திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில் கூட்டணி உடையும் என்கிற கனவில் மண் விழுந்தது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் தேமுதிகவை வரவேற்றுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (பிப்ரவரி 19) அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, திமுக கூட்டணியில் இணைந்தார்.
இது குறித்து மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,”திமுக கூட்டணி ஏற்கனவே பலமாகத்தான் உள்ளது. வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி. தித்திப்பான செய்தி. மகிழ்ச்சியோடு தேமுதிக வரவை வரவேற்கிறோம். திமுக அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற உள்ளது. திமுக கோட்டை மேலும் வலுப்பெற்றுள்ளது. இதனால் எதிர்த்தரப்பு கலகலத்துக் கொண்டிருக்கிறது” என்றார்.
அப்போது, மதிமுகவுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு கிடையாது. தொண்டர்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கலாம்; அது இயற்கை” எனத் தெரிவித்தார்.
பின்னர் விஜய் குறித்து பேசுகையில், “களம் ஒன்றும் மாறவில்லை. விஜய் கற்பனை உலகில் திளைத்துக் கொண்டிருக்கிறார். ஆகாயத்தில் கோட்டை கட்டிக் கொண்டுள்ளார். ‘நானே ராஜா’ என அவர் மனதிற்குள் தோன்றுவதைப் பேசிக் கொண்டிருக்கிறார். அவரைச் சுற்றி அரசியல் நடப்பதாக ஊடகங்கள் ஒரு பிரம்மையை உருவாக்குகின்றன. கூட்டத்தை வைத்து எதையும் தீர்மானிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.
தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்தது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் பதிவில், “திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது பெருமகிழ்வளிக்கிறது.
இக்கூட்டணி மேலும் வலிமை மிக்கதாக மாறியுள்ளது.
எம் உறுதியான வெற்றிக்கு ஏதுவாக அமையும். அரசியல் பகைவர்களின் அடிவயிறு குமையும்.
திமுக கூட்டணி உடையும் என்கிற அவர்களின் கனவில் மண் விழுந்தது.
கலைஞரின் கனவு நனவாகும் வகையில் பழம் நழுவி பாலில் விழுந்தது.” என தெரிவித்துள்ளார்.
