ஹிலால் அகமது
முஸ்லிம்களை முஸ்லிம்கள் மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த வேண்டுமா? உணர்ச்சியைத் தூண்டக்கூடிய இந்தக் கேள்வி, சட்டமன்ற அமைப்புகளில் முஸ்லிம் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைந்துவருவது குறித்து அதிரடியான முறையில் வெளியாகும் பொதுமைப்படுத்தப்பட்ட கருத்துக்களால் கவனம் பெறாமல் போகிறது. Three Facets of Muslim Representation in India
மைய நீரோட்டத்தைச் சேர்ந்த ஊடகங்களில் வெளியாகும் எழுத்துக்கள் இந்தியாவில் முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக ஓரங்கட்டப்படுவதை முன்னிலைப்படுத்த முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் முழுமையாகக் கவனம் செலுத்துகின்றன. மறுபுறம், கல்வியாளர்களின் ஆய்வுகள், முஸ்லிம் பிரதிநிதித்துவக் குறைபாட்டை நிரூபிக்கப் புள்ளிவிவரத் தரவுகளைப் பெரிதும் நம்பியுள்ளன.
இந்த வாதங்கள் “நேரடியான பிரதிநிதித்துவம்” பற்றிய காலாவதியான புரிதலை உறுதிப்படுத்துகின்றன. சட்டமன்ற அமைப்புகள் நாட்டின் சமூக-மத அடிப்படையிலான பன்முகத்தன்மையைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்; அப்போதுதான் அவை சமுதாயத்தின் “கண்ணாடி பிம்ப”மாக இருக்கும் என்பதே நேரடியான பிரதிநிதித்துவம் என்னும் கருத்தாகும்.
நேரடியான பிரதிநிதித்துவம் தொடர்பான வாதங்கள், பரந்த அளவில், மரபார்ந்த ஆய்வுகளிலிருந்தே உருவாகின்றன. ஒருமித்த தன்மை கொண்ட முஸ்லிம் சமூகத்தின் கூட்டு நலன்களைச் சட்டமன்றங்களில் உள்ள முஸ்லிம் பிரதிநிதிகளால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்று இவை கூறுகின்றன. எளிமைப்படுத்தப்பட்ட இந்தக் கருத்தைத் தாண்டிச் செல்ல நாம் மூன்று அடிப்படையான பிரச்சினைகளை எழுப்ப வேண்டும்: முஸ்லிம்களை ஒரு அரசியல் சமூகமாக நிறுவுதல்; கூட்டு முஸ்லிம் நலன்களின் தொகுப்பு குறித்த கற்பனை; இந்த நலன்களைப் பாதுகாப்பதில் முஸ்லிம் தலைவர்களிடம் (அல்லது முறைசார்ந்த பொருளில் சட்டமன்றங்களிடம்) எதிர்பார்க்கப்படும் பங்கு.
சமூகம் Three Facets of Muslim Representation in India
“சமகாலத்தின் சுருக்கமான வரலாறு: புதிய இந்தியாவில் முஸ்லிம்கள்” (A Brief History of the Present: Muslims in New India பெங்குயின்-ரேண்டம் ஹவுஸ், 2024) என்னும் எனது சமீபத்திய நூலில், “பொருண்மை நிலையிலான முஸ்லிம்தன்மை”, (Substantive Muslimness) “முஸ்லிம்தன்மை குறித்த சொல்லாடல்” (Discourse of Muslimness) ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு குறித்து அலசியிருக்கிறேன். “பொருண்மை நிலையிலான முஸ்லிம்தன்மை” என்னும் சொல் உள்ளூரிலும் பிராந்திய மட்டத்திலும் முஸ்லிம்களின் அன்றாட அனுபவங்களைச் சித்தரிக்க முயல்கிறது. சாதி, மொழி, பொருளாதார நிலை, பிரிவு, பிராந்தியம் போன்ற காரணிகள் ஒரு குறிப்பிட்ட சமூக-அரசியல் சூழலில் முஸ்லிம் அடையாளத்தையும் அச்சமூகத்திற்கான கூட்டு சுய உணர்வுகளையும் தீர்மானிக்கும் காரணிகளாகின்றன.
