ஒவ்வொரு மாதமும் நான்காவது வெள்ளிக்கிழமையன்று வெளியாகிற திரைப்படங்கள் ரசிகர்களைக் கவரத் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கும். மாதாந்திர பட்ஜெட் தான் அதற்குக் காரணம். அதனால், அந்த தினத்தில் குறைவாகப் படங்கள் வெளியாவதுதான் ‘லாஜிக்கலாக’ இருக்கும். ஆனால், நிலைமையோ தலைகீழாக இருக்கிறது. நாளை கிட்டத்தட்ட 8 படங்கள் தமிழில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. This Week Theatre Release Tamil Movies
ஏஸ் :
’மகாராஜா’ வெற்றிக்குப் பின் வருகிற விஜய் சேதுபதியின் படம். ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ தந்த இயக்குனர் ஆறுமுக குமார் இதனைத் தயாரித்து இயக்கியிருக்கிறார். ’ஏழு கடல் தாண்டி’ கன்னடப் படத்தில் நடித்த ருக்மணி வசந்த் இதில் நாயகியாக அறிமுகமாகிறார். யோகி பாபு, பப்லு பிருத்விராஜ், திவ்யா பிள்ளை, கேஜிஎஃப் அவினாஷ் உட்படப் பலர் நடித்திருக்கிற இப்படத்திற்குப் பின்னணி இசை தந்திருப்பவர் சாம் சி.எஸ். இப்படம் 2 மணி நேரம் 35 நிமிடங்கள் ஓடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மையல்
‘மைனா’வில் நாயகனைத் தேடிச் செல்கிற போலீஸ் அதிகாரியாக நடித்தவர் சேது. அவர் நாயகனாக அறிமுகமாகிற இப்படத்தில் சம்ரிதி, பி.எல்.தேனப்பன், மறைந்த சூப்பர்குட் சுப்பிரமணி உட்படப் பலர் நடித்துள்ளனர். எழுத்தாளர் ஜெயமோகன் எழுத்தாக்கத்தில் அமைந்த இப்படத்தை இயக்கியிருப்பவர் ஏபிஜி. ஏழுமலை. இப்படம் 2 மணி நேரம் 12 நிமிடங்கள் ஓடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஸ்கூல்
யோகிபாபு பிரதான வேடத்தில் நடித்திருக்கிற படம். இதில் பூமிகா, கே.எஸ்.ரவிக்குமார், பக்ஸ், சாம்ஸ், நிழல்கள் ரவி உட்படப் பலர் நடித்துள்ள இப்படத்தை ஆர்.கே.வித்யாதரன் இயக்கியிருக்கிறார். இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் 2 மணி நேரம் 27 நிமிடங்கள் ஓடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வேம்பு
’மெட்ராஸ்’ புகழ் ஹரிகிருஷ்ணன் நாயகனாக நடித்துள்ள படம் இது. இவரது ஜோடியாக ஷீலா நடித்திருக்கிறார். ஜஸ்டின் பிரபு இதனை இயக்கியிருக்கிறார். வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த இரண்டு பேர் காதலித்து திருமணம் செய்து ஒரு கிராமத்தில் வாழ்வதைக் காட்டுவதாக அமைந்திருந்தது இதன் ட்ரெய்லர்.
இது போக சண்முகபாண்டியனின் படைத்தலைவன், அகமொழி விதிகள், ஆகக் கடவன, திருப்பூர் குருவி ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் முழுக்கப் புதுமுகங்களால் உருவாக்கப்பட்டிருக்கிற ‘ஆகக்கடவன’ ட்ரெய்லர் ஈர்ப்பைத் தந்துள்ளது. This Week Theatre Release Tamil Movies
இது போக மலையாளத்தில் தயாரான இரண்டு படங்கள் தமிழில் ‘டப்’ செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன.
நரி வேட்டை
இயக்குனர் சேரன் நடித்திருக்கும் முதல் மலையாளத் திரைப்படம். இது தமிழில் ‘டப்’ செய்யப்பட்டிருக்கிறது. டொவினோ தாமஸ் நாயகனாகவும் பிரியம்வதா கிருஷ்ணன் நாயகியாகவும் நடித்திருக்கிற இப்படத்தில் சூரஜ் வெஞ்சாரமூடு, ஆர்யா சலீம் உட்படப் பலர் உண்டு. இப்படம் 2 மணி நேரம் 18 நிமிடங்கள் ஓடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆசாதி
ஸ்ரீநாத் பாசி, லால், ரவீனா ரவி, வாணி விஸ்வநாத், சைஜு குரூப் என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள படம் இது. சாகர் ஹரி எழுத்தாக்கம் செய்ய, ஜோ ஜார்ஜ் இயக்கியிருக்கிறார். சிறையில் அடைபட்டிருக்கும் மனைவியை தப்பிக்க வைக்க ஒரு கணவன் முயற்சிப்பதாகக் காட்டியது இதன் ட்ரெய்லர். இப்படம் 2 மணி நேரம் 11 நிமிடங்கள் ஓடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
குழந்தைகளுக்கான ஆங்கில 3டி படமான ’லிலோ அண்ட் ஸ்டிச்’ தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. This Week Theatre Release Tamil Movies
மலையாளப் படமான யுனைடெட் கிங்டம் ஆஃப் கேரளா, டிடெக்டிவ் உஜ்வாலன் மற்றும் இந்திப் படங்களான பூல் சுக் மாஃப், காப்கபீ, கேசரி வீர் படங்களும் தமிழகத்தில் வெளியாகின்றன.
ஆக, மாசக் கடைசியில் ‘ஃபன்’ பண்ண இத்தனை படங்கள் வருது.. அதுல ஜெயிக்கப் போவது எத்தனை? This Week Theatre Release Tamil Movies