திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு- பரபரக்கும் நாடாளுமன்றம்!

Published On:

| By Mathi

DMK Stalin Parliament

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் திமுக எம்.பிக்கள் இன்று டிசம்பர் 5-ந் தேதி எழுப்ப இருக்கின்றனர். தமிழக நீதிமன்ற வளாகங்களிலும் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடும் என்கின்றன தகவல்கள்.

திருப்பரங்குன்றம் தர்கா அருகே உள்ள எல்லைக் கல் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு பெரும் சர்ச்சையானது.

ADVERTISEMENT

ஆனால், 1996 மற்றும் 2014-ம் ஆண்டு வழக்குகளின் தீர்ப்புகளின் அடிப்படையில் திருப்பரங்குன்றம் மலையில் பாரம்பரியமாக உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. 2014-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 2017-ல் அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்திருந்தார்.

பாஜகவினர் நேற்று 2-வது நாளாக போலீசார் தடையை மீற முயன்றதால் திருப்பரங்குன்றம் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இது தமிழக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

இந்த நிலையில் திமுக மூத்த தலைவர்கள், வழக்கறிஞர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று முதல் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம் மற்றும் தமிழக நீதிமன்றங்களில் எப்படி செயல்பட வேண்டும் என அறிவுறுத்தல்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கி உள்ளார்.

ADVERTISEMENT

நாடாளுமன்றத்தில்…

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திருப்பரங்குன்றம் விவகாரத்தை எழுப்பவும் திமுக எம்.பிக்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.

எம்.பி.க்களுக்கு உத்தரவு

மேலும் பல்வேறு பணிகளுக்காக சென்னைக்கு திரும்பிய 11 எம்.பிக்களையும் உடனடியாக டெல்லி சென்று நாடாளுமன்றத்தில் பிரச்சனையை வலியுறுத்தி பேசவும் உத்தரவிட்டுள்ளார் ஸ்டாலின். இதனடிப்படையில் மக்களவையில் டிஆர் பாலு, மாநிலங்களவையில் திருச்சி சிவா ஆகியோர் திருப்பரங்குன்றம் பிரச்சனை குறித்து சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களை கொடுத்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்தில்..

மேலும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு நேற்று தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு முன்பாக இன்று காலை வலியுறுத்தப்பட இருக்கிறது. தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி முறையிட இருக்கிறார். அப்போது, திருப்பரங்குன்றம் தீபம் பிரச்சனையில் 2017-ம் ஆண்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில்தான் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்த தீர்ப்புக்கு மாறாக தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்; இதனை இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்துள்ளது. ஆகையால் தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்; 2017-ம் ஆண்டு தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்த இருக்கிறார் அபிஷேக் சிங்வி.

தமிழக நீதிமன்றங்களில்..

இதனிடையே திருப்பரங்குன்றம் தர்கா அருகே உள்ள எல்லைத் தூணில் தீபம் ஏற்ற தாம் உத்தரவிட்டது செயல்படுத்தப்பட்டதா? என்பது குறித்து இன்று காலை 10. 30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் விசாரணை நடத்த உள்ளார். அப்போதும், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேமுறையீடு செய்துள்ளது குறித்தும் 2017-ம் ஆண்டு தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படுகிறது என்கிற வாதமும் முன்வைக்கப்பட உள்ளது.

அத்துடன், தனிநீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் உத்தரவால் தமிழகத்தில் மத மோதல் அபாயம் உருவாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share