திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் அனைத்து தரப்பினரும் பதில் மனுவை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. thiruparankundram Hill case
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாஷா தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்க கோரி மதுரையை சேர்ந்த கண்ணன் உள்ளிட்ட பலர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில், “திருப்பரங்குன்றம் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. பாண்டிய மன்னன் காலத்தில் கட்டப்பட்ட கோயிலின் தென்பகுதியில் உமையாண்டார் குகை உள்ளது. 11 தீர்த்த குளங்களும் அமைந்துள்ளன. இந்த கோயிலில் எந்தவிதமான உயிர் பலியிடுதலும் செய்தல் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் சிக்கந்தர் பாஷா தர்காவின் சார்பில் ஆடு மற்றும் கோழிகளை பலியிடுவதாக தெரிவிக்கப்பட்டது. இது மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே திருப்பரங்குன்றம் மலையில் உயிரினங்களை பலியிடுவதற்கும் சமைத்து சாப்பிடுவதற்கும் தடை விதிக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலையை ஒன்றிய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும். திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என குறிப்பிடப்படுகிறது. இப்படி அழைப்பதற்கும் தடைவிதித்து திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று மலை என அறிவிக்க வேண்டும். மலையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்களை தொழுகை நடத்த அனுமதிக்க கூடாது என உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி அமர்வில் இன்று(மார்ச் 3) விசாரணைக்கு வந்தது.
அப்போது தொல்லியல் துறை சார்பில் திருப்பரங்குன்றம் மலையின் பரப்புகளை அளவிடுவது தொடர்பாக ஆட்சியரிடம் அனுமதி கோரிய நிலையில் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக அனைத்து தரப்பினரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவிட்ட நீதிபதிகள் அன்றைய தினம் ட்ரோன் அளவீடு செய்வதற்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என கூறி வழக்கை மார்ச் 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். thiruparankundram Hill case