மறக்கமுடியாத சாம்பியன்ஸ் டிராபி: வரலாற்றில் நிலைபெற்ற தோனியின் கேப்டன்ஷிப்!

Published On:

| By christopher

பத்து வருடத்திற்கு முன்னால் வரைக்கும் ஒரு கேப்டன் 3 ஐசிசி கோப்பையை வாங்குவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக தான் இருந்தது.

ஆனால் அந்த அசாத்தியமான அபார சாதனையை தன்னோட கூல் கேப்டன்ஷிப்பால் சாத்தியப்படுத்தி கேப்டன் தோனி சரித்திரத்தில் இடம்பெற்ற நாள் இன்று.

ஆம், 2013 ஜூன் 23 இதே நாளில் தான் தோனி, சாம்பியன் டிராபி கோப்பையை வென்று ஐசிசியின் மூன்று கோப்பையையும் வென்ற கேப்டன் என்ற மகத்தான சாதனை படைத்தார்.

கெத்தாக பைனலுக்கு சென்ற இந்தியா

2007ம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை, 2011ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி, 2013ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியையும் வெல்லும் முனைப்பில் இளம் வீரர்களுடன் களமிறங்கியது.

லீக் சுற்றில்  ”பி” பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி,  தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் என 3 அணிகளையும் அசால்ட்டாக ஜெயித்து புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்தது.

அரையிறுதியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது இந்திய அணி.

மிரட்டிய மழை… சறுக்கிய இந்தியா

தொடர்ந்து பரபரப்பான இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது இந்தியா.  ஆனால் அன்றைக்கு போட்டி நடந்த பர்மிங்ஹாம் மைதானத்தில் செம மழை பெய்தது.

10 years of icc champions trophy

எப்போடா மழை நிற்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த போது, 50 ஓவர் போட்டியை 20 ஓவராக குறைத்து நடுவர்கள் அறிவித்தார்கள்.

டாஸில் தோற்று முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு வெறும் 129 ரன் தான் அடித்தது. பெரிதாக எதிர்ப்பார்க்கப்பட்ட தோனி முக்கியமான அந்த போட்டியில டக் அவுட் ஆனதும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது.

அவ்வளவு தான் கப்பை பத்தி யோசிக்கிறது எல்லாம் இனி தப்புன்னு நினைத்தார்கள் ரசிகர்கள்.

தோனியின் பாசிட்டிவ் அணுகுமுறை

ஆனால் களத்தில் நின்றது கேப்டன் தோனி ஆயிற்றே. ஒட்டுமொத்த நாடும் டீம் தோத்துரும்னு நினைக்கும்போது அவரு மட்டும் ஜெயிப்பதை மட்டும் யோசித்துக்கொண்டு இருந்தார். அவரது பாசிட்டிவ்வான அப்ரோச் களத்தில் விளையாடிய வீரர்களுக்கும் பற்றிக்கொண்டது.

மழை பெய்த மைதானத்தில் முதலில் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோரையும், ஜடேஜா, அஸ்வின், ரெய்னா போன்ற சுழற்பந்துவீச்சாளர்களையும் வைத்து நெருக்கடி கொடுத்தார் தோனி.

அதற்கு பலனாக 46 ரன் அடிப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து.

10 years of icc champions trophy

இன்ப அதிர்ச்சி கொடுத்த இஷாந்த்

ஆனால் 5வது விக்கெட்டுக்கு இணைந்த இயான் மார்கன் மற்றும் ரவி பொபாரா கூட்டணி 64 ரன்களை சேர்த்து இந்தியாவுக்கு அல்லு காட்டியது.

கடைசி 3 ஓவரில் 28 ரன் அடிக்க வேண்டும். 5 சிக்ஸர் அடித்தால் கோப்பை இங்கிலாந்து கையில் என்ற நிலையில் எல்லோரும் பதட்டத்துடன் போட்டியை பார்த்துக்கொண்டு இருக்கும்போது, இஷாந்த் சர்மா கையில் பந்தை கொடுத்தார் தோனி.

எல்லோருக்கும் ஆச்சரியம். அப்போது உச்சக்கட்ட பார்மில் இருந்த உமேஷ் யாதவ் கையில் ஓவரை கொடுக்காமல், இஷாந்திடம் ஓவர் கொடுத்த தோனியை.. ’என்னா பண்றாரு இவருன்னு’ ஒரு கொஸ்டின் மோடில் தான் ரசிகர்கள் பார்த்தனர்.

