ஜெ.ஜெயரஞ்சன்
தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜகவின் தத்துவார்த்த முன்னோடிகள் சொல்லக் கூடிய பாரதம் என்பது, இந்து வரலாற்றுடன் கூடியது. இந்து வரலாற்றுக்கு மட்டும்தான் அங்கு இடமிருக்கிறது. மற்றவர்கள் இருக்கலாம். ஆனால், அதற்கு அடிபணிந்து இருக்க வேண்டும் என்பதே அவர்களின் கொள்கை. இதற்கு மாறாக மாநில அடிப்படையில் வேறு அடையாளங்களை முன்னிறுத்தி அதன் நலன்களுக்காக போராடுவது 1960களில் தமிழகத்தின் திமுகவில் தொடங்கி, மற்ற மாநிலங்களிலும் அமைப்பாகப் பரவியது. தற்போது ஒற்றை அடையாளத்தை நோக்கி பயணிப்பதை பாஜக செய்துகொண்டுதான் இருக்கிறது. ஒற்றை அடையாளத்தை நோக்கிய பயணத்திற்காகத்தான் அதிகார குவிப்புகளை செய்துகொண்டிருக்கிறது.
மாநிலங்களின் அதிகாரங்கள் கைப்பற்றப்படுகிறது
வேறு அடையாளங்கள் வேண்டும் என்பதற்காகத்தான் மொழி வழி அடிப்படையிலான மாநிலங்களே தோன்றின. பாஜக அரசில் அதற்கெல்லாம் இடமில்லாதபோது, அவர்களால் எப்படி மாநில அரசை அங்கீகரிக்க முடியும்? மாநிலங்களிடம் இருக்கும் அதிகாரங்களை ஒருமைப்படுத்தி தன்வயப்படுத்தினால் மட்டுமே தங்களால் இலக்கை அடைய முடியும்.
தற்போது, அனைத்து இந்தியாவுக்குமான சந்தை ஒன்றை உருவாக்கலின் மூலம் சித்தாந்த ரீதியில் மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியிலும் கட்டமைப்பை ஏற்படுத்த முனைகிறது. ஆனால், இதற்குள் மாநிலங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை அனுமதிக்க முடியாது என்பதால், அதை முடிந்த அளவுக்கு நீர்க்கச் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அது மொழி, கல்வி, மருத்துவம், வரி விதிப்பு முறைகளில் இருக்கலாம். அதனுடைய வெளிப்பாடுதான் நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கையில் உள்ள அனைத்து கல்லூரி படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு, மும்மொழிக் கொள்கை, ஒரே வரிவிதிப்பு முறையான ஜிஎஸ்டி, ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை உள்ளிட்டவை.

வேளாண் சட்டங்கள் – ஒரு பார்வை
இப்போது புதிதாக 3 சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவை ஒன்றோடு ஒன்று தொடர்புடைய வேளாண் துறை சம்பந்தப்பட்ட சட்டங்கள். ஒரு சட்டம் அத்தியாவசிய பொருட்கள் (Essential commodities act) பற்றி பேசுகிறது. உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்தன. இந்தப் பட்டியலில் இருக்கும் பொருட்களின் விலையை அரசு கட்டுக்குள் வைத்திருக்கும். விவசாயி எந்த அளவு இருப்பு வைத்துக்கொள்ளலாம் என்பது குறித்தும் சட்டம் சொல்கிறது.
ஏனெனில், ஒரு பொருளை பதுக்கிவைத்து விலை அதிகமானவுடன் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் பார்ப்பது தொடர்ந்து நடந்து வந்தது. இதனை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்டதுதான் அத்தியாவசிய பொருட்கள் சட்டம். பலவிதமாக நடைபெறும் பொருட்களின் போக்குவரத்தையும், பலவிதமாக வாங்கிக் குவிக்கப்படுவதையும் தடுக்கும் அதிகாரத்தை அரசு கையில் வைத்திருந்தது. இப்போதைய சட்டம் மூலம் அதனையெல்லாம் நீக்கப்போகிறோம் என்று சொல்லிவிட்டது மத்திய அரசு.
