தமிழகத்துக்கு மும்மொழிக் கொள்கை என்பது தேவையற்ற ஒன்றாகும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். three-language policy
தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் கல்வி நிதியை விடுவிப்போம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது மறைமுக இந்தித் திணிப்பு என்று கூறி தமிழக அரசியல் கட்சிகள் கொதித்து எழுந்துள்ளன.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்கள் நலன் கருதி கல்வி நிதியை விடுவிக்க கோரிக்கை விடுத்தார். ஆனால், கல்வி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என பதில் கடிதம் எழுதிய தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழக அரசுக்கு ரூ.5000 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (பிப்ரவரி 21) வெளியிட்ட அறிக்கையில், இருமொழிக் கொள்கைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், மும்மொழிக் கொள்கையை வற்புறுத்தித் திணிக்க முயலும் மத்திய அரசின் முயற்சியால், தமிழக மக்களிடையே அச்சமும் குழப்பமும் ஏற்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்காவிட்டால் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை தமிழகம் இழக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளதாக வரும் செய்திகள் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துவதுடன், மத்திய அரசின் மீது மிகுந்த கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்துக்கு மும்மொழிக் கொள்கை என்பது தேவையற்ற ஒன்றாகும் என்ற இபிஎஸ், இந்த நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக உள்ளது என்றும், மத்திய அரசு இந்த உண்மை நிலையை உணர்ந்து தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை திணிப்பைக் கைவிட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து, தேசிய கல்விக் கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று வற்புறுத்தி, நிதியை விடுவிக்க மறுப்பது தமிழகத்தில் இருக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் மத்திய அரசு இழைக்கும் துரோகமாகவே கருதப்படும் என்றும் கூறினார்.
மேலும், “மத்திய அரசு இதுபோன்ற தன்னிச்சையான போக்கை, மக்கள் நலன் கருதி மாற்றிக்கொண்டு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் ஷரத்துக்கள் பற்றி விரிவான கலந்தாலோசனை மேற்கொண்டு ஒரு சுமூக முடிவை எடுக்க வேண்டும். அதேசமயம், கல்வித் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் எஸ்எஸ்ஏ போன்ற திட்டங்களின் நிதியை எந்தவிதமான நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும்.
திமுக அரசு பொதுவெளியில் இதுபோன்ற பயனற்ற விவாதங்கள் செய்வதைத் தவிர்த்து, ஆக்கபூர்வமாக மத்திய அரசை வலியுறுத்தி கலந்தாலோசனை செய்து, மக்கள் நலன் சார்ந்த நல்ல முடிவை எடுக்க வேண்டும்” என்றும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். three-language policy