சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணிக்கு அனுமதி வழங்கக்கோரி இன்று (செப்டம்பர் 30) தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் ஆகியோர் மனு அளித்துள்ளனர்.
தமிழகத்தில் வருகிற அக்டோபர் 2ம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 51 இடங்களில் பேரணி நடத்துவதற்கு அனுமதி கேட்டிருந்த நிலையில், உயர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் பேரணி நடத்த காவல் துறைக்கு அனுமதி வழங்க உத்தரவிட்டது.
இதற்கு விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதே தேதியில் சமூக நல்லிணக்க பேரணி நடத்தவும் தமிழக காவல் துறையிடம் அனுமதி கேட்டிருந்தது.
ஆனால், தமிழகத்தில் நிகழும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் சமூக நல்லிணக்க பேரணிகளுக்கு அனுமதி வழங்க காவல் துறை மறுத்துவிட்டது.
காவல் துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சென்னை உயர் நீதிமன்றம் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 30) விசாரணைக்கு வந்தபோது, அக்டோபர் 2ம் தேதிக்கு பதிலாக நவம்பர் 6ம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கக்கோரி தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணிக்கு அனுமதி வேண்டி இன்று (செப்டம்பர் 30) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து மனு அளித்தனர்.
அதன்பின்னர் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அவர்கள், “மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் ஒரு மதவாத இயக்கம் ஆர்.எஸ்.எஸ். அதேநேரத்தில் நாங்கள் மனிதச் சங்கிலியாக ஒருவரோடு ஒருவராக கைகோர்த்து மட்டுமே நிற்கப்போவதால்,
காவல்துறையினர் நேர்மறையான பதிலைத் தருவார்கள் என்று நம்புகிறோம். ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது.
மேலும், இதை அமைப்புகளுக்கான சவாலாகப் பார்க்க வேண்டாம். அரசுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் இடையிலான ஒரு சவாலாகப் பார்க்க வேண்டும். தமிழகத்துக்கு என்று ஒரு பாரம்பரியம் உள்ளது.
பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்கள் இந்த மண்ணில் மதவெறிக்கு இடம்தராமல் சமூக நீதி அரசியலை உயர்த்திப் பிடிப்பதற்கு பாடுபட்டிருக்கிறார்கள்.
எங்களைப் பொறுத்தவரை நாங்கள் மதவாத அமைப்பு அல்ல. மதவாத அமைப்புகளையும் எங்களையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்து பார்ப்பது பொருத்தமற்றது.
எனவே, இன்றைக்கு இந்த மதவாத சக்திகளை எதிர்த்து மதநல்லிணக்கத்தையும் மனித நேயத்தையும் வற்புறுத்தக்கூடிய எங்கள் இயக்கத்துக்கு அனுமதி கொடுப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
ஆகவே சமூக நல்லிணக்க பேரணிக்கு காவல் துறை அனுமதி வழங்க வேண்டும் டிஜிபியிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்” என்றனர்.
சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள், நாம் தமிழர் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஜெ.பிரகாஷ்
ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு : திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் உத்தரவு!
நவம்பர் 6 இல் ஆர்.எஸ்.எஸ். பேரணி: உயர் நீதிமன்றத்தில் நடந்தது என்ன?










