ரவிக்குமார்
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக ஒரு பிரச்சினையை சில பிரிவினைவாதிகள் எழுப்பி வருகின்றனர். நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் திருப்பரங்குன்றத்தில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அங்குதான் தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்குப் பழமையான கல்வெட்டு ஆதாரமும் உள்ளது. அதை மாற்றி விட்டு அங்கே இருக்கும் தர்காவுக்கு அருகில் உள்ள எல்லைக் கல்லின் மீது தீபம் ஏற்ற வேண்டும் என்று மதவாதப் பிரிவினைவாதிகள் பிரச்சினை எழுப்பி வருகின்றனர். அதற்கு நீதிமன்றத்தை அவர்கள் பயன்படுத்தப் பார்க்கின்றனர்.
தீர்ப்புகள் சொல்வது என்ன?
2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சியமைந்ததுமே இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. 2017 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கல்யாண சுந்தரம் , நீதிபதி பவானி சுப்பராயன் ஆகிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்த வழக்கை விசாரித்தது. “ தற்போது தீபம் ஏற்றப்பட்டு வரும் இடத்திலேயே தொடர்ந்து தீபம் ஏற்ற வேண்டும்” என்று அது தீர்ப்பளித்தது. ( W.A ( MD) No 1524 of 2014 Dated 07.12.2017)
‘தற்போது தீபம் ஏற்றப்பட்டு வரும் இடம் மோட்ச தீபத்துக்கு அருகில் உள்ளது. எனவே, அங்கு கார்த்திகை தீபம் ஏற்றுவது ஆகம விதிகளுக்கு முரணானது என்றும்; தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்றும்’ அப்போது வாதிடப்பட்டது. ‘மோட்ச தீபத்துக்கு அருகில் கார்த்திகை தீபம் ஏற்றக்கூடாது என எந்த ஆகம விதி கூறுகிறது என்பதை மனுதாரர்கள் நிரூபிக்கவில்லை’எனக் குறிப்பிட்ட நீதிமன்றம், “தற்போது கார்த்திகை தீபம் ஏற்றப்படும் இடத்தில் தான் பல பத்தாண்டுகளாகத் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அமைதியாக மத நல்லிணக்கத்தோடு அது நடைபெற்று வருகிறது. அந்த அமைதியையும் மத நல்லிணக்கத்தையும் ஏன் சீர்குலைக்க வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பியது.
இதே போன்ற இன்னொரு வழக்கில் உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டிய நீதிமன்றம் , அமைதியும் நல்லிணக்கமும் பேணப்பட வேண்டும் என்பது அதில் வற்புறுத்தப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டியது. அதன் அடிப்படையில் அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
1996 ஆம் ஆண்டிலும் இதேபோலத்தான் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்ற வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது. அப்போது, “திருப்பரங்குன்றம் மலையில் தேவஸ்தானம் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும்” என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. “உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் உள்ள பாரம்பரிய மண்டபத்தில் தீபம் ஏற்ற வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டு உத்தரவில், “எதிர்காலத்தில், தேவஸ்தானம் மலையில் உள்ள வேறு எந்த இடத்திலும் தீபம் ஏற்ற அனுமதிக்கலாம், ஆனால் அதற்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதியைப் பெற வேண்டும், மேலும் அவ்வாறு அனுமதிக்கப்படும் இடம் 1920 ஆம் ஆண்டு ஆணையின் கீழ் ஒதுக்கப்பட்ட தர்கா, படிகள் மற்றும் நெல்லித்தோப்பு பகுதிகளிலிருந்து குறைந்தது 75 மீட்டருக்கு அப்பால் இருக்கவேண்டும்” என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
1996 ஆம் ஆண்டில் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு, 2017 இல் மதுரை கிளையின் இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பு ஆகியவற்றுக்கு மாறாகத் தற்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தர்காவுக்கு அருகில் உள்ள எல்லைக் கல்லைத் ‘தீபத் தூண்’ எனக் குறிப்பிட்டு அங்கு தீபம் ஏற்ற வேண்டும் எனப் புதிய உத்தரவைப் பிறப்பித்ததோடு, ‘அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் இல்லாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ எனவும் அதிரடியாக அறிவித்தார்.
சட்டமும் தெய்வீகமும்