மற்றொரு சட்டம், விவசாயிகள் பெரு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, பருவம் ஆரம்பிக்கும் முன்பு அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். அதன்பிறகு ஒரு குறிப்பிட்ட விளைப்பொருளை விளைவித்து ஒப்பந்தத்தில் போடப்பட்டுள்ள விலைக்கு அந்த நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். இது விவசாய ஒப்பந்தத்தை ஏதுவாக்கக்கூடிய சட்டம், இதன் வழியாக விவசாயிகள் விலை வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்று சொல்கிறது. அதாவது, தக்காளியைக் குறிப்பிட்ட விலைக்கு எடுத்துக்கொள்கிறேன் என ஒப்பந்தம் போட்டுவிட்டால், விலை வீழ்ந்தாலும் அதை அதே விலைக்கு வாங்கிக்கொள்வார்கள். இதன்மூலம் விலை வீழ்ந்ததனால் தக்காளியை சாலையில் கொட்டினார்கள் என்ற செய்திகளெல்லாம் வராது என்றும் கூறுகிறது.

மூன்றாவது சந்தைப்படுத்துதலுக்கான சட்டம். ஏற்கனவே, மண்டி எனப்படும் சந்தைகளில்தான் விளைப்பொருட்களை விற்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. ஒழுங்குப்படுத்தப்பட்ட விற்பனைக் கூடத்துக்கு விவசாயிகளும், வியாபாரிகளும் வருவார்கள். விவசாயிகள் தங்களின் விளைப்பொருட்களை அங்கு வைப்பார்கள். வியாபாரிகள் அதனைப் பார்த்துவிட்டு விலை என்ன என விசாரித்து, ஏலம் கோரி விலையை இறுதி செய்து பொருளை வாங்கிச் செல்லும் நடைமுறைதான் இருந்து வருகிறது.
புதிய சட்டம் சந்தையில்தான் விற்க வேண்டும் என்பதில்லை. நீங்கள் எங்கு வேண்டுமானாலும் விளைப்பொருட்களை விற்பனை செய்யலாம் என்று கூறுகிறது. அதாவது, விளைப்பொருளை இந்தியாவில் எங்கு இருக்கக் கூடிய வியாபாரிகளுக்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம் என்பதுதான் அந்த சட்டம்.
ஒன்று விளைவிப்பதற்கு உண்டான சட்டம், மற்றொன்று கொள்முதல் செய்வதற்கு, இன்னொன்று கொள்முதல் செய்ததை இருப்பு வைப்பதற்கு என மூன்று சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவையனைத்தும் சங்கிலித் தொடரினுடைய மூன்று வெவ்வேறு கன்னிகள். இவ்வாறு திருத்தப்பட்ட சட்டங்கள் அனைத்தும், விவசாயிகளுக்கு நன்மை பயக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
புதிய சட்டங்களால் நன்மையா, தீமையா?
அப்படியென்றால் இதற்கு முன்னர் என்ன சட்டங்கள் இருந்தன. விவசாயிகளுக்குப் பயனளிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டம் இருந்தது. வேளாண் விளைப்பொருட்கள் ஒரே சமயத்தில் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு வருவதால், சந்தையில் பொருட்கள் அதிகளவில் குவிந்து விலை வீழ்ச்சியை சந்திக்கும். இதனால் விவசாயிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்பதை தவிர்ப்பதை உருவாக்கப்பட்டதுதான் குறைந்தபட்ச ஆதரவு விலை.
உதாரணமாக, ‘நான் ஒரு மூட்டையை ரூ.500க்கு வாங்கிக்கொள்கிறேன்’ என அரசு கொள்முதல் நிலையத்தைத் திறந்துவைத்திருக்கும். சந்தையில் மூட்டைக்கு 500 ரூபாயை விட அதிகமாக தனியார் கொடுக்க முன்வந்தால் விவசாயி தனது விளைப்பொருளை அங்கு விற்பனை செய்யலாம். அதைவிட குறைவு என்றால் அரசு நிலையத்தில் விற்பனை செய்யலாம். விவசாயிகளுக்கு உண்டான செலவு எவ்வளவு என்பதை புள்ளிவிவரங்களோடு ஆராய்ந்துதான் அவர்கள் பாதிக்காத வகையில்தான் குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு நிர்ணயிக்கும். ஆகவே, அடிப்படை விலையைவிட விளைப்பொருட்களின் விலை வீழ்ச்சியைச் சந்திக்காது. இதுதான் ஏற்கனவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இது லாபகரமான விலையாக இருந்தால் விவசாயிகளுக்கு மிகவும் நல்லது. அதனால்தான், குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தித் தர வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து கோரிவருவது. அதேபோல, எந்த விவசாயியும் எங்களை விட்டுவிடுங்கள், நாங்கள் தனியாரிடம் சென்று விற்பனை செய்துகொள்கிறோம் என்று சொன்னதில்லை.

பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான சந்தைப்படுத்துதல் சட்டம்
ஒரு சிறுவிவசாயி நெல் பயிரிட்டு அறுவடை செய்வதில் 30 மூட்டை நெல் கிடைக்கிறது. அந்த 30 மூட்டை நெல்லை எடுத்துக்கொண்டு அந்த விவசாயி எந்த ஊரில் சென்று விற்பனை செய்வார். டெல்லியில் அரிசி தேவைப்படுவதாக தகவல் வருகிறது என்றால், 30 மூட்டை நெல்லையும் டெல்லி கொண்டுசெல்ல முடியுமா? அப்படித்தான் நாட்டில் நடக்குமா? அல்லது டெல்லியில் இருக்கும் வியாபாரி தஞ்சாவூருக்கோ, திருநெல்வேலிக்கோ அல்லது மதுரைக்கோ வந்து கொள்முதல் செய்ய முடியுமா?
யார் வாங்குவார்கள் என்றால் இந்தியா முழுவதும் இருக்கக் கூடிய பெரு நிறுவனங்கள்தான் அதனை வாங்கும். எடுத்துக்காட்டாக ரிலையன்ஸ் ரிடெய்ல் நிறுவனம் இந்தியா முழுவதும் நிலையங்களை (Store) வைத்துள்ளது. அனைத்து இடங்களிலும் அரிசியை விற்பனை செய்கிறார்கள். அப்படியென்றால் எங்கெல்லாம் நல்ல அரிசி விளைகிறது என்பதைப் பார்த்து ரிலையன்ஸ் விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். இல்லையென்றால் நெல்லூரில் குறைந்த விலைக்கு அரிசி கிடைக்கிறது என்ற தகவல் கிடைத்தால், அங்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் ஒப்பந்தம் போட்டு, அந்த நெல்லை கொள்முதல் செய்து ஒரே இடத்திலுள்ள கிடங்கில் வைத்துக்கொள்ளலாம்.
அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திருத்தத்தின் நோக்கம்
இங்குதான் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் நோக்கம் புரிகிறது. முன்பு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஒரு விளைப்பொருளை ஒரே இடத்தில் இருப்பு வைக்க முடியாது. புதிய சட்டத் திருத்தம் மூலம் இவர்கள் 10,000 ஏக்கருக்குமான நெல்லை கொள்முதல் செய்து ஒரே இடத்தில் குவிக்க முடியும். கிடங்கில் வைக்கும்போது விளைப்பொருள் வீணாகாமல் இருக்க, குளிர்பதனக் கிடங்கை (Cold Storge) உருவாக்குவார்கள். அரசு என்ன சொல்கிறது என்றால் குளிர்பதன கிடங்கில் தனியார் முதலீடு செய்யும் என்கிறது. கொள்முதல் செய்யும்போது பொருளை பத்திரப்படுத்த வேண்டும் என்றால், குளிர்பதனக் கிடங்கில் முதலீடு செய்துதானே ஆக வேண்டும்.
இன்னொன்று ஓர் இடத்தில் கொள்முதல் செய்ததை மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்லலாம். ஏனெனில், ஆந்திராவில் கொள்முதல் செய்ததை தமிழகத்தை விற்க வேண்டும், தமிழகத்தில் கொள்முதல் செய்ததை கர்நாடகத்தில் விற்க வேண்டும், உத்தரப் பிரதேசத்தில் விற்பனை செய்ய வேண்டும் என்றால் போக்குவரத்திற்கு எந்தவித தடையும் இருக்கக் கூடாது. அதற்காகத்தான் இந்தியாவின் எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம் என்கிற அத்தியாவசிய பொருட்கள் சட்டம்.
