டாக்டர் அய்யா.. உழைத்தது போதும் ஓய்வெடுங்க.. ராமதாஸ் மீது அன்புமணி ஆதரவாளர்கள் சரமாரி தாக்கு!

Published On:

| By Minnambalam Desk

வன்னியர் சங்கத்தின் சித்திரை முழுநிலவு மாநாட்டில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசிய பேச்சு, அவரது மகன் அன்புமணி ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. அரசியலில் இருந்து டாக்டர் ராமதாஸ் ஓய்வு பெற்றுவிட்டு அன்புமணிக்கு வழிவிட வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகின்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சியில் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையேயான மோதல் நாடறிந்த ஒன்றுதான். அன்புமணியை, பாமக தலைவர் பதவியில் இருந்து நீக்கினார் டாக்டர் ராமதாஸ். ஆனால் தாமே தலைவர் என தொடர்ந்தும் செயல்பட்டு வருகிறார் அன்புமணி ராமதாஸ்.

இந்த பின்னணியில்தான் மாமல்லபுரம் திருவிடந்தையில் வன்னியர் சங்கத்தின் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற இந்த மாநாட்டில் பல லட்சக்கணக்கான வன்னியர்கள் பங்கேற்றனர்.

ஆனால் மாநாட்டில் டாக்டர் ராமதாஸ் பேசியதும் அன்புமணி பேசியதும் பாமாவினரை உற்சாகப்படுத்துவதற்கு பதில் நொந்து போக வைத்துவிட்டது. அதிலும் டாக்டர் ராமதாஸ் பேசிய பேச்சு, பாமகவினரை குறிப்பாக அன்புமணி ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்துவிட்டது. “கட்சிக்குள்ளே கூட்டணி, கூட்டணி குறித்து தனியே பேச்சுவார்த்தை, நாட்கள் எண்ணப்படுகிறது, கட்சியிலேயே இருக்க முடியாது” என்றெல்லாம் ஏக வசனத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதே அன்புமணி ராமதாஸைத்தான் என குமுறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

இதனால் வெறுத்துப் போய் கிடக்கும் அன்புமணி ஆதரவாளர்கள்,

ஓய்வெடுங்கள் டாக்டர் அய்யா… ஓய்வறியா உழைப்பாளியாமே? அய்யா உங்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை, இந்த கட்சி கோட்டைக்கு போகாததற்கு காரணமே அந்த ஓய்வறியா உழைப்பாளி தான். டாக்டர் அய்யா இன்னும் பேசமாட்டாரா என நினைத்த காலம் போய் எப்போடா பேச்சை நிறுத்துவார் என ஆனது நேற்று”

பேசுபவர் நம் மரியாதைக்குரிய மருத்துவர் அய்யா அவர்கள்! கேட்டுதானே ஆகணும். ஏன்டா இத்தனை கஷ்டப்பட்டு, ஊர்காரனுங்களையெல்லாம் திரட்டிக்கிட்டு வந்தோம்னு ஆயிடுச்சு. ஒற்றை வார்த்தைகூட நம் மருத்துவர் சின்னய்யா பற்றி பெருமையாக சொல்லவில்லை. எவன்டா அந்த ஓய்வறியா உழைப்பாளி…? ன்னு அப்பவே கத்தணும் போல இருந்துச்சி என் மனசறிந்து சொல்றேன். கொண்டாட்டமாக மாநாட்டுக்கு வந்தவன்.., கோவத்தை அடக்கிக்கிட்டு ஊருக்கு வந்தேன். ஏதோ தப்பு நடக்குது. இது இனியும் தொடரக்கூடாது.”

என்றெல்லாம் குமுறி குமுறி பதிவிட்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share