“முஸ்லிம்தன்மை குறித்த சொல்லாடல்” என்பது முஸ்லிம் அடையாளத்தின் மற்றொரு வெளிப்பாடாகும். இது முஸ்லிம்தன்மையின் இயல்புக்கு இணையான முக்கியத்துவம் கொண்டது. இந்தியாவில் கூட்டு முஸ்லிம் இருப்பு உணரப்படும், விளக்கப்படும், விவாதிக்கப்படும் வழிகளுடன் தொடர்புடைது. முஸ்லிம்களை முற்றிலும் மத அடிப்படையில் “மத நம்பிக்கை கொண்ட சமூகமாக” நடத்துதல், சட்ட-அரசியலமைப்பு சார்ந்த சொல்லாடல்களில் அவர்களின் மதத் தனித்துவத்தைச் “சிறுபான்மையினர்” என்பதாகக் குறிப்பிடுதல், மக்கள் தொகை கணக்கெடுப்பு சார்ந்த சொற்களில் அவர்களின் மக்கள்தொகையை அளவிடுதல், இடைக்கால “இஸ்லாமிய ஆட்சியை” முஸ்லிம் வரலாறாகச் சித்தரித்தல், “உலகளாவிய ஜிஹாத்”, தீவிரவாதம் ஆகியவை குறித்த ஊடக விவாதங்கள் ஆகியவை முஸ்லிம்களின் அடையாளம் குறித்த வலுவான உரையாடலை உருவாக்குகின்றன. இஸ்லாமியர்கள் குறித்த இந்தப் பரந்துபட்ட சித்தரிப்புகளுடன் முஸ்லிம் தனிநபர்கள் இணைக்கப்பட்டுப் பெரிய விளக்கங்கள் உருவாகின்றன. முஸ்லிம் அடையாளம் தொடர்பான இந்த ஆயத்த வார்ப்புருக்கள் அடிமட்டத்தில் உள்ள முஸ்லிம் சுய உணர்வுகளையும் பாதிக்கின்றன.
பொருண்மை நிலையிலான முஸ்லிம்தன்மையையும் முஸ்லிம்தன்மை குறித்த சொல்லாடல்களையும் இணைக்கும் முக்கியமான தொடர்புக் கண்ணி இந்திய முஸ்லிம் அடையாளத்தின் உண்மையான பிரதிநிதித்துவங்களைத் தீர்மானிக்கிறது. இந்த அர்த்தத்தில், முஸ்லிம் அடையாள உருவாக்கம் ஒரு ஊசல்போலச் செயல்படுகிறது. முஸ்லிம்தன்மை குறித்த சொல்லாடல்களும் இந்தியாவில் முஸ்லிம்கள் ஒரு சமூகமாக இருக்கிறார்கள் என்னும் கருத்தும் இந்த ஊசலாட்டத்தின் ஒரு முனையாகும். முஸ்லிம்தன்மையின் இயல்பை உருவாக்கும் கலாச்சார-உள்ளூர்த்தன்மை சார்ந்த காரணிகள் இதன் மறுமுனையில் உள்ளன.
நலன்கள் Three Facets of Muslim Representation in India

2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு சிஎஸ்டிஎஸ்-லோக்நீதி என்னும் நிறுவனம் கருத்துக்கணிப்பு (CSDS-Lokniti Pre-poll Survey 2024) நடத்தியது. தேசியத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு 19 இந்திய மாநிலங்களில் 10,019 வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கணிப்பு இது. முஸ்லிம்களின் பொதுவான அபிலாஷைகளின் தன்மையை ஆராய்வதற்கு, “முஸ்லிம் பிரச்சினைகள்” என்ற கருத்தைப் புரிந்துகொள்வதற்கான பயனுள்ள பல பார்வைகளை வழங்குகிறது.