உள்ளூர் வியாபாரி டு உலக வியாபாரி
மண்டிகளில் அரசு அதிகாரிகள் சென்று, வியாபாரிகள் குழுவாக இயங்கி விளைப்பொருளை அடிமாட்டு விலைக்கு மாற்றிவிடக் கூடாது என்பதை பார்த்துக்கொள்வார்கள். அதையும் தாண்டி வியாபாரிகள் குழுவாக இயங்கும் தன்மை நடந்துகொண்டுதான் இருக்கிறது. உள்ளூர் வியாபாரிகள் ஒன்று சேர்ந்து செய்து வந்ததை ஒழிக்கிறேன் என்று கூறிவிட்டு, இந்திய அளவிலான வியாபாரிகளை இறக்கிவிடுவது என்பது தவறான முன்னுதாரணம்.

விவசாயிகளின் ராஜா யார்?
இந்தியா தழுவிய வியாபாரிகள், உலகம் தழுவிய வியாபாரிகளும் வந்துசேருவதற்கான நடவடிக்கைதான் இது. இந்திய விவசாயிகள் பெரும்பாலானோர் சராசரியாக 2 ஏக்கர் வைத்திருக்கக் கூடிய வலுவிழந்த விவசாயிகளாகத்தான் இருக்கிறார்கள். ஆகவே, இத்தனை கோடி பேர் விளைவிக்கும் பொருட்களை கைப்பற்றக்கூடியவர்கள்தான் ராஜாவாக இருக்க முடியும். இப்படி ராஜாவாக்குவதற்காகப் போடப்பட்டுள்ளவைதான் இந்த மூன்று சட்டங்களும்.
இதில் சந்தைப்படுத்துதல் என்பது மாநிலங்களின் உரிமையில் இருந்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்தச் சட்டங்கள் நல்லது என்று கூறி ஆதரவு தெரிவித்துவிட்டார். நாளைக்கே மனம் மாறினால், விவசாயிகளுக்கு எதிரான சட்டம் என்று கூறி, ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்தான் விற்பனை செய்ய வேண்டும் என வேறொரு சட்டம் நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் முன்பு இருந்தது. ஆனால், இப்போது அந்த வாய்ப்புகளெல்லாம் இல்லை. மாநிலங்களுக்கு அந்த உரிமைகள் எடுக்கப்பட்டுவிட்டது. தலைமை அமைச்சரே அம்பானிக்கு வேண்டுமா அல்லது அதானிக்கு வேண்டுமா என்பதை முடிவு செய்துவிடுவார்.
ஜிஎஸ்டிக்கான உரிமையை எப்படி மத்திய அரசே வைத்துக்கொண்டதோ, அதேபோல சந்தைப்படுத்துதலுக்கான உரிமையையும் அவர்களே வைத்துக்கொண்டார்கள். விவசாயத்தைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான முழு முயற்சிதான் இது. இதனைப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது என்றால் தொல்காப்பியத்தில், அகத்திணை இயல் – பாடல் எண் ஐந்தில்,
“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே” என்று குறிப்பிடுகிறார்.
இதில் வேந்தன் மேய தீம்புனல் உலகு என்று இருக்கிறது அல்லவா…தீம்புனல் என்றால் வயல் சார்ந்த பகுதிகள். அந்த தீம்புனல் பகுதிக்கு புதிய வேந்தன் யார் என்பதுதான் நம் கண் முன் நிற்கும் கேள்வி. இந்தியாவுக்கு புதிய இந்திரன் யார், எந்த இந்திரனுக்கான இந்தச் சட்டங்கள் இயற்றப்பட்டது என்ற கேள்விகளை உங்கள் முன்விட்டுச் செல்கிறேன்.

கட்டுரையாளர் குறிப்பு :
ஜெ.ஜெயரஞ்சன், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தை (ஐடிஏ) உருவாக்கி, தொடக்கம் முதல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். தமிழக சமூக, பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்துக் கடந்த முப்பது ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் முக்கிய ஆய்விதழ்களிலும் புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளன. இந்திய அரசும், தமிழக அரசும் இவரது ஆய்வுகளை, கொள்கை முடிவு எடுப்பதற்குப் பயன்படுத்தி வருகின்றன.
கட்டுரையை வீடியோ வடிவில் காண க்ளிக் செய்க
,”
