திருப்பரங்குன்றம் தீபம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

Published On:

| By Mathi

thiruparankundram Supreme Curt

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் மனுதாரரான ராம ரவிக்குமார் உச்சநீதிமன்றத்தில் இன்று (டிசம்பர் 4) தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. முன்னதாக மனுதாரர் ராம ரவிக்குமார், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார்.

திருப்பரங்குன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக உச்சிப் பிள்ளையார் கோவில் மலைப் பகுதியில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. ஆனால் ராம ரவிக்குமார் என்ற மனுதாரர், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா அருகே இருக்கும் எல்லைக் கல் தூண்தான், தீபம் ஏற்றும் தூண்; அங்குதான் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

இம்மனுவை விசாரித்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், தர்கா அருகே உள்ள எல்லைக் கல் தூணில் ராம ரவிக்குமாரும் 10 பேரும் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதித்தார். ஆனால் கார்த்திகை தீப நாளான நேற்று, மரபுப்படி உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள ஓம் முருகா பலகை வைக்கப்பட்டுள்ள பகுதியிலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

இதனால் உடனடியாக ராம ரவிக்குமார், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த ஜிஆர் சுவாமிநாதன், CISF பாதுகாப்பு வீரர்களுடன் தர்கா அருகே ராம ரவிக்குமார் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டார்.

ADVERTISEMENT

ஆனால் மதுரை மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்ததால் ராம ரவிக்குமார் மற்றும் அவருக்கு ஆதரவாக திரண்ட இந்துத்துவா அமைப்பினருக்கு மலை மீது ஏற போலீசார் அனுமதி அளிக்கவில்லை. மேலும் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவும் தாக்கல் செய்தது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் அமர்வு இன்று தமிழக அரசு மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில், தமிழக அரசின் மனுவை நீதிபதிகள் டிஸ்மிஸ் செய்தனர்.

ADVERTISEMENT

இதனையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், தர்கா அருகே உள்ள எல்லைக்கல் தூணில் ராம ரவிக்குமார் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும்; மதுரை காவல்துறை பாதுகாப்பு தர வேண்டும் என்று உத்தரவிட்டார். அத்துடன் 144 தடை உத்தரவையும் ரத்து செய்தார்.

அதே நேரத்தில் பெரும் எண்ணிக்கையில் பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினர் திருப்பரங்குன்றத்தில் திரண்டதால் போலீசார் மீண்டும் அனுமதி மறுத்தனர். தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய உள்ளதால் பாஜகவினர் அனைவரும் கலைந்து செல்ல போலீசார் அறிவுறுத்தினர். ஆனாலும் பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினர் பிடிவாதமாக மலையேற முயன்றனர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவிய நிலையில் பாஜகவினருக்கு ஆதரவாக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரனும் இணைந்து கொண்டு போராட்டம் நடத்தினார். இதனால் பாஜகவினரும் இந்துத்துவா அமைப்பினரும் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே திருப்பரங்குன்றம் வழக்கின் மனுதாரரான ராம ரவிக்குமார் உச்சநீதிமன்றத்தில் இன்று கேவியட் மனுவைத் தாக்கல் செய்தார். அதில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தால் தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என அவர் வலியுறுத்தினார்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது, இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி பெஞ்சிடம் நாளை டிசம்பர்5-ந் தேதி தமிழ்நாடு அரசு தரப்பில் முறையிட இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share