வளர்ந்துவரும் வேலையின்மை, வளர்ச்சியின்மை, விலைவாசி உயர்வு, அதிகரித்துவரும் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகியவற்றைத் தங்கள் முக்கியமான கவலைகளாக முஸ்லிம் சமூகங்கள் கூறுவதை இந்தக் கருத்துக்கணிப்பில் காண்கிறோம். தற்போதைய பொருளாதாரச் சூழலில் வேலை கிடைப்பது மிகவும் கடினமாகிவிட்டது என்று சுமார் 67 சதவீத முஸ்லிம்கள் கூறுகிறார்கள். 76 சதவீத முஸ்லிம்கள் பணவீக்கம் குறித்து அதிகமாகக் கவலை கொண்டுள்ளனர். இட ஒதுக்கீட்டிற்கு யார் தகுதியானவர்கள் என்பதை வரையறுக்கும் பட்டியல் சாதியினரின் பட்டியல்களில் தலித் முஸ்லிம்களைச் சேர்ப்பது குறித்த கருத்துக்கள் மற்றொரு முக்கியமான கண்டுபிடிப்பைக் குறிக்கின்றன. முஸ்லிம்கள், கிறிஸ்தவ மதங்களுக்குள் பாகுபாடு நிலவுவதற்கான சான்றுகள் இருந்தபோதிலும் அந்த மதங்களில் தீண்டாமை இல்லை என்ற கருத்தின் அடிப்படையில் இவ்விரு மதத்தவர்களும் பட்டியல் சாதியினரின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. முஸ்லிம் தலித்துகள் பட்டியல் சாதிப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று பெரும்பான்மையான முஸ்லிம்கள் (76 சதவீதம்) வலியுறுத்துகின்றனர்.
இந்தக் கண்டுபிடிப்புகள் அடையாளத்தை மையமாகக் கொண்ட “முஸ்லிம் பிரச்சினைகள்” என்ற வழக்கமான கருத்தாக்கத்திலிருந்து மிகவும் வேறுபட்டவை. மதச்சார்பின்மையின் அடிப்படையில் முஸ்லிம் சமூகங்கள் தங்கள் குடியுரிமை நிலையை மீட்டெடுப்பதற்கான முக்கியமான தூண்டுதலாக முஸ்லிம்தன்மையின் இயல்பு உள்ளது.
எனினும், இந்துத்துவம் ஆதிக்கம் செலுத்தும் சூழல் முஸ்லிம்களின் கூட்டு உணர்வுகளைப் பாதிக்காது என்று அர்த்தமல்ல. தற்போதைய சூழலில் முஸ்லிம் மத அடையாளமும் அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை சமூகமாக அதன் கூட்டு இருப்பும் பிரச்சினைக்குரியதாகக் கருதப்படுவதான அச்சம் அதிகரித்துவருகிறது. 2024இல் முஸ்லிம் தலைமை குறித்து சயின்சஸ்-பிஓ-சிஎஸ்டிஎஸ்-லோக்நீதி கருத்துக்கணிப்பு நடத்தினோம் (சமகால இந்தியாவில் அரசியல் செயல்முறைகள் பற்றிய முஸ்லிம்களின் கருத்துக்களை அறிவதற்காக 2024இல் தேர்தலுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட NES (National Election Studies) கருத்துக்கணிப்புடன் இணைந்து நடத்தப்பட்டது).