அத்தோடு நில்லாமல் நீதிமன்றப் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருக்கும் மத்திய தொழில் நிறுவனப் பாதுகாப்புப் படை ( CISF) வீரர்களை அனுப்பி அந்த உத்தரவை செயல்படுத்துவதற்கும் ஆணையிட்டார். இந்த சட்ட விரோத உத்தரவைத் தடுத்து நிறுத்துவதற்குத் தமிழ்நாடு அரசு செய்த மேல்முறையீட்டை மதுரை கிளையின் இரண்டு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்து நீதிபதி. ஜி. ஆர். சுவாமிநாதனின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை தொடரும் எனக் கூறியுள்ளது.
ஜி.ஆர்.சுவாமிநாதன் மட்டுமின்றி அந்த இரண்டு நீதிபதிகளும்கூட 2017 இல் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்தத் தீர்ப்பைப் பற்றிப் பேசாதது வியப்பளிக்கிறது. இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பை மாற்ற வேண்டுமெனில் அதைவிட அதிக எண்ணிக்கையிலான நீதிபதிகள் கொண்ட அமர்விலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோதான் வழக்கு தொடுக்க வேண்டும். ஒரு தனி நீதிபதி அதைச் செய்யமுடியாது. இந்த சாதாரண நடைமுறையைக் கூட நீதிபதிகள் பார்க்காதது ‘ ஆத்திரம் அறிவுக்கு சத்துரு’ என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது. இந்தப் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு இப்போது உச்சநீதிமன்றத்துக்குச் சென்றுள்ளது.
சட்டத்தின் முதன்மையான பணி என்னவென்று கேட்டால் சமூக ஒழுங்கைக் காப்பதுதான் என நாம் தயங்காமல் பதில் சொல்வோம். ஆனால், ‘சமூகத்தின் குறைபாடுகளைக் களைவதுதான் சட்டத்தின் பணி’ என்றார் அம்பேத்கர். ஒரு நாட்டின் நாகரிகத்துக்கும் அதன் சட்டங்களுக்கும் இருக்கும் தொடர்பை சுட்டிக்காட்டிய அவர், பண்டைய சமூகங்களுக்கும் நவீன சமூகங்களுக்கும் இருக்கும் முக்கியமான வேறுபாடு பண்டைய சமூகங்களில் சட்டம் என்பது தெய்வீகத் தன்மை கொண்டதாகவும், மாற்றப்பட முடியாததாகவும் கருதப்பட்டது. ஆனால் நவீன சமூகங்களிலோ காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ப அது மாற்றங்கண்டு வருகிறது எனக் குறிப்பிட்டார். ”சட்டத்தைத் தெய்வீகத் தன்மை கொண்டதாகக் கருதிய சமூகங்கள் வளர்ச்சி காணாமல் தேங்கிப் போய்விட்டன. அப்படியான நாட்டுக்கு இந்தியா நல்லதொரு உதாரணம்” என்று அவர் விமர்சித்தார்.
அரசமைப்புச் சட்டம் vs மநு சட்டம்

இந்திய சமூகம் எல்லா காலங்களிலும் அப்படி இருக்கவில்லை. “ உலகில் இந்தியாவைப்போல புரட்சிகள் பலவற்றைக் கண்ட நாடு வேறு எதுவும் இருக்கமுடியாது. ஐரோப்பியர்கள் போப்பாண்டவரின் அதிகாரத்தைக் கேள்வி கேட்பதற்கு முன்பே தெய்வீகத் தன்மை பொருந்தியதெனக் கூறப்பட்ட சட்டத்துக்கும் மதச்சார்பற்ற சட்டத்துக்கும் இடையிலான மோதலை இந்தியா பார்த்துவிட்டது. மதச்சார்பற்ற சட்டத்துக்கான அடித்தளத்தை நாம் கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் பார்க்கலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இங்கே ’தெய்வத்தின் சட்டம்’வெற்றிபெற்றுவிட்டது. அதுதான் இந்தியா சந்தித்த பேரழிவுகளிலேயே முக்கியமானது” என்றார் அம்பேத்கர்.
‘தெய்வீக சட்டம்’ என அம்பேத்கர் குறிப்பிட்டது ‘சனாதனம்’ என்று பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் மநு சட்டத்தைத் தான். அந்த மநு சட்டத்தை அகற்றிவிட்டு அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்புச் சட்டம் 1950 இல் இந்திய அரசால் ஏற்கப்பட்டது. அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகும்கூட மநு வாதிகள் அதை ஏற்கவில்லை. அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றனர். அதற்குக் கட்டமைப்பு ரீதியான நிறுவன ஆதரவை ஆர்.எஸ்.எஸ் வழங்கிவருகிறது.
பாஜக அரசு பொறுப்பேற்றவுடன் நீதிபதிகளை நியமிப்பதற்கு ஆணையம் ஒன்றை உருவாக்கிச் சட்டம் இயற்றியது. அதை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டுத் தற்போது நடைமுறையிலுள்ள கொலிஜியம் முறையே தொடரும் என அறிவித்துவிட்டது. அதைப் பார்த்த நாமும் நீதித்துறையில் ஆட்சியாளர்களின் தலையீடு இனிமேல் இருக்காது என்றே நம்பினோம். ஆனால், அந்தத் தீர்ப்புக்குப் பிறகு கொலிஜியம் முறையே ஆட்சியாளர்களின் விருப்பத்துக்கு இசைவு தெரிவிக்கும் ஒன்றாக மாறிவிட்டது. அதனால்தான் தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான தீர்ப்பை எதிர்த்து அவசர சட்டம் இயற்றியதுபோல பாஜக அரசு NJAC தீர்ப்பை எதிர்த்து எதுவும் செய்யவில்லை.
நீதிபதிகள் நியமனம், இடமாற்றல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்துக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கும் இடையே ஏற்பட்ட எழுதப்படாத ஒப்பந்தத்தின் விளைவாக ஆர்.எஸ்.எஸ்சில் பயிற்சி பெற்ற பலர் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த நீதிபதிகள் ‘அரசமைப்புச் சட்டத்தைக் காப்போம்’ என உறுதிமொழி எடுத்திருந்தாலும் மநு சட்டத்தின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்குகின்றனர். அதன் வெளிப்பாடுதான் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவு.
அம்பேத்கரின் நம்பிக்கை

