தம்மை இளைய சமூகத்துக்கு ‘பெரியார்’ என எடுத்துக்காட்டாக சொன்ன நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் தந்தை பெரியாரை இழிவுபடுத்தும் வகையில், “பெரியாரைப் போற்றுவோம்” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடத்தினார் சீமான். தமிழர் தலைவர் தந்தை பெரியாரைத் தவிர பிராமணர்கள் உள்ளிட்டோரையும் பெரியார் என்ற பட்டியலில் சேர்த்திருந்தார் சீமான். மேலும் அந்நிகழ்ச்சியில் பேசுகையில், ராமதாஸ் – திருமாவளவன் ஆகியோரும் எங்களுக்கு பெரியார் என்றார் சீமான்.
இது தொடர்பாக சென்னையில் இன்று ஜனவரி 4-ந் தேதி செய்தியாளர்களிடம் தொல். திருமாவளவன் கூறியதாவது: என் மீது அவர் (சீமான்) வைத்திருக்கிற அந்த மதிப்பீட்டுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை அவருக்கு உரித்தாக்குகிறேன்.
பெரியாரை நாங்கள் ஏற்க முடியாது என்று சொல்லிவிட்டு, திருமாவளவன்தான் எங்களுக்கு – இளம் தலைமுறையினருக்கு பெரியார் என்று சொல்வது ஒரு அரசியல் அணுகுமுறையாக அல்லது அரசியல் உத்தியாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. அவர் சாதுரியமாக அல்லது சாமார்த்தியமாக இந்த பிரச்சனையை கையாளுவதாகத்தான் கருதுகிறேன்.
அவர் பெரியார் வழிவந்தவர்; பெரியார் அரசியலை பேசியவர். பெரியார் இயக்கங்களின் மேடையில் அரசியல் கற்றுக் கொண்டவர்; அரசியலைப் பேசியவர். விடுதலைச் சிறுத்தைகளின் மேடைகளிலும் முழங்கியவர் என்கிற அந்த உரிமையோடு நான் சீமானுக்கு தெரிவிக்க விரும்புவது,
பெரியாரின் பகைவர்கள் என்ன உத்தியை கையாள்கிறார்களோ பெரியாரை வீழ்த்துவதற்காக பெரியார் காலத்தில் இருந்தே போராடிக் கொண்டிருக்கிற சக்திகள், அவர்கள் யார் என்பது அவருக்கே தெரியும்; அவர்களது நோக்கம் நிறைவேறுவதற்கு உங்களின் அரசியல் ஏதுவாக அமைந்துவிடக் கூடாது என்பது மட்டும்தான் எங்களுடைய கவலை. அவருக்கு நாங்கள் தெரிவிக்க விரும்புகிற செய்தி அதுதான்.
தி.க.வுடன் முரண்பாடுகள் இருக்கலாம்; திமுகவுடன் முரண்பாடுகள் இருக்கலாம்.. அந்த இயக்கத்தை வழிநடத்தக் கூடிய முன்னணி தலைவர்களின் அணுகுமுறைகளுக்கு மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் பெரியாரின் அரசியல், தன்னலமற்ற அரசியல்; ஈகம் நிறைந்த அரசியல்; விளிம்பு நிலை மக்களை மேம்படுத்துவதற்கான அரசியல். அவருடைய நிலைப்பாடுகளில் சில முன்னுக்குப் பின் முரண்கள் காணக் கூடியதாக இருக்கலாம்; ஆனால் அவை அனைத்தும் எளிய மக்களின் கோணத்தில் இருந்து அணுகினார் என்பதில் எந்த களங்கமும் இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்; ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை ஏற்க வேண்டும்.
பெரியார் தன்னலம் கருதக் கூடியவராக இருந்திருந்தால், அவரும் அரசியல் அதிகாரத்தை நோக்கி பயணித்திருக்க முடியும்; பதவியை நோக்கி செயல்பட்டிருக்க முடியும்; பொருளாதாரத்தை நோக்கி இயங்கியிருக்க முடியும்.
அப்படி பதவி, அதிகாரம், பொருளாதாரம், தன்னலம் என்ற அடிப்படையில் பெரியார் இயங்கவில்லை என்பதை சீமான் ஒப்புக் கொள்வார் என நம்புகிறேன். எனவே பெரியாரின் பங்களிப்பை, ஈகத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது; கொச்சைபடுத்தக் கூடாது என்பது எம்முடைய வேண்டுகோள்.
திக அல்லது திமுக அல்லது திராவிடர் இயக்கங்களை விமர்சிக்கிற போது திருமாவளவன் ஏன் முந்திக் கொண்டு வருகிறார் என பலரும் கேட்கிறார்கள். திக, திமுக பேசுகிற அரசியல், “பெரியார் அரசியல்” என்று புரிந்து கொள்கிற போது அது அந்த அளவோடு வரம்போடு நின்றுவிடக் கூடிய அரசியல் அல்ல; விடுதலை சிறுத்தைகளும் பேசுகிற அரசியல்தான் பெரியார் அரசியல். அம்பேத்கரும் பெரியாரும் ஒரே நேர்கோட்டில் பயணித்தவர்கள்; செயலாற்றியவர்கள்; விளிம்புநிலை மக்களை அதிகார வலிமைப்படுத்துவதற்காக தன்னை ஒப்படைத்துக் கொண்டவர்கள். எனவே, விடுதலை சிறுத்தைகள் பேசுகிற அரசியலுக்கு இத்தகைய கடுமையான மூர்க்கமான தாக்குதல் நிகழுமேயானால் நாங்கள் எப்படி கண்டும் காணாமலும் விலக முடியும்?
நாங்கள் பேசுகிற அரசியலின் அடிப்படையிலேயே அடித்தளத்திலேயே கைவைப்பதாக இருக்கும் போது விடுதலை சிறுத்தைகளுக்கும் அதிலே பொறுப்பு இருக்கிறது என எதிர்வினையாற்றுகிறோம். மற்றபடி தனிப்பட்ட முறையில் யார் மீதும் காழ்ப்பு இல்லை; சீமான் அவர்கள் மீதும் எங்களுக்கு காழ்ப்பு இல்லை. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