இதில் பங்குபெற்ற முஸ்லிம்களில் கணிசமான பகுதியினர் (43 சதவீதம்) முஸ்லிம்கள் அரசு அதிகாரிகளால் நியாயமற்ற முறையில் நடத்தப்படுவதாக உணர்வதாகத் தெரியவந்துள்ளது. “முஸ்லிம் பாதுகாப்பு” என்பதும் முக்கியமான கவலைகளில் ஒன்றாக வெளிப்பட்டுள்ளது. பதிலளித்த முஸ்லிம்களில் 54 சதவீதம் பேர் தாங்கள் மற்றவர்களைப் போலப் பாதுகாப்பாக இல்லை என்று கூறுகின்றனர் (தாங்கள் பாதுகாப்பாக இல்லை என்று கூறும் 11 சதவீதம் பேரும் இதில் அடக்கம்). அரசு அதிகாரிகள் முஸ்லிம்களை நியாயமற்ற முறையில் நடத்துவது மிகவும் சாதாரணமாகிவிட்டதாகத் தெரிகிறது. அதிகாரிகளிடம் புகாரளிக்கக்கூட முடியாத அளவுக்கு இது இயல்பாகிவிட்டதாக முஸ்லிம்கள் பலர் நினைக்கிறார்கள்.
முஸ்லிம் சமூகங்கள், இந்துத்துவத்தால் இயக்கப்படும் நிர்வாக விதிமுறைகளைப் புதிய யதார்த்தமாக ஏற்றுக்கொண்டுள்ளன என்று சொல்லலாம். இந்த காரணத்திற்காகவே அவர்கள் அரசு நிறுவனங்களுடன் பயனுள்ள தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதில் முனைப்பாக உள்ளனர். இந்தச் சுய பிரதிநிதித்துவம், சாத்தியமான மோதல்களையும் தகராறுகளையும் தவிர்ப்பதன் மூலம் பல்வேறு மட்டங்களில் அரசுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதற்கான தற்காப்பு உத்தி என்று ஒருவர் வாதிடலாம்.
இந்த இரண்டு ஆய்வுகளின் கண்டுபிடிப்புகளும் தங்களைப் பற்றி முஸ்லிம்கள் கொண்டிருக்கும் பார்வைகள், சமூக-பொருளாதாரக் காரணிகள் அல்லது பொருண்மை நிலையிலான முஸ்லிம்தன்மை என்று நாம் குறிப்பிடும் அம்சத்தின் மூலம் தீர்மானிக்கப்படுவதைக் காட்டுகின்றன. அதே நேரத்தில், முஸ்லிம்தன்மை எது என்பதைத் தீர்மானிக்கும் சொல்லாடலாக இந்துத்துவத்தின் ஆதிக்கம் இருப்பதும் இதைத் தங்கள் இருத்தலியல் சார்ந்த பிரச்சினையாகக் கருதி முஸ்லிம் சமூகங்கள் இதைத் தீவிரமாக எடுத்துக்கொள்வதையும் பார்க்க முடிகிறது. எனவே, சிக்கலானதும் பல அடுக்குகள் கொண்டதும் மாறிவருவதுமான அமைப்பைக் கொண்ட இந்திய முஸ்லிம் அடையாளத்துடன் தொடர்புபடுத்திப் பார்த்தால் மட்டுமே இந்தியாவில் முஸ்லிம்களின் “கூட்டு நலன்”களை அர்த்தமுள்ள வகையில் புரிந்துகொள்ள முடியும் என்பது தெளிவாகிறது.
தலைவர்கள் Three Facets of Muslim Representation in India
முஸ்லிம் சமூகங்கள் அரசியலை, குறிப்பாகத் தேர்தல் அரசியலைச் சமூக நடவடிக்கைக்கு விருப்பமான களமாகக் கருதுகிறார்கள். 51 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் தாங்கள் அளிக்கும் வாக்கு வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறார்கள் என்பதை எங்கள் தரவு காட்டுகிறது. 2024இல் முஸ்லிம்களின் வாக்குகளில் 62 சதவீதம் பதிவானது. முஸ்லிம்களில் கணிசமான பெரும்பான்மையினர், தனிப்பட்ட குடிமக்கள் என்ற முறையிலும், அச்சுறுத்தப்பட்ட சிறுபான்மையினர் என்ற முறையிலும் தங்கள் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான சாத்தியமான வழியாக ஜனநாயகச் செயல்முறைகளைக் கருதுகின்றனர் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
அரசியல் என்னும் அமைப்பின் மீது முஸ்லிம்கள் வைத்திருக்கும் இந்த நம்பிக்கை மூன்று கேள்விகளை எழுப்புகிறது. முதலாவதாக, வாக்களிக்கும் ஆர்வத்திற்கும் போட்டியிடும் வேட்பாளர்களின் சமூக-மத அடையாளத்திற்கும் இடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா? இரண்டாவதாக, ஆம் எனில், இந்தத் தொடர்பு மக்களவை, சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் என அனைத்து வகையான தேர்தல்களுக்கும் பொருத்தமானதா? மூன்றாவதாக, முஸ்லிம்கள் முஸ்லிம் தலைவர்களை நம்புகிறார்களா? ஆம் எனில், அவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன?
