நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுக்கு நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ’இந்த பேரழிவு சாதாரணமானது அல்ல’ என பிரதமர் மோடி உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நூற்றுக்கனக்கான வீடுகள் மண்ணில் புதையுண்டன. 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் வீடு, உறவுகளை இழந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கேரளா இதுவரை பார்த்திராத பேரழிவாக இது கருதப்படும் நிலையில், தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு கட்சி தலைவர்களும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட வயநாட்டின் சூரல்மலையில் பிரதமர் மோடி இன்று நேரில் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார்.

அவருடன் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிப் முகமது கான் மற்றும் மாநில முக்கிய அதிகாரிகளும் சென்றனர்.
)
தொடர்ந்து நிலச்சரிவில் இடிந்து விழுந்த வெள்ளர்மலை அரசு தொழிற்கல்வி மேல்நிலைப் பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளை நடந்து பார்வையிட்டார்.

பின்னர் ராணுவத்தால் கட்டப்பட்ட 190 அடி நீளமுள்ள பெய்லி பாலத்தின் வழியாக நடந்து சென்று ராணுவ வீரர்களுடன் பாதிப்பின் தாக்கத்தை கேட்டறிந்தார்.
அதனையடுத்து மேப்பாடி சென்ற பிரதமர், அங்கு நிலச்சரிவில் உயிர்பிழைத்து நிவாரண முகாம்கள் மற்றும் மருத்துவமனையில் தங்கவைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பலரும் அவரிடம் கண்ணீருடன் தங்களது பாதிப்பினை கூறினர்.

இதனையடுத்து வயநாடு ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்தில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஒன்றிய இணையமைச்சர் சுரேஷ் கோபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “ வயநாடு பேரழிவு சாதாரணமானது அல்ல” என்று கூறிய பிரதமர் மோடி, பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், அவர், “இந்த பேரிடரால் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் சிதைந்துள்ளன. அந்த இடத்திலேயே நிலைமையைப் பார்த்தேன். இந்தப் பேரிடரை எதிர்கொண்ட நிவாரண முகாம்களில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தேன். காயமடைந்த நோயாளிகளையும் மருத்துவமனையில் சந்தித்தேன்.
சம்பவம் நடந்த அன்று காலை முதல்வர் பினராயி விஜயனுடன் நான் உரையாடினேன். நாங்கள் உதவி வழங்குவோம் என்றும், விரைவில் சம்பவ இடத்திற்குச் செல்ல முயற்சிப்போம் என்றும் உறுதியளித்தேன். அதன்படி பேரிடருக்கு உதவக்கூடிய மத்திய அரசின் NDRF, ராணுவம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் உடனடியாகத் திரட்டப்பட்டன.
நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களைப் பார்வையிட்டபோதும், நிவாரண முகாமில் உயிர் பிழைத்தவர்களைச் சந்தித்தபோதும் எனது இதயம் கனமானது. “இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர்கள் தனியாக இல்லை என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். நாங்கள் அனைவரும் அவர்களுடன் நிற்கிறோம். மத்திய அரசு கேரள அரசுடன் நிற்கிறது. பணப் பற்றாக்குறையால் எந்தப் பணியும் தடைபடாமல் பார்த்துக்கொள்வோம்” என்று பிரதமர் மோடி கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
குழந்தைகளே ரெடியாகுங்க… வந்துடுச்சி ‘முஃபாசா : தி லயன் கிங்’ டிரெய்லர்!
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் – ரூ.38 கோடி ஒதுக்கீடு!
