”ஆளுநரை பதவி நீக்கம் செய்யுங்கள்” : ஜனாதிபதிக்கு திருமாவளவன் வலியுறுத்தல்!

Published On:

| By christopher

dismiss the Governor rn ravi

தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி பதவி விலக வேண்டும், இல்லாவிட்டால் குடியரசுத் தலைவர் அவரைப் பதவி நீக்கம் செய்யவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (மார்ச் 23) வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு ஆளுநர் விதித்தத் தடைகளையெல்லாம் மீறி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் காரணமாக பொன்முடி மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது திமுக அரசுக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்துக்குக் கிடைத்த வெற்றியும் ஆகும்.

சட்ட ரீதியாகப் போராடி வெற்றி கண்ட பொன்முடிக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமார்ந்தப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பொன்முடிக்கு உயர் நீதிமன்றம் அளித்த தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. அதனால் பொன்முடி மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக நீடிக்கிறார் எனத் தமிழ்நாடு சட்டப்பேரவை செயலர் அறிவித்தார். அதனையடுத்து அவருக்கு மீண்டும் பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஆளுநரை கேட்டுக்கொண்டார்.

உச்சநீதிமன்ற அவமதிப்பு!

ஆனால் ‘உச்ச நீதிமன்றம் தண்டனையைத் தான் நிறுத்தி வைத்திருக்கிறது அவரை நிரபராதி என்று சொல்லவில்லை எனவே நான் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மாட்டேன்’ என்று ஆளுநர் குதர்க்கமான ஒரு விளக்கத்தைக் கொடுத்தார். ஆளுநரின் செயல் சட்டத்துக்குப் புறம்பானது மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பதாகும்.

மீண்டும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியபோது தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆளுநரைக் கடுமையாகக் கண்டித்தது மட்டுமின்றி ‘உடனடியாகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும், இல்லாவிட்டால் நாங்கள் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிக்க நேரிடும்’ என்று எச்சரித்தது. அதன் பிறகு இப்போது ஆளுநர் பொன்முடிக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்கிறார்.

உச்சநீதிமன்றத்துக்குத் தவறான தகவல்களை அளிப்பது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் புறக்கணிப்பது, அரசமைப்புச் சட்டத்துக்கு மாறாக நடந்து கொள்வது, ஆளுநருக்கான மரபுகளை மீறி அரசியல் ரீதியாகத் தலையிடுவது என்று தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

அவருக்கு அரசியலில் ஆர்வம் இருந்தால் தமிழிசை செய்ததைப் போல பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடுவதுதான் முறை. அதை விட்டுவிட்டு ஆளுநர் பதவியில் இருந்து கொண்டே ஒரு அரசியல்வாதியைப் போல செயல்படுவதும், அரசமைப்புச் சட்டத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் அவமதிப்பதும் ஏற்புடையது அல்ல.

பதவி விலக வேண்டும்!

இப்போது உச்ச நீதிமன்றம் கண்டித்தது போல இதுவரை எந்த ஆளுநரையும் உச்ச நீதிமன்றம் இதுவரை கண்டித்தது இல்லை. ‘ஆளுநருக்கு சட்டம் தெரியுமா? தெரியாதா? ‘ என்று கேட்ட உச்ச நீதிமன்றம், “ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்ததன் மூலம் உச்ச நீதிமன்றத்தை அவமதித்துள்ளார்.

முதல்வரின் தனிப்பட்ட அதிகாரத்தில் தலையிட்டுள்ளார். அரசியல் சாசனத்தை ஆளுநர் முறையாகப் பின்பற்றவில்லை” என்றெல்லாம் கடுமையாக கண்டனங்களைத் தெரிவித்து இருக்கிறது.

இதற்குப் பிறகும் ஆளுநர் பதவியில் அவர் தொடர்வது நாட்டுக்கு உகந்ததல்ல. எனவே அவர் தாமே முன்வந்து பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

ஆளுநர் பதவி விலகாவிட்டால் அரசமைப்புச் சட்டத்தின் மாண்பைப் பாதுகாப்பதற்காக குடியரசுத் தலைவர் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்!

ராகுல் சிபாரிசு செஞ்சும் நடக்கலையா? காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share