இதுவே உங்களுக்கு கடைசி வாய்ப்பு என்றும் இதில் ஆரம்பத்திலேயே ரன்கள் அடிக்காமல் போனால் சுப்மன் கில் உங்களது வாய்ப்பை பெற்று விடுவார் என்றும் கே.எல் ராகுலை இந்திய அணியின் முன்னாள் வீரர் முகது கைப் எச்சரித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் கடைசியாக நடைபெற்ற 2 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர்களில் இந்திய அணி வெற்றிபெற்றது.
இந்நிலையில், 2004 க்குப்பின் தொடரை வென்று சரித்திரம் படைக்கப் போராட உள்ளது ஆஸ்திரேலிய அணி.
இத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா திரும்பியுள்ளதால் கடைசியாக வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் கேப்டனாகவும் தொடக்க வீரராகவும் செயல்பட்ட ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனெனில் அந்தத் தொடரில் மற்றொரு தொடக்க வீரராக வாய்ப்பு பெற்ற சுப்மன் கில் சதமடித்து அசத்தியதுடன் சமீபத்திய இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் சதங்களையும் இரட்டை சதங்களையும் அடித்து பார்மில் இருக்கிறார்.
மறுபுறம் ராகுல் இன்னும் பார்மை மீட்டெடுக்கவில்லை. அதனால் சுப்மன் கில் தொடக்க வீரராக விளையாடுவதே நியாயம் என்றாலும் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள காரணத்தால் ரோகித் சர்மாவுடன் 2வது தொடக்க வீரராக ராகுல் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவே கடைசி வாய்ப்பு
இந்நிலையில் , முன்னாள் வீரர் முகமது கைப் இதுவே உங்களுக்கு கடைசி வாய்ப்பு என்றும் இதில் ஆரம்பத்திலேயே ரன்கள் அடிக்காமல் போனால் சுப்மன் கில் உங்களது வாய்ப்பை பெற்று விடுவார் என்றும் எச்சரித்துள்ளார்.
இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேற்று (பிப்ரவரி 2 ) பேசிய அவர் “கேஎல் ராகுல் துணை கேப்டனாக இருந்தாலும் அவர் அதிகப்படியான அழுத்தத்தில் விளையாட உள்ளார்.
அவர் இம்முறை களமிறங்கியதும் நேரடியாக பெரிய ரன்களை குவித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஒருவேளை ஒரு சில இன்னிங்ஸ்கள் மோசமாக அமைந்தால் ராகுல் இடத்தில் சுப்மன் கில் விளையாடுவதை நீங்கள் பார்க்க முடியும். இல்லையென்றாலும் கூட 5, 6 ஆகிய இடங்களில் சுப்மன் கில் கண்டிப்பாக விளையாடுவார்.
ஏனெனில் 3இல் புஜாரா 4இல் விராட் கோலி 5இல் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடினால் 5 அல்லது 6 ஆகிய இடங்களில் சுப்மன் கில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இப்போதும் உள்ளது. கடைசியாக வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சதமடித்த அவர் கடந்த ஒன்றரை மாதங்களில் இரட்டை சதத்தையும் சதங்களையும் அடித்து வருகிறார் என்றார்.

மேலும்,அவரைப் போன்ற ஒருவரை நீங்கள் விளையாடும் 11 பேர் அணியில் இருப்பதை விரும்புவீர்கள். அதனால் ஓப்பனிங் இடத்தில் இல்லை என்றாலும் கூட அவருக்கு ஏதேனும் ஒரு இடத்தில் வாய்ப்பு கிடைக்கும். ஏனெனில் மிகச்சிறந்த கிளாஸ் பேட்ஸ்மேனான அவர் நல்ல பார்மில் இருக்கிறார் என்று கூறினார்.
முன்னதாக இத்தொடரில் நிச்சயம் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால் சுமாரான பார்மில் இருக்கும் ராகுலுக்கு பதிலாக சுப்மன் கில்லுக்கு ஓப்பனிங் இடத்தில் வாய்ப்பு கொடுத்து மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவுக்கு இந்திய அணி நிர்வாகம் வாய்ப்பு கொடுக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.
ஏனெனில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட அதிக வாய்ப்பில் ராகுல் சொதப்பியதால் அதிருப்தியடைந்த அணி நிர்வாகம் ஒருநாள் கிரிக்கெட்டில் அவருடைய ஓப்பனிங் இடத்தையும் துணை கேப்டன் பதவியையும் பறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
எடப்பாடியையும், பன்னீரையும் இணைக்க முயற்சி: பாஜக!
‘சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து’ : இயக்குநர் கே.விஸ்வநாத் மறைவு!