உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தேரோட்டம் இன்று (ஏப்ரல் 7) கோலாகலமாக நடைபெற்று வருகிறது. thiruvarur azhi chariot festival
திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோயில் உள்ளது. சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87ஆவது சிவத்தலமாகும். இந்த கோயில் ஆழித்தேர் ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய தேர் இதுவாகும். 350 டன் எடையும், 96 அடி உயரம் கொண்டது.
இப்படி புகழ் பெற்ற திருவாரூர் தேரோட்டம் இன்று (ஏப்ரல் 7) நடைபெற்று வருகிறது.
இதையொட்டி, கடந்த மார்ச் 15ஆம் தேதி திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது.
நேற்று இரவு 8 மணியளவில் தியாகராஜ சுவாமி, அஜபா நடனத்துடன் தேரில் எழுந்தருளினார்.
இன்று காலை 5.30 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து முக்கிய நிகழ்வான திருவாரூர் தியாகராஜர் ஆழித் தேரோட்டம் தொடங்கியது. ஆட்சியர் மோகனச்சந்திரன், எஸ்.பி. கருண்கரட், எம்.எல்.ஏ., கலைவாணன், எச்.ராஜா ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து, ‘ஆரூரா தியாகேசா’ என விண்ணைப் பிளக்கும் வகையில் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
கோலாகலமாக நடைபெற்று வரும் இந்த திருவிழாவுக்கு லட்சக்கணக்கானோர் வருகைத் தந்துள்ளனர். மக்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வரும் தேரை பார்த்து பக்தர்கள் பரவசத்தில் மூழ்கினர்.
இந்த திருவிழாவையொட்டி இன்று திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு விழாகோலம் பூண்டுள்ளது. சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கீழ ரதவீதியில் கிளம்பிய ஆழித்தேர் இன்று இரவு நிலையை அடையும்.
திருவாரூர் தேர் சிறப்பம்சம்! thiruvarur azhi chariot festival
100 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே திருவாரூரில் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது.
1925ஆம் ஆண்டு திருவாரூர் தியாகராஜர் கோயில் திருவிழாவில், பழமையான தேர் எரிந்து போனது. மீண்டும் 1930ல் புதிய தேர் செய்யப்பட்டு 1948 வரை பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், சில ஆண்டுகள் தேர் திருவிழா நடத்தப்படவில்லை.
இந்தநிலையில் தேரை பழுதுபார்த்து, புனரமைத்து 1970ஆம் ஆண்டு மீண்டும் தேரோட்டத்தை நடத்தினார் முன்னாள் முதல்வர் கலைஞர். இந்தியாவிலேயே இரும்புக் சக்கரம் கொண்ட தேர் என்ற பெருமையை பெற்றது திருவாரூர் தேர்.

திருச்சி பெல் நிறுவனத்தால் இரும்பு அச்சுகள், 4 இரும்பு சக்கரங்களுடன் எளிதில் நிறுத்தும் வகையில் ஹைட்ராலிக் பிரேக் வசதிகள் செய்யப்பட்டது.
இதில் பனஞ்சப்பைகள் 5 டன், மூங்கில் 50 டன், சவுக்கு 10 டன், கயிறு ஒரு டன், துணிகள் அரை டன், தேரின் முன்புறம் கட்டப்படும் யாழி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் என மொத்தம் 350 டன் எடை கொண்டது. ரிக், யஜூர், சாமம், அதர்வனம் ஆகிய நான்கு வேதங்களை குறிக்கும் வகையில் இந்த தேர் 4 குதிரைகளை கொண்டிருக்கும்.

400 மரச்சிற்பங்கள் உள்ளன. வேறு எங்கும் இல்லாத வகையில் இந்த தேரின் கலசத்தில் தான் வெள்ளிக் குடைகள் அமைக்கப்பட்டன.
21 அங்குலம் சுற்றளவு கொண்ட 425 அடி நீளம் கொண்ட 4 வடங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இத்தேரில் நடவாசனம், பத்மாசனம், தேவாசனம், சிம்மாசனம் என மொத்தம் நான்கு அடுக்குகள் உள்ளன.
1993 வரை இந்த தேரின் சக்கரங்கள் கட்டிங் மாடலில் இருந்ததால் தேரை வடம் பிடித்து இழுக்கும் போது மண்ணில் பதிந்துவிடும். அதை ஜாக்கி வைத்து தூக்கி நகர்த்துவார்கள். இதனால் தேர் ஊரை சுற்றி வரை சில சமயங்களில் 2 அல்லது 3 நாட்கள் கூட ஆகும்.

இந்தநிலையில் 1993ல் தேரின் முன்பக்க சக்கரங்களில் பலூன் வடிவில் அமைக்கப்பட்டன.
காலப்போக்கில் இந்த தேர் பழுதடைந்ததால் 2010ஆம் ஆண்டு மீண்டும் கலைஞர் ஆட்சியில் 3 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைப்பு செய்யப்படட்து.
திருவாரூர் திருவிழாவின் போது தியாகராஜர் புறப்பட்டு எழுந்தருளி 4 வீதிகளிலும் தேர் அசைந்து ஆடி வரும் அழகை பார்க்க கண் கோடி வேண்டும் என பக்தர்கள் கூறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. thiruvarur azhi chariot festival