கவிஞர் கபிலனின் மகள் தூரிகை நேற்றிரவு திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை குறித்து அவர் எழுதியுள்ள பேஸ்புக் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாடலாசிரியர் கபிலனின் மகளான தூரிகையின் தற்கொலை தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையில் பிரபல பாடலாசிரியராக விளங்குபவர் கபிலன். கடந்த 2001ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த தில் படத்தில், உன் சமையில் அறையில் பாடலை எழுதி பாடலாசிரியாராக அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார் கபிலன். தசவதாரம் படத்தில் கமலுடன் கேமியோ கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

தூரிகை தற்கொலை!
இப்படி தமிழ் சினிமாவின் முக்கியமான பாடலாசிரியராக வலம் வரும் கபிலனின் மகள் தான் தூரிகை(28). சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ யில் உள்ள அவரது வீட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த தூரிகை நேற்றிரவு திடீரென தற்கொலை செய்து கொண்டார். மகள் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயார் சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அவரது பெற்றோர், நண்பர்கள் தமிழ் திரையுலகினர் என பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தூரிகையின் தற்கொலையை குறித்து அரும்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்கள் முன்னேற்றத்தில் ஈடுபாடு!
துணிச்சல் மிகுந்த பெண்ணாக அறியப்படும் தூரிகை ஆடை வடிவமைப்பாளராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றி வந்தார். ‘Being Women Magazine’ எனும் இதழை கடந்த 2020ம் ஆண்டு இயக்குனர் பா.ரஞ்சித், சேரன், நடிகை விமலா ராமன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கினார். அதில் பெண்கள் முன்னேற்றம் குறித்த பல்வேறு கட்டுரைகளை எழுதி வந்தார். கடைசியாக கடந்த 1ஆம் தேதி மெரினாவில் நடந்த பாலின சமத்துவ விழாவில் கலந்துகொண்டு அதை தனது இதழிலும் வெளியிட்டுள்ளார்.
அதே போல் ‘The Label Keera’ எனும் ஆடை வடிவமைப்பகத்தையும் நடத்தி வந்தார். பல்வேறு திரைப்படங்களிலும், திரைபிரபலங்களுக்கும் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றினார்.

தூரிகையின் பேஸ்புக் பதிவு!
எழுத்து, வடிவமைப்பு என பன்முகத் தன்மை கொண்ட தூரிகை, 2 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை குறித்து பேஸ்ஃபுக்கில் எழுதியுள்ளார்.
அதில், ”எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல. உங்களது தற்கொலையால் யாரிடமும் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. தற்கொலை செய்த உங்களை குறித்து நண்பர்கள், தெரிந்தவர்கள் சமூகவலைதளத்தில் பதிவிட்டு ஒருநாள் சோகமாக இருப்பார்கள். உங்களுடன் ஒருவர் எவ்வளவு நெருங்கி பழகியவராக இருந்தாலும், உங்களது இழப்பை 5-10 நாட்களில் மறந்துவிடுவர். ஆனால் உங்களது பெற்றோர் எதிர்கொள்ளும் துயரம் சாதாரணமானது அல்ல. கொடூரமானது. வலி மிகுந்தது.

அதேவேளையில் தற்கொலையால் நீங்கள் வாழ்க்கையில் காண வேண்டிய உங்களது வளர்ச்சியை தொலைத்துவிடுகிறீர்கள். மற்றவர்கள் உங்களை குறித்து ஏற்படும் இழப்பை விட, தற்கொலையால் உங்களை இழந்துவிடுவீர்கள் என்பது தான் உண்மை. பெண்களே, உங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளையும் தைரியமுடன், நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
தற்கொலை குறித்து தூரிகை எழுதியுள்ள இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில், அவர் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா