புதுடெல்லி/சென்னை:
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி வரை மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்த ‘மும்மொழிக் கொள்கை’ விவகாரம், இப்போது உயர்கல்விக்குள்ளும் நுழைந்துவிட்டது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்று மொழிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (UGC) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது, தமிழக அரசியல் களத்தில் மீண்டும் ஒரு புயலைக் கிளப்பியிருக்கிறது.
தேசிய கல்விக் கொள்கையின் (NEP 2020) அடிப்படையில், உயர்கல்வி நிறுவனங்களில் பன்மொழிப் பயன்பாட்டை (Multilingualism) ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை யுஜிசி எடுத்துள்ளது.
யுஜிசி சொல்வது என்ன?
யுஜிசி வெளியிட்டுள்ள அந்த வழிகாட்டுதலில், “மாணவர்களுக்குச் சிறுவயது முதலே பன்மொழித் திறன் இருப்பது அவசியம். எனவே, இளங்கலை பட்டப்படிப்புகளில் (Undergraduate Courses) பிராந்திய மொழிகளோடு சேர்த்து, இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளைக் கற்பிக்கும் முறையை உருவாக்க வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பாடப்புத்தகங்களைத் தாய்மொழியில் மொழிபெயர்ப்பது, தேர்வுகளைத் தாய்மொழியில் எழுத அனுமதிப்பது போன்ற வரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும், அந்த ‘மூன்றாவது மொழி’ விவகாரம் தான் இப்போது இடிக்கும் விஷயமாக மாறியுள்ளது.
தமிழகத்தின் நிலைப்பாடு என்ன?
பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்தே ‘தமிழ் மற்றும் ஆங்கிலம்’ என்ற இருமொழிக் கொள்கையில் தமிழ்நாடு அரசு உறுதியாக நிற்கிறது. “மூன்றாவது மொழி என்ற பெயரில் இந்தி அல்லது சமஸ்கிருதம் மறைமுகமாகத் திணிக்கப்படுமோ?” என்ற சந்தேகம் தமிழகக் கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் நீண்ட காலமாகவே உள்ளது.
ஏற்கனவே பள்ளிக்கல்வித் துறையில், மத்திய அரசின் பிஎம்-ஸ்ரீ (PM-SHRI) பள்ளிகள் திட்டத்தை ஏற்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்றால் மட்டுமே நிதி தர முடியும் என்று மத்திய அரசு பிடிவாதம் பிடித்து வரும் நிலையில், இப்போது கல்லூரிகளுக்கும் இந்த ‘செக்’ வைக்கப்பட்டிருப்பது விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
நடைமுறைச் சிக்கல்கள்:
“தற்போது கலை, அறிவியல் கல்லூரிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழித்தாள்கள் (Part-I & Part-II) மட்டுமே உள்ளன. திடீரென மூன்றாவது மொழியைக் கொண்டுவந்தால், அதற்கான பேராசிரியர்களை எங்கே தேடுவது? மாணவர்களின் சுமை அதிகரிக்காதா?” என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழக முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்; அதில் எந்த மாற்றமும் இல்லை” என்று ஏற்கனவே பலமுறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், யுஜிசி-யின் இந்த ‘பரிந்துரை’ தமிழகக் கல்லூரிகளில் எடுபடுமா அல்லது மாநில சுயாட்சி உரிமையைக் காட்டி நிராகரிக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மீண்டும் ஒரு மொழிப்போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன!