தொழில்முறை முஸ்லிம் அரசியல்வாதிகள், முஸ்லிம் உயரடுக்குப் பிரிவினர், முஸ்லிம் ஆர்வலர்கள்/செல்வாக்கு செலுத்துபவர்கள் என வெவ்வேறு சூழல்களில் மிகவும் குறிப்பான சில செயல்பாடுகளை மேற்கொள்ளும் மூன்று வகையான அரசியல் பிரிவினரை “முஸ்லிம் தலைவர்கள்” என்று குறிப்பிடலாம். தொழில்முறை முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசியல் கட்சிகளுக்கும் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் குறிப்பிட்ட முஸ்லிம் சமூகத்திற்கும் இடையே முக்கியமான இணைப்பாகச் செயல்படுகிறார்கள். உயரடுக்குகளைச் சேர்ந்த முஸ்லிம்கள், மத/கல்வி/சாதி/வர்க்க நிலையின் அடிப்படையில் தலைமை தாங்கும் மேம்பட்ட நிலையை அடைந்தவர்கள். இந்தப் பிரிவினர் அக்கறையுள்ள முஸ்லிம் சமூகத்தின் உள் அதிகாரக் கட்டமைப்பைப் பராமரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறார்கள். முஸ்லிம் செயல்பாட்டாளர்கள்/செல்வாக்கு செலுத்துபவர்கள் பொது விவாதங்களில் ஈடுபடுகிறார்கள்; பெரும்பாலும் ஊடகங்கள் முன்னெடுக்கும் விவாத அரங்குகளில் முஸ்லிம் பிரதிநிதிகளாகத் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொள்ள இவர்கள் முயல்கிறார்கள்.

50 சதவீத முஸ்லிம் வாக்காளர்கள் ஒரு தலைவரின் மதப் பின்னணி தாங்கள் வாக்களிப்பதற்கான முக்கியக் காரணியாக இல்லை என்று வலியுறுத்துகிறார்கள் என்பதை எங்கள் ஆய்வு காட்டுகிறது. இருப்பினும், 30 சதவீத முஸ்லிம்கள் இந்தக் கருத்தை ஏற்கவில்லை. தங்கள் சொந்த சமூகத்தைச் சேர்ந்த ஒரு தலைவரால் மட்டுமே தங்கள் நலன்களையும் கவலைகளையும் திறம்படப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்று இவர்கள் கூறுகிறார்கள். முஸ்லிம் கருத்துக்களில் காணப்படும் இந்த வேறுபாடுகள், பல ஆண்டுகளாகவே முஸ்லிம்கள் வாக்களிக்கும் முறைகள் மிகவும் பன்முகத்தன்மை கொண்டதாக இருப்பதைத் தெளிவாக அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. தொழில்முறை அரசியல் தலைவராக இருக்கும் ஒரு முஸ்லிமின் மத அடையாளம் என்பது சூழல் சார்ந்த அம்சம் என்பதே இதன் பொருள். குறிப்பாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை அணுகுவது முக்கியமான அம்சமாக இராத மக்களவை அல்லது மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் இந்த நிலை உள்ளது.
