திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே எல்லைக் கல் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட விவகாரத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் இன்று டிசம்பர் 5-ந் தேதி காலை 10.30 மணிக்கு விசாரிக்கிறார்.
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு தள்ளுபடி செய்தது. இதனையடுத்து தாம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாத தமிழக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நேற்று டிசம்பர் 4-ந் தேதி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மீண்டும் விசாரித்தார்.
அப்போது, திருப்பரங்குன்றம் தர்கா அருகே உள்ள எல்லைக் கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும்; மனுதாரருக்கு காவல்துறை பாதுகாப்பு தர வேண்டும்; திருப்பரங்குன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை ரத்து செய்கிறேன் என நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். தமது உத்தரவை செயல்படுத்தியது தொடர்பாக இரவு 10.30 மணிக்கு விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் கூறியிருந்தார்.
ஆனால், திருப்பரங்குன்றம் மலையில் மனுதாரர் உட்பட பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினர் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்வதால் அனுமதிக்க முடியாது என்பதில் போலீசார் உறுதியாக இருந்தனர். இதனால் திருப்பரங்குன்றத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் போலீசார் தடையை மீற முயன்றதால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான விசாரணை நேற்று இரவு 10.30 மணிக்கு நடைபெறவில்லை. இந்த விசாரணை இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
