”இது நம் கட்சிக்கொடி மட்டுமல்ல…” : கொடி அறிமுக விழாவில் விஜய் பேச்சு!

Published On:

| By christopher

"This is not just our TVK flag..." : Vijay's speech at the flag launch ceremony!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை முதன்முறையாக அறிமுகம் செய்த விஜய்,  ”இது நம் கட்சிக் கொடி மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறைக்கான வெற்றிக்கொடியாக பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் தலைவர் விஜய் முதன்முதலாக இன்று (ஆகஸ்ட் 22) அறிமுகம் செய்து வைத்தார்.

மேலும், கீழும் அடர்சிவப்பு நிறம் இருக்க, நடுவில் மஞ்சள் நிறத்துடன் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கொடியின் நடுவில் இருபக்கமும் போர் யானையுடன், வட்ட வடிவில் நட்சத்திரங்கள் சூழ வெற்றியை குறிக்கும் வாகை மலர் மத்தியில் இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தின் கல்வெட்டை திறந்து வைத்து, நிர்வாகிகளின் கோஷத்திற்கு மத்தியில் கொடியை ஏற்றினார் விஜய்.

அதன்பின்னர் நிர்வாகிகளுக்கு மத்தியில் விஜய் உரையாற்றினார்.

அப்போது அவர், “நமது அரசியலின் தொடக்கப்புள்ளியாக கடந்த பிப்ரவரியில் கட்சியின் பெயரை அறிவித்தேன். அன்றிலிருந்து ஒரு குறிப்பிட்ட நாளுக்காக அனைவரும் காத்திருந்தீர்கள். நம் முதல் மாநில மாநாடு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் மாநாட்டின் தேதியை உங்களுக்கு அறிவிப்பேன்.

அதற்கு முன்னதாக நீங்கள் கொண்டாடி மகிழ்வதற்காக கட்சியின் கொடியை இன்று அறிமுகம் செய்துள்ளேன்.

என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் முன்னும், தமிழ்நாட்டு மக்கள் முன்னும் இன்று கழக கொடியை அறிமுகம் செய்ததை பெருமையாக கருதுகிறேன்.

இதுவரை நமக்காக உழைத்தோம். இனி தமிழ்நாட்டு மக்களுக்காக, தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைப்போம்.

இன்று அறிமுகப்படுத்திய நம் கட்சிக் கொடிக்கு பின்னால் ஒரு சுவாரசியமான வரலாற்று குறிப்பு இருக்கிறது. அதனை நம் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் தெரிவிக்கிறேன்.

அதுவரைக்கும் சந்தோசமாக, கெத்தாக இந்த கொடியை உள்ளத்திலும், இல்லத்திலும் ஏற்றி மகிழ்வோம். இது நம் கட்சிக் கொடி அல்ல, தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறைக்கான வெற்றிக்கொடியாக இதை பார்க்கிறேன்” என்று விஜய் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

கொடி அறிமுகம் : தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி என்ன?

களைகட்டும் தவெக கொடி அறிமுக விழா : விஜய்க்கு சீமான் வாழ்த்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share