திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (நவம்பர் 17) தொடங்கியது.
கார்த்திகை மாதம் என்றாலே தீபத்திருநாள் தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். வீடுகள் மற்றும் கோவில்களில் தீபத்திருநாளன்று விளக்கேற்றி கொண்டாடுவது வழக்கம்.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா பிரசித்தி பெற்றவை.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா கார்த்திகை 1 ஆம் தேதியான இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று அதிகாலை 2 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
தொடர்ந்து உற்சவ மூர்த்திகளான விநாயகர், முருகர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் அதிகாலை 5.45 மணிக்கு 63 அடி உயரமுள்ள தங்க கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து 10 நாட்கள் காலையும் மற்றும் மாலையும் பல்வேறு வாகனங்களில் சுவாமி மாட வீதி உலா நடைபெறும்.

தொடர்ந்து வரும் 26 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவிலின் கருவறை முன்பு பரணி தீபமும் அன்று மாலை கோவிலுக்கு பின்புறம் உள்ள 2668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
இதனை முன்னிட்டு இந்த ஆண்டு திருவண்ணாமலையில் தீபத்திருநாளன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
