புலிகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்!

Published On:

| By admin

உடுமலை அருகே வனச்சரகப் பகுதிகளில் கோடைக்கால புலிகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது.
அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக கோடைக்கால கணக்கெடுப்பு பயிற்சியானது, தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பின் வழிகாட்டுதல்படி, ஆனைமலை புலிகள் காப்பக வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநரான (கோவை) எஸ்.ராமசுப்பிரமணியன் உத்தரவின்பேரில், துணை இயக்குநரும், மாவட்ட வன அலுவலருமான (உடுமலை) எஸ்.என்.தேஜஸ்வி அறிவுரைப்படி உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநரான (உடுமலை) க.கணேஷ்ராம் மேற்பார்வையில் கோடைக்கால புலிகள், இதர மாமிச மற்றும் தாவர உண்ணிகளின் கணக்கெடுப்பு பணிகள் நேற்று (மே 25) தொடங்கி, வருகிற 31ஆம் தேதி வரை நடக்க உள்ளது.
திருப்பூர் வனக்கோட்டத்தில் உடுமலை, அமராவதி, கொழுமம் மற்றும் வந்தரவு ஆகிய வனச்சரகங்களில் உள்ள 34 சுற்றுகளில் இந்தப் பணிகள் நடைபெறுகிறது. இதற்காக இந்த சுற்றுகளில் 53 நேர்கோட்டு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியில் வனப்பணியாளர்கள் கலந்துகொண்டு அட்டவணைப்படி நேற்று (மே 25) முதல் 27ஆம்தேதி வரை மூன்று நாட்கள், சுற்றுகளில் உள்ள பகுதிகளில் காணப்படும் மாமிச உண்ணிகள் மற்றும் மிகப் பெரிய தாவர உண்ணிகளின் தடய கணக்கெடுப்பையும், அடுத்த மூன்று நாட்கள் (மே 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை) நேர்கோட்டு பாதையில் நடந்து சென்று நேரடியாக காணப்படும் இரை விலங்குகளையும், அதே பாதையில் திரும்பி வரும்போது ஒவ்வொரு 400 மீட்டர் இடைவெளியில் உள்ள பிளாட்களில் தாவர வகைகளையும் கணக்கெடுக்க உள்ளனர். 31ஆம் தேதி கணக்கெடுக்கப்பட்ட வன உயிரினங்களின் தரவுகளின் விவரங்களை சரிபார்த்து சமர்ப்பிக்கும் பணி நடக்கிறது.

**ராஜ்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share