வழக்கத்தை மாற்ற முடியாது – திட்டவட்டமாக வாதம் முன்வைத்த அரசு – திருப்பரங்குன்றம் வழக்கு ஒத்திவைப்பு!

Published On:

| By Kavi

திருப்பரங்குன்றம் தீப விவகார வழக்கை டிசம்பர் 15ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்தி வைத்துள்ளது. 

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற கடந்த டிசம்பர் 1ஆம் தேதி நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். 

ADVERTISEMENT

ஆனால் இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. 

இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தது. 

ADVERTISEMENT

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் இன்று (டிசம்பர் 12) விசாரணைக்கு வந்தது. 

அப்போது தமிழக அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன் ஆஜராகி, வழக்கமாக திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலில் தான் தீபம் ஏற்றப்படும். இந்த வருடமும் அவ்வாறே ஏற்றப்பட்டது. எனினும் ராம ரவிக்குமார், தீப தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்குமாறு கோயில் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். அந்த தீபத் தூண் தர்காவின் அருகில் உள்ளது. 

ADVERTISEMENT

73 ஆண்டுகளாக உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது. 1994ல் தான் பிரச்சனை ஏற்பட்டு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது போன்று முன்னதாக நடைபெற்ற வழக்குகளில் கிடைத்த தீர்ப்புகளும் உள்ளன. 

இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி வேறு இடத்தில் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளார்.

இது பொதுநல வழக்கல்ல… தனிப்பட்ட நலம் சார்ந்த வழக்கு. அரசியலமைப்புச் சட்டம் 226 ஐ பயன்படுத்தி ஒரு புதிய வழக்கத்தை உருவாக்கவோ அல்லது நீண்ட கால வழக்கத்தை மாற்றியமைக்கவோ யாராலும் முடியாது. இது நீதிமன்ற அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது. குறிப்பிட்ட தூணில் தீபம் ஏற்றப்பட்டது என்பதற்கான எந்த ஒரு வரலாற்று ஆதாரமும் தனி நீதிபதி முன் சமர்ப்பிக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.

சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி, இந்த உத்தரவு அனுமதிக்கப்பட்டால் எண்ணற்ற புதிய வழக்குகளுக்கு வழிவகுக்கும். கோயிலை நிர்வகிப்பது கடினமாகிவிடும்’ என்று தெரிவித்தார். 

இந்த நிலையில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன், 1920 முதல் இந்த விவகாரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சமூகங்கள் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில் இந்த விவகாரத்தில் ஒரு நிரந்தர தீர்வை காண முடியுமா. இது தொடர்பாக ஒரு சரியான மனுவை பக்தர்கள் சமர்ப்பித்தால் அதை பரிசீலிக்க அரசு தயாராக இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். 

இதற்கு அரசு சார்பில், ஒரு பக்தர் கேட்பது அனுமதிக்கப்பட்டால் எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இது போன்ற உரிமைகளை கேட்டு வரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 15ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share