சென்னையில் ஒரே நாளில் 6 செயின் பறிப்பு சம்பவம் நடந்தது போல கடலூரில் ஒரே நாளில் மூன்று இடங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. Three robberry incident in Cuddalore
முதல் சம்பவம்
கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட எம்.புதூரை சேர்ந்த காளிமுத்து (45), பக்கத்து ஊரான பாதிரிகுப்பத்தில் நடந்த தெருக்கூத்தை பார்த்துவிட்டு இன்று (ஏப்ரல் 2) அதிகாலை சுமார் 2.30 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது எம்.புதூர் செல்லும் வழியில் வழிமறித்த வழிப்பறி கும்பல் அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டு பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது.
சம்பவம் நடந்த அரை மணி நேரத்தில் இதுகுறித்து திருப்பாதிரிபுலியூர் காவல்நிலையத்துக்கு தெரியவந்திருக்கிறது.

இதையடுத்து எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் விசாரணையில் இறங்கினர். கடலூர் முழுவதும் அலர்ட் செய்யப்பட்டது. அனைத்து சாலைகளிலும் கண்காணிப்பில் இறங்கினர்.
இரண்டாவது சம்பவம்
இந்தசூழலில் அதிகாலை 3.30 மணியளவில், கடலூர் டூ சிதம்பரம் சாலை பெரியப்பட்டு சர்வீஸ் சாலையில், சீர்காழியைச் சேர்ந்த பிரபு என்ற லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வழிப்பறி கும்பல் அவரையும் கடுமையாக தாக்கிவிட்டு 3000 ரூபாய் பணத்தையும், செல்போனையும் பறித்துக்கொண்டு தப்பிவிட்டது.
மூன்றாவது சம்பவம்
பெரியப்பட்டு சம்பவத்தை தொடர்ந்து அங்கிருந்து 400மீட்டர் தொலைவில் அதே சீர்காழியைச் சேர்ந்த மணிமாறன் லாரியை நிறுத்திவிட்டு சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தார். அங்கும் வந்த வழிப்பறி கும்பல் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் மணிமாறன் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் தலையில் பலமாக தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர்.
தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லாரி ஓட்டுநர்கள், இரவு நேரங்களில் சாலைகளில் நடக்கும் வழிப்பறி சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இப்படி அடுத்தடுத்து நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து, போலீசார் சாலைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடினர்.
இந்தநிலையில் சிதம்பரம் – கடலூர் சாலையில் இருந்து ஒரு கிராமத்துக்கு செல்லும் குறுக்கு சாலையில் வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்.

அதில், கொள்ளையன் ஒருவன் போலீசை தாக்கிவிட்டு தப்பித்துவிட்டதாகவும், அவன் மீது திருட்டு, வழிப்பறி, கொலைமுயற்சி என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகவும், அதனால் அவனை துப்பாக்கி முனையில் தேடி வருவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
சென்னையில் கடந்த மார்ச் 25ஆம் தேதி இரானி கொள்ளையர்கள் ஒரே நாளில் 6 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஜாபர் குலாம் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. Three robberry incident in Cuddalore