ஒரு மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை என்பது தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட ஒரு அமிலச் சோதனை தான். அந்த வாரத்தில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று, அடுத்த வாரத்திற்குள் காலடி வைத்துவிட்டாலே வெற்றி ஓரளவுக்கு உறுதிப்பட்டுவிடும் என்பதே இதுவரை நிலைமையாக இருந்திருக்கிறது. அதுவே இப்போதும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. this week theater release list
’இந்த வாரம் இத்தனை படங்களா’ என்று ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்து கேட்கத்தக்க வகையில் ‘கொத்தாக’ சில படங்கள் வெளியாகின்றன. அவற்றில் எது வெற்றியைச் சுவைக்கப் போகிறது? அதற்கான பதிலைச் சில தினங்களில் நாம் அறியலாம்.
ஜென்ம நட்சத்திரம்
‘ஒரு நொடி’ என்ற கவனிக்கத்தக்க படத்தைத் தந்த இயக்குனர் பி.மணிவர்மன் மற்றும் நாயகன் தமன் குமார் கூட்டணியில் வெளியாகிற அடுத்த படம் இது. மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா ஷெரின், காளி வெங்கட், அருண் கார்த்தி, முனீஸ்காந்த், தலைவாசல் விஜய், வேல.ராமமூர்த்தி என்று பலர் நடித்திருக்கிற இப்படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்திருக்கிறார். ‘ஹாரர்’ வகைமையில் அமைந்த இத்திரைப்படம் திரையில் ஓடும் நேரம் 120 நிமிடங்கள்.

பன் பட்டர் ஜாம்
‘குக் வித் கோமாளி’, ‘பிக்பாஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாகப் புகழ் பெற்ற ராஜு ஜெயமோகன் நாயகனாக நடிக்கிற படமிது. ராகவ் மிர்தாத் இயக்கியிருக்கிற இப்படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்திருக்கிறார். பவ்யா த்ரிகா, ஆத்யா பிரசாத், சார்லி, சரண்யா பொன்வண்ணன், மைக்கேல் தங்கதுரை, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இப்படத்தின் நீளம் 147 நிமிடங்கள்.
ட்ரெண்டிங்
கலையரசன், பிரியாலயா, வித்யா, பெசண்ட்நகர் ரவி, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் ’சைக்காலஜிகல் த்ரில்லர்’ வகைமையில் அமைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. சிவராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இப்படம் திரையில் ஓடும் நேரம் 147 நிமிடங்கள்.
கெவி
ஷீலா ராஜ்குமார், ஜேக்குலின், ஆதவன், சார்லஸ் வினோத், ஜீவா சுப்பிரமணியன், எஸ்.கே.காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படம் ’ஆக்ஷன் ட்ராமா’ வகைமையில் அமைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. தமிழ் தயாளன் இயக்கியுள்ள இப்படத்திற்கு பாலசுப்பிரமணியன் இசையமைத்துள்ளார். இப்படம் திரையில் ஓடும் நேரம் 133 நிமிடங்கள்.
சென்ட்ரல்
காக்காமுட்டை விக்னேஷ் நாயகனாக அறிமுகமாகிற இப்படத்தில் சோனேஷ்வரி, பேரரசு, தர்ஷன், ஆறு பாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாரதி சிவலிங்கம் இயக்கியிருக்கிற இப்படத்திற்கு இல ராதாகிருஷ்ணன் இசையமைத்திருக்கிறார். இப்படம் திரையில் ஓடும் நேரம் 122 நிமிடங்கள்.
யாதும் அறியான்
தினேஷ் நாயகனாக அறிமுகமாகிற இப்படத்தில் பிரானா அப்துல்சலாம், அப்புகுட்டி, தம்பி ராமையா, ஷ்யாமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எம்.கோபி இயக்கியிருக்கிற இப்படத்திற்கு தர்மா பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் நீளம் 97 நிமிடங்கள்.
இவை தவிர்த்து இரவுப்பறவை, ஆக்கிரமிப்பு ஆகிய தமிழ் திரைப்படங்கள் இந்த வாரம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மலையாளத்தில் சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள ‘ஜானகி வி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா’ நேற்று (ஜூலை 17) வெளியானது. இன்று ’அபூர்வ புத்ரன்மார்’, ’ப்ளாஸ்க்’ படங்கள் வெளியாகின்றன.
தெலுங்கில் ராணா டாகுபதி தயாரித்துள்ள ‘கொத்தபல்லிலோ ஒக்கப்புடு’, க்ரீதி மற்றும் ஸ்ரீலீலா நடித்துள்ள ‘ஜுனியர்’ ஆகியன ரிலீஸ் ஆகின்றன.
இந்தியில் அனுபம் கெர் இயக்கி நடித்துள்ள ‘தன்வி: தி கிரேட்’, மோஹித் சூரி இயக்கத்தில் ‘வைரல்’ ட்ரெய்லரை தந்த ‘சையாரா’, சஞ்சய் மிஸ்ரா நடிக்கும் ‘5த் செப்டம்பர்’, சோனாக்ஷி சின்ஹாவின் ‘நிகிதா ராய்’, பக்திப்படமான ‘சாந்த் துக்காராம்’ ஆகியன தமிழ்நாட்டில் வெளியாகின்றன.
இந்த வரிசையில் கன்னடப்படமான ‘எக்கா’, ஆங்கிலப் படங்களான ‘ஸ்மர்ஃப்ஸ்’, ‘ஐ நோ வாட் யூ டிட் லாஸ்ட் சம்மர்’ மற்றும் ஆவணப்படமான ‘நீல்கிரிஸ்: எ ஷேர்டு வைல்டர்னெஸ்’ ஆகியனவும் அடக்கம்.
