தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் சிபிஐ விசாரணை குறித்து கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்களை விசாரிக்க வேண்டும் என தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு இன்று (ஜூலை 15) உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில் குமார் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை குறித்து நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
”தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான சிபிஐ அறிக்கை கவலையும், வேதனையும் அளிக்கிறது.
ஒரு தொழிலதிபரின் விருப்பப்படியே துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. தொழிலதிபர் மக்களுக்கு பாடம் புகட்ட நினைத்துள்ளார். காவல்துறையும் அவரின் கட்டளைக்கு கட்டுப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு விசாரணையில் சிபிஐ ஒருதலை பட்சமாக செயல்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு சம்பவத்தை நியாயமாக விசாரிக்கவில்லை. அதிகாரிகள் தவறிழைக்கவில்லை என எப்படி அறிக்கை அளிக்க முடியும்? இத்தனை ஆண்டுகள் விசாரணை நடத்தியும் பலனில்லை.
விசாரணையின் முடிவு பற்றி எந்த கவலையுமின்றி விசாரணை நடத்தினால் அறிக்கை நியாயமானதாக இருக்காது.
சுதந்திரமான விசாரணை அமைப்பின் முடிவு கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இந்த வழக்கின் விசாரணை சிபிஐ-யின் கையாலாகாத்தனத்தை காட்டுகிறது” என்று கண்டனம் தெரிவித்தனர்.
தொடர்ந்து நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகள், அவர்களின் உறவினர்கள் பெயர்களில் உள்ள சொத்து விவரங்களை சேகரித்து, இரண்டு வாரங்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”சிறுபான்மையினருக்கு எங்கள் மீது இன்னும் நம்பிக்கை வரவில்லை” : செல்லூர் ராஜூ
Comments are closed.