முஸ்லிம் சமூகங்கள் எப்போதும் முஸ்லிம் தலைமை தொடர்பாக நலன் சார்ந்த பயன்பாட்டு அணுகுமுறையைப் பின்பற்றுவதில்லை. முஸ்லிம்கள் தற்போதுள்ள முஸ்லிம் தலைவர்கள் குறித்து நேர்மறையான பார்வையைக் கொண்டுள்ளனர் என்பதை எங்கள் கருத்துக்கணிப்பு காட்டுகிறது. பதிலளித்தவர்களில் 64 சதவீதம் பேர் முஸ்லிம்களிடம் நேர்மையான, அர்ப்பணிப்புள்ள தலைவர்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். மறுபுறம், அதே அளவிலான முஸ்லிம்கள் (64 சதவீதம்) இந்தியாவில் மேலும் தெளிவான முஸ்லிம் தலைவர்கள் தேவை என்று நினைக்கிறார்கள். இந்த இரண்டு கூற்றுகளும் முரண்பாடாகத் தோன்றினாலும், அவை முஸ்லிம்களின் சிக்கலான எதிர்வினையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
தனிப்பட்ட ஒரு தலைவரின் நேர்மை என்பது அகவயமான பிரச்சினை. இந்துத்துவ ஆதிக்கம் நிலவும் சூழல் முஸ்லிம் தலைவர்களின் நிலையையும் அரசு அதிகாரிகளுடன் பேரம் பேசும் அவர்களுடைய ஆற்றலையும் பாதித்துள்ளது. மறுபுறம், பாஜக அல்லாத கட்சிகள் தொழில்முறை முஸ்லிம் அரசியல்வாதிகளைத் திரட்டுவதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. முஸ்லிம் வாக்குகளின் மீது தங்களுக்கு ஏகபோக உரிமை இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்; எனவே முஸ்லிம் அரசியல்வாதிகளின் அரசியல் சேவைகள் அவர்களுக்கு அவசியமில்லை. இந்தப் பின்னணியில், முஸ்லிம் தலைவர்கள் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்த விரும்பும் முஸ்லிம் சமூகத்துடன் தங்களது உயிரோட்டமுள்ள தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்வது இயல்பானது. முஸ்லிம் அரசியல்வாதிகள், செல்வாக்கு செலுத்துபவர்கள் பற்றி ஓரளவு நேர்மறையான கருத்து முஸ்லிம்களிடத்தில் இருப்பதைத் தீர்மானிப்பதில் இந்தச் செயல்முறைக்கு நிச்சயமாக ஒரு பங்கு உள்ளது.
இருப்பினும், தற்போதுள்ள முஸ்லிம் தலைமையின் வடிவங்கள் குறித்த பதற்றம் முஸ்லிம்களிடத்தில் அதிகரித்துவருவதையும் கவனிக்க முடிகிறது. முஸ்லிம்களுக்குச் சிறந்த, தெளிவான, நேர்மையான தலைவர்கள் தேவை என்று கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட முஸ்லிம்கள் உறுதியாகக் கூறுகிறார்கள். உறுதியான முஸ்லிம் தலைவர்களின் பற்றாக்குறை தங்களுடைய பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கிறது என்று 50 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் வாதிடுகிறார்கள். கருத்துக்கணிப்பின் இந்தக் கண்டுபிடிப்புகள் முஸ்லிம் சமூகங்கள் யதார்த்தமான அரசியலைப் பின்பற்றுவதைக் காட்டுகின்றன. அவர்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள் என்ற கூட்டு அடையாளத்தை விட்டுக்கொடுக்காமல் மதச்சார்பற்ற வாக்காளர்களாகத் தங்களை வரையறுத்துக்கொள்கிறார்கள்.
