தக் லைஃப் திரைப்பட விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன், மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்ட கர்நாடகா உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல இந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்யாத கர்நாடகா அரசையும் உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. SC Slams Karnataka HC Over Suggestion Asking Kamal Haasan to Apologize
தக் லைஃப் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், தமிழ் மொழியில் இருந்து கன்னட மொழி பிறந்தது என பேசினார் கமல்ஹாசன். இது கன்னட மொழியை சிறுமைப்படுத்துகிறது என கூறி கர்நாடகாவில் போராட்டங்கள் வெடித்தன. கர்நாடகா பிலிம் சேம்பரும் தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடமாட்டோம் என அறிவித்தது.
இதனையடுத்து கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படத்தை வெளியிட உரிய பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா, கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என காட்டமாக வலியுறுத்தி இருந்தார்.
இதனிடையே கர்நாடகாவில் தக் லைஃப் விவகாரத்தில் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்துவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மகேஸ் ரெட்டி என்பவர் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கர்நாடகா மாநில அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் உஜ்ஜல் புயன், மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.
உடனே பதில் மனு தாக்கல் செய்யனும்
இன்றைய விசாரணையின் போது, ” கர்நாடகா மாநில அரசு எப்போது பதில் மனுத் தாக்கல் செய்யப் போகிறது? குண்டர்களையும் சட்டத்தை கையில் எடுக்கும் கும்பல்களையும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க முடியாது. சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய வேண்டும். கர்நாடகா அரசு உடனடியாக பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த பதில் மனுவை நாளையே கர்நாடகா அரசு தாக்கல் செய்தாக வேண்டும்” என்றனர் நீதிபதிகள்.
இதற்கு கர்நாடகா அரசு தரப்பில், தக் லைஃ படத்தின் தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கனும்
இதை நிராகரித்த நீதிபதிகள், தக் லைஃப் படத் தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தை அணுகினால் உங்களுக்கு என்ன? உங்களின் இந்த போக்கை அனுமதிக்க முடியாது. சட்டத்தின் படி எந்த ஒரு நபரும் தமது திரைப்படத்தை வெளியிடுவதற்கு அனுமதிக்க வேண்டும். திரையரங்குகளை எரிப்போம் என்றெல்லாம் அச்சுறுத்தல் விடுக்கக் கூடாது. பொதுமக்கள் திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என நாங்கள் சொல்லவில்லை; ஆனால் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்றும் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டனர்.
அப்போதும் குறுக்கிட்ட கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த பிரச்சனை முடியும் வரை திரைப்படத்தை வெளியிடப் போவது இல்லை என தயாரிப்பாளர் அறிக்கையில் கூறியுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதிகள், அதனால் என்ன இருக்கிறது? ஒருவருக்கு மாற்றுக் கருத்து இருக்கிறது என்பதாலேயே ஒரு படத்தை தடை செய்துவிட முடியாது. தணிக்கை குழுவின் சான்றிதழ் பெற்ற எந்த ஒரு திரைப்படத்தையும் வெளியிட அனுமதிக்கத்தான் வேண்டும். நமது அமைப்பில் சில தவறுகள் இருக்கின்றன. ஒருவர் அறிக்கை வெளியிட்டாலே அதனை உண்மை என மக்கள் நம்புகின்றனர். கமல்ஹாசன் சொன்னதில் என்ன தவறு? என்ன முட்டாள்தனமாக சொல்லிவிட்டார்? என விவாதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.
கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் வேலை அல்ல
மேலும் நீதிபதி உஜ்ஜல் புயன் கூறுகையில், கமல்ஹாசனை மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுவது எல்லாம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் வேலை அல்ல எனவும் கடும் கண்டனம் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்துக்கு மாற்றம்
பின்னர், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தக் லைஃப் தொடர்பான ரிட் மனுவை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றுகிறோம். கர்நாடகா அரசு பதில் மனுவை நாளை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின் விசாரணை வரும் வியாழக்கிழமை நடைபெறும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.