக்கு முன்னரே உடற்பயிற்சியை முடித்துக்கொள்வது நல்லது. கடுமையான உடற்பயிற்சிகள் செய்வதைத் தவிர்த்துவிட்டு, எளிமையான பயிற்சிகளை மேற்கொள்ளலாம். கோடைக்காலத்தில் எந்த வயதினராக இருந்தாலும், காலை அல்லது மாலையில் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வது போதுமானது. இடையிடையே சில நிமிடங்கள், ஓய்வு எடுத்துக்கொண்டு அதன் பிறகு தொடர வேண்டியது அவசியம்.
உடற்பயிற்சி செய்வதால், வியர்வை வழியாக உடலிலுள்ள நீர்ச்சத்தின் அளவு குறைந்து, டீஹைட்ரேஷன் ஏற்படும். இது மூளையின் செயல்திறனைக் குறைக்கும்; உடலை விரைவில் களைப்படையவும் வைத்துவிடும். எனவே, இரண்டு டம்ளர் நீர் அருந்திவிட்டு, உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும். அதேபோல பயிற்சிக்கு இடையிலும், பயிற்சியை முடித்த பிறகும் தேவைக்கேற்ப நீர் அருந்த வேண்டும்.
உடற்பயிற்சியால் வியர்வை அதிகமாக வெளியேறும். அதனுடன் உடலிலுள்ள எலெக்ட்ரோலைட்டுகளின் அளவும் குறையும். அவற்றை ஈடுசெய்ய சோடியம், பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். ரெடிமேடாகக் கிடைக்கும் எலெக்ட்ரோலைட் பாக்கெட்டுகளை வாங்கி தினமும் ஒரு முறையாவது அருந்த வேண்டும். இளநீரில் சத்துகள் நிறைவாக இருப்பதால், அதை அருந்துவதும் நல்ல பலன் தரும்.
உடற்பயிற்சியின்போது இறுக்கமான உடைகளை அணியாமல், தளர்வான உடைகளை அணிய வேண்டும். உடலில் ஈரம் தங்காதபடி, வியர்வையை உறிஞ்சக்கூடிய, சருமத்தில் அரிப்பு ஏற்படுத்தாத பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். உடற்பயிற்சியை முடித்ததும், நீர்ச்சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிடுவது நல்லது. காரமும் எண்ணெயும் அதிகம் சேர்த்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
மைதானம், கடற்கரை, பூங்கா போன்ற இடங்களில் உடற்பயிற்சி செய்பவர்கள், வெயில் நேரத்தில் ஜிம்முக்குச் செல்பவர்கள் கண்டிப்பாக சன் ஸ்க்ரீன் பயன்படுத்தலாம். இதனால் சருமம் கருமையடைவதைத் தவிர்க்கலாம். Tips For Exercising In Summer
நீச்சல் பயிற்சியில் ஈடுபடுபவர்கள், `நீருக்குள் இருப்பதால் தண்ணீர் குடிக்கத் தேவையில்லை’ என்று தவறாக நினைத்துக்கொள்கிறார்கள். உண்மையில் எந்தவிதமான கடுமையான பயிற்சிகளைச் செய்தாலும் தாகம் எடுக்கும். எனவே, நீச்சல் பயிற்சியின்போது, அவ்வப்போது தண்ணீர் அருந்த வேண்டும். நீச்சல்குளத்தில் இறங்கும் மேடை அருகே தண்ணீர் பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்’’ என்று தண்ணீரின் அவசியத்தை அழுத்தமாகச் சொல்கிறார்கள். Tips For Exercising In Summer