என்ன நடக்க போகுதோன்னு என்று பார்த்துக்கொண்டிருந்த அந்த ஓவரில் தான் முதல் 2 பந்துகளில் 8 ரன் கொடுத்து கொஞ்சமாக தொங்கி கொண்டிருந்த இருந்த நம்பிக்கையை வெட்டி விட்டார் இஷாந்த். ஆனால் அடுத்த 2 பந்திலேயே இந்தியாவுக்கு பயம் காட்டிய மோர்கன் – போபரா கூட்டணியை அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க செய்து கொஞ்சம் ஹோப் கொடுத்தார்.

10 years of icc champions trophy

19வது ஓவரை ஜடேஜா கையில் கொடுக்க, அவர் 4 ரன்களை மட்டுமே விட்டுகொடுக்க, அந்த ஓவர்லயும் 2 விக்கெட் விழுந்தது.

திகில் கிளப்பிய அஸ்வின்

6 பந்துகளில் 15 ரன்னு தேவை என்ற நிலையில் யாரிடம் தோனி கடைசி ஓவர் கொடுப்பாருன்னு கேள்வி எழுந்துச்சி..

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான இங்கிலாந்து மைதானத்தில் கடைசி ஓவரை சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினிடம் நம்பிக்கையுடன் கொடுத்தார் தோனி.

என்னது கடைசி ஓவர் ஸ்பின் பெளலர் வீசுராரா என்று இதுவே திகிலா இருந்ததுனா… அஸ்வின் போட்ட கடைசி 6 பந்துகளும் அதற்கும் மேல திகிலா இருந்தது.

முதல் பந்து டாட்.. இரண்டாம் பந்தில் பவுண்டரி, மூன்றாவது பந்தில் சிங்கிள், 4 மற்றும் 5வது பந்தில் 2 ரன்கள் என 9 ரன்கள் அடித்துவிட்டார்கள்.  

இதனால், கடைசி ஒரு பந்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 6 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலைமை. ஸ்ட்ரைக்கில் ட்ரெட்வெல் இருந்தார்.

மைதானத்தில் மட்டும் இல்லாமல்… இந்த போட்டியை உலகம் முழுக்க பார்த்துக்கொண்டிந்த ஒவ்வொரு இந்தியனின் ஹார்ட் பீட்டும் லப் டப்… லப் டப்புன்னு பயங்கரமா துடிச்சது.

ஆனா தோனியோட அதே கூல் ஆட்டிடியோட உள்வாங்கி அஸ்வின் கணித்து போட்ட அந்த ஆப் டர்ன் பந்து, பேட்ஸ்மேனுக்கு டாட்டா காட்டிவிட்டு நேராக தோனியிடம் சென்றது….

அதோட சாம்பியன்ஸ் டிராபி கோப்பையும் தோனியின் கைகளுக்குள் தாவி இந்தியாவின் வசம் சேர்ந்தது.

10 years of icc champions trophy

ஐசிசி கோப்பை வென்று 10 வருடம்!

இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலேயே தோற்கடித்து, 3 ஐசிசி கோப்பைகளையும் வாங்கிய ஒரே கேப்டன் என்ற வரலாற்று பெருமையை இதே நாளில் பெற்றார் நம்ம தோனி.

அதே நேரத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு ஐசிசி கோப்பையைகூட வெல்ல முடியாமல் தடுமாறி வருகிறது இந்திய அணி. ஆனாலும் கடைசி வரை தனது போராட்ட குணத்தை கைவிடாத அணிகளுள் ஒன்றாக வலம் வருகிறது.

இந்த நிலையில் சொந்த மண்ணில் இந்தாண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டியிலாவது இந்திய ஆணி ஐசிசி உலகக்கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என்று வேண்டி வருகின்றனர் ரசிகர்கள்… வேண்டுதல் நிறைவேறட்டும்!

கிறிஸ்டோபர் ஜெமா

நிதிஷ்குமார் தலைமையில் தேர்தலை எதிர்கொள்ள பாட்னா கூட்டத்தில் முடிவு?

புதிய தேர்வுக்குழு தலைவர்: பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share