தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்காக சென்னையில் சினிமா வர்த்தக சபை, கில்டு என இரண்டு அகில இந்திய அமைப்புகளும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என நான்கு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
எல்லா தயாரிப்பாளர்களும் உறுப்பினர்களாக இருப்பது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மட்டுமே. அதனால்தான் தொழிலாளர்கள் அங்கம் வகிக்கும் பெப்சி அமைப்புடன் ஊதிய உயர்வு, ஒழுங்குபடுத்துவதற்கான பேச்சுவார்த்தையை நடத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் அதிகாரமிக்க அமைப்பாக இருந்து வருகிறது.
அதே போன்று சினிமா தயாரிப்பு, கால்ஷீட் பஞ்சாயத்து, சம்பள பிரச்சினை புகார் கொடுக்க கூடிய அமைப்பாகவும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இன்றளவும் இருந்து வருகிறது.
இந்த சங்கத்திற்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தங்களை தொழில் ரீதியாக வளப்படுத்திக் கொள்ளவே பதவியை பயன்படுத்திக் கொண்டார்கள். உறுப்பினர்கள் நலனுக்காக, சினிமா தயாரிப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல எந்த முயற்சியும் இதுவரை எடுத்ததில்லை. அதனால்தான் தயாரிப்பாளர்களுக்கு என தனி சங்கங்கள் புதிது புதிதாக இங்கு தொடங்கப்படுகின்றன என்கிற குற்றசாட்டுகள் இருந்து வருகின்றன.
சக்திமிக்க தயாரிப்பாளர்கள் சங்க தலைவருக்கே போக்கு காட்டும் வேலையை நடிகர்கள் சிலம்பரசன், தனுஷ் இருவரும் செய்து வருவதாக தயாரிப்பாளர்கள் மத்தியில் கூறப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், அதனை ஒரு பொருட்டாக சிலம்பரசன், தனுஷ் இருவரும் மதிக்கவில்லை.
அவர்களை தொழில்ரீதியாக கட்டுப்படுத்த தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் பல முறை வலியுறுத்தியும் அவை அனைத்தையும் தனுஷ், சிலம்பரசன் இருவரும் முறியடித்து வருகின்றனர்.
இதற்கு பக்கபலமாக தனுஷ் ஆளும் திமுக தலைமையின் குடும்ப உறவினர் நிறுவனமான சன் பிக்சர்ஸ்சை பயன்படுத்துகின்றார். சிலம்பரசன் தமிழ்நாடு அரசின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் நிறுவனம் பங்குதாரராக இருக்கும்” தக்லைப்” திரைப்படத்திற்கு கால்ஷீட் வழங்கி தயாரிப்பாளர்கள் சங்க முடிவை நீர்த்து போக செய்கிறார்.
தயாரிப்பாளர்கள் சங்க தலைவருக்கே இந்த நிலைமை என்றால் சாமான்ய தயாரிப்பாளர்களுக்கும் – நடிகர்களுக்கும் பிரச்சினையை சங்க தலைவரும், நிர்வாக குழுவும் எப்படி தீர்த்து வைப்பார்கள் என்கிற குமுறல் தயாரிப்பாளர்களிடம் அதிகரித்து வருகிறது.
இதனால் தற்போதைய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி ராமசாமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர தற்போதைய நிர்வாக குழுவில் இருக்கும் பெரும்பான்மையான செயற்குழு உறுப்பினர்கள் ஏற்பாடு செய்து வருவதாகவும், அதற்கு பெரும்பான்மையான தயாரிப்பாளர்கள் மறைமுகமாக உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது.
என்னதான் பிரச்சினை என்று தயாரிப்பாளர்கள் மத்தியில் விசாரித்த போது,
நடிகர் தனுஷ் தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் கொடுப்பதால் இங்குள்ள தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக நமது சங்க தலைவர் முரளி ராமசாமி தயாரிப்பில் நடித்து வந்த படத்தை முடிக்க கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார்.