நீதிபதிகளும் ஆட்சியாளர்களும் கூட்டு சேர்ந்துவிட்டால் இந்திய ஜனநாயகம் அழிந்துவிடும் என்ற அச்சம் அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட நேரத்திலேயே எழுப்பப்பட்டது. அரசியல் நிர்ணய சபையில் நீதித்துறை மீதான விவாதங்கள் நடந்த நேரத்தில், ’நீதிபதிகள் ஓய்வு பெற்றபிறகு வேறு பதவிகளில் நியமிக்கப்படுவதைத் தடுக்கவேண்டும்’ என்ற திருத்தத்தை ஒரு உறுப்பினர் கொண்டுவந்தார்.
ஆனால் அதை அம்பேத்கர் நிராகரித்தார். “நீதித் துறையானது குடிமக்களுக்கிடையே உள்ள வழக்குகளைத்தான் பெரும்பாலும் கையாளப்போகிறது. அரசாங்கத்துக்கும் குடிமக்களுக்கும் இடையே மிகவும் அரிதாகத்தான் வழக்கு உண்டாகும்” எனவே, ‘நமது நீதிபதிகள் நிர்வாகத் துறையாலோ ஆட்சியாளர்களாலோ செல்வாக்குக்கு ஆளாக்கப்படுவார்கள் என்ற அச்சம் தேவையற்றது’ என அம்பேத்கர் விளக்கமளித்தார். ஆனால் அம்பேத்கரின் நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது என்பதையே ஜி.ஆர்.சுவாமிநாதன் போன்ற நீதிபதிகளின் நடவடிக்கைகள் நமக்குக் காட்டுகின்றன.
மநுவாத கருவி

நமது ஜனநாயக அமைப்பில் நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் ‘சீராய்வு’ என்னும் உச்சபட்ச அதிகாரம் அவர்களது கல்வியினாலோ, தனிப்பட்ட திறமைகளினாலோ கிடைத்ததல்ல, அது, அரசமைப்புச் சட்டம் அவர்களுக்கு அளித்துள்ள மிகப்பெரிய பொறுப்பாகும். ஆனால், அதை அவர்கள் ஜனநாயகமான முறையில் பயன்படுத்துகிறார்களா என்ற கேள்வி இன்று எழுந்துள்ளது.
ஜி.ஆர்.சுவாமிநாதன் போன்ற நீதிபதிகள் தமது தீர்ப்புகளின் மூலம், நீதித்துறையை மநுவாத செயல்திட்டத்தைச் செயல்படுத்தும் கருவியாக மாற்றிவருகின்றனர். இது அரசமைப்புச் சட்டத்தை அழிக்கும் செயல் தவிர வேறல்ல.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதை முன்வைத்து எழுப்பப்பட்டிருக்கும் பிரச்சினை இதுவரை சில பிரிவினைவாதிகளுக்கும் அறநிலையத்துறைக்கும் இடையிலானதாக இருந்தது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதை மநு வாதத்துக்கும் அரசமைப்புச் சட்டத்துக்கும் இடையிலான மோதலாக மாற்றியிருக்கிறார். அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கவேண்டும் என எண்ணுபவர்கள் இனி வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருக்க முடியாது.
கட்டுரையாளர் குறிப்பு

முனைவர் டி.ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் (விழுப்புரம் மக்களவைத் தொகுதி), எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்.
