திருப்பரங்குன்றம் விவகாரம் :  அமைதியை சீர்குலைக்க முடியாது – எடப்பாடிக்கு  அமைச்சர் ரகுபதி பதிலடி!

Published On:

| By Kavi

திருப்பரங்குன்றம் விவகாரத்தை தொடர்ந்து அமைச்சர் ரகுபதிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது. 

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற நேற்று (டிசம்பர் 3) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்  உத்தரவு பிறப்பித்தார். ஆனால் தமிழக அரசு இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ததன் காரணமாக போலீசார் அனுமதிக்கவில்லை. 

ADVERTISEMENT

இந்த மேல்முறையீட்டு மனு இன்று (டிசம்பர் 4) தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மாலைக்குள் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற மீண்டும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். 

இதன் காரணமாக நேற்று முதல் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. 

ADVERTISEMENT

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி,  “ மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை செயல்படுத்தத் தவறி, இதனால் கடந்த இரண்டு நாட்களாக தேவையில்லாத ஒரு பதற்றத்தை உண்டாக்க கபட நாடகம் ஆடும் திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘எம்மதமும் சம்மதம்’ – எம்மதத்தையும் சாராமல், நடுநிலையோடு ஆட்சி புரிபவர் சிறந்த ஆட்சியாளர் என்பதை மறந்து தேவையற்ற பிரச்சனைக்கு வழிவகுத்த மாடல் அரசுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT

இதற்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்திருக்கிறார். 

அவர் தனது எக்ஸ் பதிவில், “பாஜக RSS ன் கைக்கூலியாக மாறி அண்ணாதிமுகவை அமித்ஷாதிமுக வாக மாற்றிய அடிமை பழனிசாமி, தமிழ்நாட்டு மக்களின் நலனைப் பற்றி துளியும் அக்கறையின்றி அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் கலவரம் செய்ய துடிக்கும் கயவர்களுக்குத் துணைபோய் நிற்பது வெட்கக்கேடு.

மதப்பிரிவினைவாத சக்திகளும் , அடிமைக் கைக்கூலிகளும் எவ்வளவு முயன்றாலும், முதலமைச்சர் ஸ்டாலின்  இருக்கும் வரை தமிழ்நாட்டின் அமைதியைச் சீர்குலைக்க முடியாது. மதங்களைக் கடந்து உறவுகளாய் வாழ்ந்துவரும் தமிழ்நாட்டு மக்களிடம் உங்களின் தகிடுதத்தம் எதுவும் எடுபடாது. எதிரிகளுக்கும் , துரோகிகளுக்கும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share