தருமபுரம் ஆதீனத்திற்கு மிரட்டல் : 4 பேர் கைது… பாஜக மாவட்ட தலைவர் தலைமறைவு!

Published On:

| By christopher

Threat to Darumapuram Atheenam

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடாதிபதியை பணம் கேட்டு மிரட்டல் விடுத்த வழக்கில் பாஜக பிரமுகர் உட்பட நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள பாஜக மாவட்ட தலைவர் அகோரம், திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் உள்ளிட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்

மயிலாடுதுறை அருகே 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார்.

இந்த நிலையில் மடாதிபதி சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக கூறி மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக மடாதிபதியின் உதவியாளர் மற்றும் சகோதரராக இருக்கும் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்நிலையத்தில் கடந்த 25ஆம் தேதி புகார் அளித்தார்.

Threat to Darumapuram Atheenam

அதில், ‘தஞ்சை மாவட்டம் ஆடுதுறை சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் நேரில் சந்தித்தும் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ ஆடியோ தங்களிடம் இருப்பதாகவும் இதனை சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிட்டு அவமானப்படுத்திவிடுவோம்.  அப்படி வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் கேட்கும் பணத்தை தர வேண்டும் என்று கூறி என்னை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்தார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தங்கள் சார்பில் திருவெண்காட்டைச் சேர்ந்த ரவுடி விக்னேஷ் என்பவர் தொடர்பு கொள்வார் என்றும், இந்த மிரட்டலுக்கு உடந்தையாக செம்பனார்கோயிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பாரதிய ஜனதா கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன், மற்றும் திமுக செம்பனார்கோயில் ஒன்றிய மத்திய செயலாளர் அமிர்த விஜயகுமார் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர் என்றும் தனது புகாரில் விருத்தகிரி தெரிவித்திருந்தார்.

Threat to Darumapuram Atheenam
திமுக செம்பனார்கோயில் ஒன்றிய மத்திய செயலாளர் அமிர்த விஜயகுமார் (வலதுபக்கம்)

இதனையடுத்து சம்பந்தப்பட்ட 9 பேர் மீதும் ஐபிசி 323, 307, 389, 506(2), 120 B ஆகிய 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆடுதுறை வினோத், திருவெண்காடு விக்னேஷ், கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, உடந்தையாக செயல்பட்ட ஸ்ரீநிவாஸ் ஆகியோரை  கைது செய்த போலீசார் அவர்களை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர்.

அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள நீதிபதி கலைவாணி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நான்கு பேரும் மயிலாடுதுறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டுள்ள ஆடுதுறை வினோத் தஞ்சை வடக்கு மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி பொதுச் செயலாளராகவும், திருவெண்காடு விக்னேஷ் மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்ட செயலாளராகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள பாஜக மாவட்ட தலைவர் அகோரம், திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமார்,  வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 5 பேரை போலீசார்  தேடி வருகின்றனர்.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் முதலில் திமுகவில் இருந்து பாமகவில் சேர்ந்தார்.  பின் அகோரத்தைப் பின்பற்றி பாஜகவுக்கு சென்றார்.  அதன் பின் மீண்டும் திமுகவுக்கு சென்று தனது சாதிய செல்வாக்கு காரணமாக ஒன்றிய செயலாளர் ஆனார்.

இந்த நிலையில்  தருமபுரம் ஆதீனம் இப்போது காசியில் இருக்கிறார்.   புகார் கொடுத்த விருத்தகிரியும், புகாருக்கு உள்ளான செந்திலும்  இப்போது ஆதீனத்துடன் காசியில்தான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

திருப்பூர், நாகையை மீண்டும் கேட்கும் இந்திய கம்யூனிஸ்ட்

ஆர்.ஜே.பாலாஜி Vs ஹெச். வினோத் : தளபதி 69 இயக்குநர் யார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share