பிரதிநிதித்துவம் Three Facets of Muslim Representation in India
முஸ்லிம் அரசியல் அடையாளத்தின் இந்தப் பன்முகம் கொண்ட உருவாக்கம் பிரதிநிதித்துவத்தின் மூன்று தெளிவான அர்த்தங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. முதலாவதாக, முறை சார்ந்த சட்டமன்றப் பொருளில் முற்றிலும் மதச்சார்பற்ற சொற்களில் பிரதிநிதித்துவம் வரையறுக்கப்படுகிறது. ஒரு தலைவரின் மதம் தங்களின் முக்கியக் கவலையாக இல்லை என்று கருத்துக்கணிப்பில் பதிலளித்த முஸ்லிம்கள் வலியுறுத்துவதாகத் தெரிகிறது. அதாவது, பிரதிநிதித்துவம் என்னும் காரணத்திற்காகத் தொழில்முறை முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு முன்னுரிமை அளிக்க முஸ்லிம்களுக்கு விருப்பம் இல்லை.
சமூக-பொருளாதார அளவில் தங்களது பின்தங்கிய தன்மை, தாங்கள் ஓரங்கட்டப்படுதல் ஆகியவை குறித்த முஸ்லிம் கருத்துக்கள் மிகவும் மாறுபட்ட எதிர்பார்ப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இந்த விஷயத்தில் பிரதிநிதித்துவம் என்பது, “‘பஸ்மாந்தா’ முஸ்லிம்களை (Pasmanda Muslims) நிறுவன ரீதியாக உள்ளடக்குவதற்கான” வடிவமாகக் காணப்படுகிறது. (வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட முஸ்லிம் சாதியச் சமூகங்களைக் குறிக்க பாஸ்மந்தா என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது) வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட முஸ்லிம் சாதியச் சமூகங்களுக்கு இடஒதுக்கீடு தருவதற்காகப் பட்டியலினத்தவர்களின் பட்டியலில் அவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை, இந்தக் கண்ணோட்டத்தின் தெளிவான வெளிப்பாடாகும்.
இந்தியாவில் பாதுகாப்பான சூழலுக்கான முஸ்லிம்களின் தேடலும், தேசபக்தி தொடர்பான அவர்களுடைய மிகையான சுய உரிமைகோரலும், ஊடகங்கள் முன்னெடுக்கும் வலுவான முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரம் பொது இடங்களில் தங்கள் இருப்பை அபாயகரமானதாகச் சித்தரிப்பதை முஸ்லிம்கள் உணர்ந்திருப்பதைக் காட்டுகின்றன. இந்தியப் பண்பாட்டு, அரசியல் வாழ்வில் தங்களுக்கான இடத்தை மீட்டெடுக்கக் “கூட்டு இருப்பு” வடிவத்தில் பிரதிநிதித்துவத்தை முஸ்லிம்கள் நாடுகிறார்கள். இந்தச் செயல்திட்டத்தில் முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்களின் “பிரதிநிதிகளாகக்” கருதப்படுவதில்லை. மாறாக, முஸ்லிம்கள் பல்வேறு நிலைகளில் அரசியல் அமைப்பில் ஈடுபடுவதற்கு ஏற்பாடுசெய்யக்கூடியவர்களாக அவர்கள் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிலால் அகமது, புதுதில்லியில் உள்ள வளரும் சமூகங்களுக்கான ஆய்வு மையத்தில் (CSDS) இணைப் பேராசிரியராக உள்ளார். CASIவிற்கு 2024இல் வருகைதரு கல்வியாளராக வருகைபுரிந்தார்.
ஆசிரியர் குறிப்பு: இந்தக் கட்டுரை ஹென்றி லூஸ் அறக்கட்டளையால் நிதியளிக்கப்பட்ட “இந்தியாவில் முஸ்லிம்கள் (Muslims in India – MI))” திட்டத்தின் கீழ் எழுதப்பட்ட்து. இந்த ஆராய்ச்சியில் கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலோட் அளித்த அவரது அறிவுசார் ஆதரவிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழில்: அரவிந்தன்
நன்றி: பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் இணையதளம்
இந்தக் கட்டுரை அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் ‘இந்தியாவைப் பற்றிய மேம்பட்ட ஆய்வுக்கான மையம்’ என்னும் (Center for the Advanced Study of India, University of Pennsylvania) அமைப்பு நடத்தும் இணையதளத்தில் வெளியானது. Three Facets of Muslim Representation in India