அமைச்சர் மீது சூமோட்டோ பதிவு செய்ய இதுதான் காரணம் : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

Published On:

| By Kavi

Reason for suo moto case filed

அமைச்சர் ஐ பெரியசாமி மீதான வழக்கில், லஞ்ச ஒழிப்புத் துறை ஏன் மேல்முறையீடு செய்யவில்லை என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த கணேசனுக்கு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் பெரியசாமியை கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் விடுவித்தது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தார்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்றும் இன்றும் நடைபெற்றது.

நேற்று அமைச்சர் தரப்பில், ‘முன்னாள் முதல்வர் கலைஞரின் பாதுகாப்பு அதிகாரிக்கு வீடு ஒதுக்கியதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை’ என்று வாதிடப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிப்ரவரி 13ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை வாதங்களை முன்வைக்க உத்தரவிட்டார்.

அதன்படி வழக்கு இன்று (பிப்ரவரி 13) விசாரணைக்கு வந்த போது, லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன்,

‘அரசிடம் ஊதியம் பெறும் ஊழியர் என்பதால் ஆளுநரிடம் தான் வழக்கு தொடர அனுமதி பெற வேண்டும். அமைச்சர்களை நியமிக்கவும் நீக்கவும் ஆளுநருக்கு தான் அதிகாரம் இருக்கிறது.

எனவே வழக்கு தொடர ஆளுநர்தான் அனுமதி கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்திருக்கிறது.

இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் 2023 ஜனவரியில் பதில் மனு தாக்கல் செய்தது.

அதில் விடுவிக்க கோரிய மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் வழக்கு சாட்சி விசாரணை துவங்கிய பின் இடையில் விடுவிக்க கோர முடியாது என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தனது நிலைப்பாட்டை தெரிவித்தது” என கூறினார்.

இதை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முறையான அனுமதி பெறவில்லை என்று சொல்கிறீர்கள். அப்படியானால் ஏன் முறையான அனுமதியை ஆளுநரிடம் பெறவில்லை என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர், இன்னும் காலம் தாழ்ந்து விடவில்லை. இனியும் ஆளுநரிடம் சென்று அனுமதி பெறலாம். ஐ பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ஏன் மேல்முறையீடு செய்யவில்லை. லஞ்ச ஒழிப்புத் துறையின் செயல்பாட்டின் காரணமாகவே தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்று தெரிவித்தார்.

அமைச்சர் ஐ பெரியசாமி விடுவிக்கப்பட்ட உடனேயே உரிய ஆவணங்களுடன் ஆளுநரை அணுகி லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர அனுமதி பெற்றிருக்க வேண்டும். சிறப்பு நீதிமன்றமும் ஆளுநரிடம் முறையாக அனுமதி பெறும்படி லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிடவில்லை என்று குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் ஒரே ஒரு சாட்சி மட்டும் விசாரிக்கப்பட்டுள்ளதால் ஆளுநரிடம் அனுமதி பெறலாம் என தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சராக இருப்பவர் மக்கள் மத்தியில் சுத்தமானவராக இருக்க வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

”பிரமாண்ட திருமணம்” காதலரை கரம்பிடிக்கும் ‘இந்தியன் 2’ நடிகை!

தமிழுக்கு வரும் மிருணாள் தாகூர்… ஹீரோ யாருன்னு பாருங்க!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share