திருப்பரங்குன்றம் மலையில் தர்கே அருகே உள்ள நில அளவைக் கல்தூணில் தீபம் ஏற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் இன்று விசாரிக்கிறார்.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் நாளன்று தர்கா அருகே உள்ள நில அளவைக் கல்லில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் உத்தரவு பெரும் சர்ச்சையானது.
ஆனால் மதுரை மாவட்ட நிர்வாகம் இதற்கு அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளதால் தர்கா அருகே உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது என்பது தமிழக அரசின் நிலைப்பாடு.
இது தொடர்பாக மனுதாரர் ராம ரவிக்குமார் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கடந்த 5-ந் தேதி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் விசாரித்தார். அப்போது, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதனால் இவ்வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று (டிசம்பர் 9) பகல் 12 மணிக்கு இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் விசாரிக்கிறார்.
