திருவண்ணாமலை கோயில் தேரோட்டத்தின்போது மின் கசிவு ஏற்பட்டது குறித்து எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்த நிலையில் கோவில் நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தேர் திருவிழா இன்று (நவம்பர் 23) நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். பின்னர் பக்தி முழக்கமிட்டு கைலாச வாத்தியம் முழங்க தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
இந்நிலையில், கிழக்கு கோபுர வீதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து இன்வெர்ட்டரில் ஏற்பட்ட மின் கசிவினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் முதல் தளத்திலிருந்து கீழே குதித்ததில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
எடப்பாடி கண்டனம்!
இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “இன்று மாலை பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருத்தேர் பவனியின் போது ஏற்பட்ட மின் கசிவால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாகவும், 8 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.
திருவண்ணாமலை வரலாற்றில் திருத்தேரோட்டத்தின் போது இதுவரை மின் கசிவு ஏற்பட்டு பக்தர்கள் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வந்ததில்லை.
பொதுவாக, இதுபோன்ற திருத்தேர் பவனியின் போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, போதிய முன்னெச்சரிக்கையுடன் தேரோட்டம் நடைபெறும்.
ஆனால் இன்று நடந்த மின் கசிவினால் ஏற்பட்ட இந்த விபத்து, திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையை குறிப்பாக, அறநிலையத் துறை, மின்சாரத் துறை மற்றும் காவல் நுண்ணறிவுப் பிரிவு ஆகியவற்றின் தோல்வியையே காட்டுகிறது.
ஏற்கெனவே, இந்த திமுக அரசின் 30 மாத கால ஆட்சியில், தேரோட்டம். மற்றும் திருக்கோயில் விழாக்களின்போது விபத்துகள் ஏற்பட்ட சமயங்களில் நான், இனிவரும் காலங்களில் தேரோட்டங்களின் போதும், திருக்கோயில் விழாக்களின் போதும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறநிலையத் துறையை வலியுறுத்தி இருந்தேன்.
ஆனால், இன்று நடந்த நிகழ்வைப் பார்க்கும்போது, திருவண்ணாமலை திருத்தேரோட்டப் பாதையில் இந்த விடியா திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இனியாவது, விடியா திமுக அரசு விழித்துக்கொண்டு இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க வலியுறுத்துகிறேன்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உரிய சிகிச்சைகளை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கோவில் நிர்வாகம் விளக்கம்!
இதனையடுத்து மின்கசிவு குறித்து திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் கூறுகையில், “ கிழக்கு கோபுர வீதியில் இருந்த இன்வெட்டரால் மின் கசிவு ஏற்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
மேலும் அக்கட்டடத்தின் மின் இணைப்புகள் உடனடியாக துண்டிக்கப்பட்டதுடன், முதல் தளத்தில் உள்ளவர்களை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
எனவே, தேரோட்டத்திற்கும் இச்சம்பவத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. தேரோட்டம் பக்தர்களின் கோஷத்துடன் நல்லமுறையில் நடைபெற்று வருகிறது” என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: திமுக நடத்தும் சாதி வாரி கணக்கெடுப்பு!
பேரைச் சொல்லவா… அது நியாயமாகுமா? அப்டேட் குமாரு
