போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவித்திருக்கும் நிலையில், தொ.மு.ச.வினர் பேருந்துகளை வழக்கம் போல இயக்குவார்கள் என்று அதன் பொதுச் செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார்.
சிஐடியு, அண்ணா உள்ளிட்ட 17 தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் பேருந்துகளை இயக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.
இன்று (ஜனவரி 8) தொழிற்சங்கத்தினருடன் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துறை அமைச்சர் சிவசங்கர்,
“கடந்த அதிமுக ஆட்சியில் அவர்கள் செய்யாமல் விட்டதை, இப்போது திமுக ஆட்சி அமைந்த பிறகு செய்யவில்லை என்று அதிமுக தொழிற்சங்கத்தினர் சொல்வதும், எடப்பாடி பழனிசாமி சொல்வதும் வேடிக்கையான விந்தையாக இருக்கிறது. இந்த வேலை நிறுத்தம் அரசியல் உள் நோக்கம் கொண்டது” என தெரிவித்திருந்தார்.
தொமுச உள்ளிட்ட தொழிற்சங்க ஊழியர்களை வைத்து பேருந்துகளை வழக்கம் போல் இயக்குவோம் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 15ஆவது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை துவக்கப்பட வேண்டும்.
போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியாளர்களால் வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வு நிலுவை, தற்போதைய 4 மாத அகவிலைப்படி நிலுவை வழங்க வேண்டும்.
ஓய்வு பெற்றோர் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. ஆயினும் அரசு ஓய்வு பெற்றோர் அகவிலைப்படி உயர்வு சம்மந்தமாக நல்ல முடிவு எட்டப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
அதே நேரத்தில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக தீர்த்து வருகிறது திமுக அரசு. இப்பிரச்சினைகளையும் தீர்க்கும் என்ற வாக்குறுதியை ஏற்று, பொதுமக்கள் நலன்களை கருத்தில் கொண்டும், ஆட்சிக்கும் களங்கம் விளைவிக்க முயலும் அ.தி.மு.க. தொழிற்சங்க நடவடிக்கைகளை முறியடிக்க வழக்கம் போல் பேருந்துகளை இயக்க வேண்டுமாய் தொ.மு.ச. பேரவை சார்பில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களை கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
பொங்கலுக்கு 19,484 சிறப்புப் பேருந்துகள்: எங்கிருந்து எங்கு இயக்கப்படும் – முழு விவரம்!
Comments are closed.