திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி வரும் டிசம்பர் 13ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபமேற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால் இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. எனவே போலீசாருக்கும் அரசுக்கும் எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக திமுக எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
இந்த சூழலில் திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த பிரபு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், ‘ திருப்பரங்குன்றம் மலைக்கோயில் 2000 ஆண்டுகள் பழமையானது. 1926ல் உரிமையியல் பிரச்சனை எழும் வரை தீபத் தூணில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது.
அதன்படியே இந்த தீபத் தூணில் தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.
எனவே நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி திருப்பரங்குன்றத்தில் அமைதியான முறையில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது.
ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.
எனவே வரும் டிசம்பர் 13ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பரங்குன்றம் மயில் மண்டபம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு இன்று (டிசம்பர் 11) விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு சார்பில், மனுதாரர் கோரும் இடத்துக்கு பதிலாக மாற்று இடத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, மனுதாரர் கேட்கும் இடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தலாம். 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். போராட்டத்தின் போது தனி நபர்களையோ அரசியல் கட்சியினரையோ தாக்கும் வகையில் பேசக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார்.
