திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 7) மரியாதை செலுத்தினார்.
கடந்த 2021ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக மே 7ஆம் தேதி ஆட்சி பொறுப்பேற்றது. அதன்படி திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வர், “இது சொல்லாட்சி அல்ல, செயலாட்சி!
மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது!
நம்பிக்கையோடு முன்செல்கிறேன்… பெருமையோடு சொல்கிறேன்….
“தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.
தொடர்ந்து, திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…