தற்போது இளையராஜா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்திற்கான விளம்பரத்தை தினத்தந்தி நாளிதழில் முழுப்பக்க அளவில் கொடுத்திருக்கிறார். எனவே தனுஷ் நடிக்கும் படங்களுக்கு பணி ஒத்துழையாமை செய்யுமாறு பெப்சி தொழிலாளர்கள் அமைப்புக்கு கடிதம் அனுப்புவது என தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தை பரணில் தூக்கிப் போட்ட பெப்சி அமைப்பினர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து வரும் படப்பிடிப்பில் ஒத்துழைப்பு கொடுத்தனர். அதே போன்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்க்கு ஒப்புக் கொண்ட அடிப்படையில் கால்ஷீட் வழங்காமல் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க சிலம்பரசன் கால்ஷீட் கொடுத்துள்ளார்.
எனவே சிலம்பரசன் நடிக்கும் படத்திற்கும் தொழில் ஒத்துழையாமை செய்ய எடுக்கப்பட்ட செயற்குழு முடிவை பெப்சி தொழிலாளர் அமைப்புக்கு அனுப்பப்பட்டது. ஆனால் தென்னிந்திய தொழிலாளர்கள் சம்மேளனம் தனுஷ், சிலம்பரசன் இருவருமே ஆளுங்கட்சி தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களில் நடித்து வருகின்றனர். அந்தப்படங்களின் படப்பிடிப்புக்கு தொழில் ஒத்துழையாமை செய்யவில்லை. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தயங்குவதுடன், பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழனாக இருக்க முயற்சிக்கின்றார். திமுக தலைமையிடமும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடமும் நட்பாக இருந்து வருகிறார்.
அதே நேரத்தில் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக இருப்பதாக சங்க நடவடிக்கைகளில் நடிக்கின்றார். ஐசரி கணேஷ் போன்ற பெரிய தயாரிப்பாளர்களுக்கே நியாயம் பெற்று தர முடியாத சங்க தலைவரை நம்பி பயனில்லை. எனவே தலைவர் பதவியில் இருந்து முரளி ராமசாமியை தகுதி நீக்கம் செய்ய நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் முயற்சியை சங்கத்தின் தற்போதைய கெளரவ செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் செய்ய தொடங்கியுள்ளனர் என்றனர்.
மேலும் முரளிராமசாமி தனக்கு இருக்கும் கடன் பிரச்சினை நெருக்கடியில் இருந்து தற்காத்து கொள்ளவும், முன்னணி நடிகர்களிடம் கால்ஷீட் வாங்குவதற்கும் ஆளும் அரசாங்கத்தின் கட்சி தலைமைக்கும், அக்கட்சி ஆதரவு தயாரிப்பு நிறுவனத்திற்கும் அடி பணிந்து போகிறார்.
கெளரவ செயலாளர் ராதாகிருஷ்ணன் திமுக தலைமை எச்சரித்தும், உள்ளாட்சி தேர்தலில் நெல்லிக் குப்பம் நகரசபை தலைவர் தேர்தலில் திமுக தலைமை முடிவுக்கு எதிராக தன் மனைவியை போட்டியிட செய்து வெற்றி பெற்றதுடன், கோபத்தில் இருந்த திமுக தலைமைக்குள் நிலவரத்தை புரிய வைத்து கூல் செய்தவர்.
அதனால் அவரை முன்நிறுத்தி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் ஆளுங்கட்சி தலைமையின் ஆதரவும் கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது எனக் கூறும் தயாரிப்பாளர்கள் திரைமறைவில் நடைபெற்று வரும் இந்த முயற்சிக்கு மத்தியில் இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது என்கின்றனர்.
அம்பலவாணன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிக வருவாய் ஈட்டிய ரயில் நிலையங்கள்: சென்னை சென்ட்ரல் முதலிடம்!
“பட்டாசுகள் வாங்கி வைத்திருந்தோம்”: ரிங்கு சிங்கின் தந்தை உருக்கம்!
ஹெல்த் டிப்ஸ்: வெயிலுக்கு வெல்கம் சொல்வோம்… ஏன், எதற்கு?
பியூட்டி டிப்ஸ்: ‘நான் ஏன் அழகாக இல்லை?’ என்று நினைப்பவரா நீங்கள்?