அரசின் திட்டங்களை மக்கள் தேடிச்செல்லும் காலம் போய், மக்களை தேடிச் சென்று அரசே திட்டங்கள் வழங்கி வரும் காலமிது என உதயநிதிஸ்டாலின் பேசியுள்ளார்.
சுமார் 12 ஆயிரம் வீட்டு மனைப் பட்டாக்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு சுழல் நிதி வழங்குது உள்ளிட்ட 22 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 9) காலை மதுரை சென்றிருந்தார்.
முன்னதாக மதுரை அரசு இராஜாஜி பொது மருத்துவமனை மற்றும் மாட்டுத்தாவணிப் பேருந்து நிலையத்தில் அதிகாரிகளுடன் சென்று உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் கலைஞர் நூற்றாண்டு நினைவாக மதுரை கிழக்கு தொகுதிக்கான ‘கலைஞர் நூலகத்தை’ ஒத்தக்கடையில் திறந்து வைத்த உதயநிதி அங்கிருந்த மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து மதுரை ஒத்தக்கடையில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டிற்கு வந்த உதயநிதி முதலில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் அமைக்கப்பட்டிருந்த சிறு, சிறு அரங்குகளை பார்வையிட்டார்.
அப்போது அங்குள்ள சில மகளிர் சுய உதவிக்குழுவினர் வழங்கிய விநாயகர் சிலையை அவர் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்.
இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலம்!
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசுகையில், “திமுகவில் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே ‘பொற்கிழி’ வழங்கும் நிகழ்ச்சி, சென்ற ஆண்டு பெண்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவற்றை மாநாட்டை போல நடத்தியவர் அமைச்சர் மூர்த்தி. மூர்த்தி என்றாலே ‘மாநாடு’ என்ற பெயர் வந்துள்ளது.
கடந்த மக்களவை தேர்தலின் போது மதுரை மாவட்டத்தில் தான் எனது தேர்தல் பரப்புரையை தொடங்கினேன். அப்போது மதுரையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் திமுகவை வெற்றிபெற வைப்போம் என உறுதியளித்தீர்கள். அதன்படி திமுக அரசுக்கு நீங்கள் 40க்கு 40 தொகுதியை வெற்றியாக பரிசளித்தீர்கள். உங்களுக்காக பல்வேறு திட்டங்களை அமைச்சர் மூர்த்தி சட்டமன்றத்தில் கேட்டு அதனை செயல்படுத்தி வருகிறார்.
அரசின் திட்டங்களை மக்கள் தேடிச்செல்லும் காலம் போய், மக்களை தேடிச் சென்று அரசே திட்டங்கள் வழங்கி வருகின்றன. திமுக அரசின் திட்டங்களால் தமிழ்நாட்டு பெண்கள் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள். வறுமை ஒழிப்பு, மகளிர் முன்னேற்றம், தரமான கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 13 துறைகளில் இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு உள்ளது.
அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களால் நாட்டிலேயே முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது” என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
தொடர்ந்து பயனாளிக்கு வீட்டுமனை பட்டா சான்றிதழையும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2,500 கோடி மதிப்பிலான கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
“நிரபராதி என நிரூபிப்போம்”: சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான சி.விஜயபாஸ்கர் பேட்டி!