விசிகவின் மது, போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் பங்கேற்கலாம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இமானுவேல் சேகரனின் நினைவு நாளான இன்று (செப்டம்பர் 11), விழுப்புரத்தில் அவருக்கு மரியாதை செலுத்திவிட்டு, கட்சியில் புதிதாகச் சேர்ந்துள்ள உறுப்பினர்களுக்குக் கட்சி சால்வை வழங்கி அவர்களை விசிக தலைவர் திருமாவளவன் கௌரவித்தார்.
இதற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்து “ இமானுவேல் சேகரனுக்கு வீரவணக்கம் செலுத்தினோம். கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜியின் தலைமையில் விசிக பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு வீர வணக்கம் செலுத்த உள்ளனர்.
விசிகவின் கோரிக்கையை ஏற்று, இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்டிக்கொண்டு இருக்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி விசிக சார்பில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்தவிருக்கிறோம். காந்தியடிகள் இதற்காகப் பல அற வழி போராட்டங்களை நடத்தி இருக்கிறார்.
அவரின் மாணவரான பெரியார், தனது தோட்டத்திலிருந்த தென்னை மரங்களை வெட்டி எறிந்தார்.
அம்பேத்கர் அன்றைய பாம்பே சட்டமன்றத்தில் மது ஒழிப்பின் முக்கியத்துவத்தை குறித்துப் பேசியுள்ளார். பௌத்த மதத்தைத் தழுவும் நபர்கள் ஒவ்வொருவரும் 22 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும். அதில் மதுவைத் தொடக்கூடாது என்பதும் ஒன்று.
இவர்களின் வழியில், நாங்கள் இன்று மது ஒழிப்பு போராட்டத்தை வெகு மக்கள் போராட்டமாக முன்னெடுக்கவுள்ளோம்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இளையபெருமாள், மது விலக்கைத் தமிழக அரசு ரத்து செய்த போது சட்டமன்றத்தில் அதை எதிர்த்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான மகளிரை ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளோம். இவர்கள் மட்டுமின்றி கட்சிசார்பற்ற அனைத்து மக்களும் இந்த அறப்போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் திமுக , அதிமுக போன்ற எல்லா கட்சிகளும் மதுவை ஒழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கும் போது, அரசு மதுபானக்கடைகளை ஏன் படிப்படியாகக் குறைத்து, மதுவை முற்றாக ஒழிக்க கூடாது? “ என்று திருமாவளவன் பேசினார்.
அப்போது அவரிடம் நடிகர் விஜய் கட்சிக்கும் அழைப்பு விடுப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு திருமாவளவன், “ பாஜக மற்றும் பாமகவிற்கு நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை. அவர்கள் மதவாத மற்றும் சாதியவாத அரசியலை நடத்துகிறார்கள் அதனால்தான் அழைப்பு விடுக்கவில்லை. அவர்களுடன் எப்போதும் இணையமாட்டோம். தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கியுள்ள விஜய்யும் இந்த மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாம்” என்று தெரிவித்தார்.
ஏற்கனவே அதிமுகவை இந்த மாநாட்டிற்கு அழைத்த திருமாவளவன் இன்று விஜய்யையும் அழைத்திருப்பதால், அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….