மாநில அரசுகளே மது விற்பனை லாபத்தை பெருக்க தீவிரம் காட்டுகின்றனர் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன் பிறந்த நாளான ஆகஸ்ட் 17 அன்று தமிழர் எழுச்சி நாளாக விசிகவினர் கொண்டாடி வருகின்றனர்.
இந்த ஆண்டு திருமாவளவன் தனது 62 ஆவது பிறந்த நாளை இன்று(ஆகஸ்ட் 17) கொண்டாடி வருகிறார்.
இதை முன்னிட்டு நேற்று(ஆகஸ்ட் 16) தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் சுமார் மாலை 4 மணி அளவில் திருமாவளவன் பிறந்தநாள் விழா தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில், திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இயக்குனர்கள் ராஜ்கிரண், லட்சுமி ராமகிருஷ்ணன், இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட திரை பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இறுதியாக இன்று அதிகாலை 3.30 மணிக்கு நன்றியுரை ஆற்றிய திருமாவளவன், “மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்புதான் தான் இந்த ஆண்டின் தமிழர் எழுச்சி நாளின் கருப்பொருள். இதை முன்னிட்டு வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்தநாளில் கள்ளக்குறிச்சியில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்த இருக்கிறோம். மது மற்றும் போதை பொருளை ஒழிக்க வேண்டும் என்ற குரல் இன்று பெரிதாக இல்லை.
மனிதர்கள் வாழ்வில் மது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கிறது. இதனால் போதைப்பொருள் மற்றும் மதுவுக்கு அடிமையானவர்களின் குடும்பங்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த மனித ஆற்றலும் பாதிக்கப்படுகிறது.
ஒருவர் போதைக்கு அடிமையாகாமல் இருந்தால் அவர் நல்ல மருத்துவராகவோ, பொறியாளராகவோ அல்லது நல்ல கலைஞராகவோ, படைப்பாளராகவோ விஞ்ஞானியாகவோ, வழக்கறிஞராகவோ, நீதிபதியாகவோ வளர முடியும்.
ஆனால் அப்படி ஆக முடியாத அளவுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் டீன்ஏஜ் வயதிலேயே மதுவுக்கு அடிமையாகின்றனர்.
மதுபானம் மட்டுமல்ல கஞ்சா, பீடி சிகரெட், பான்பராக், புகையிலையுடன் கூடிய பாக்குகள், ஹெராயின், கோக்கைன் போன்ற போதை பொருட்கள் உள்ளன.
இவை எல்லாம் இன்றைக்கு பெரும்பாலும் ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் சரளமாக வெளிப்படையாக வியாபாரம் செய்யப்படுகிறது.
பிரவுன் சுகர் சர்வசாதாரணமாகிவிட்டது. போதைப்பொருள் காரணமாக இனப்பெருக்க விருத்திக்கு பாதிப்பு ஏற்பட்டு அதனால் வாரிசு இல்லாமல் போகிற நிலையும் ஏற்படுகிறது. இது ஒட்டுமொத்த தேசத்தின் மனித ஆற்றலை சிதைக்கிறது.
பெரியார், அம்பேத்கர் போன்ற போராளிகள் உருவாக வாய்ப்பு இருந்தாலும் போதைக்கு அடிமையாகி இளைஞர்கள் பாழாகி வருகிறார்கள். 40 வயதுக்குள் மரணமடைந்து விடுகிறார்கள். பெற்ற பிள்ளைகளை நடுத்தெருவில் விட்டுவிட்டு போய்விடுகிறார்கள். இது தேசத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே, இதையெல்லாம் ஒழிக்க முடியுமா?… சாதியை, ஒழிக்க முடியுமா என்று கேட்டால் இல்லை என்று தான் பதில் வரும்… ஆனால் ஈராயிரம் ஆண்டுகளாக அந்த கருத்து தொடர்ந்து தடையாக்கப்பட்டு வருகிறது. அந்தப் போராட்டமும் நீடித்து வருகிறது. ஊழலை ஒழிக்க முடியுமா என்றால் ஒழிக்க முடியாது சொல்ல தோன்றும்.
உலகம் முழுவதும் இதுதான் இன்றைக்கு நிலை. ஆனாலும் அதற்கான போராட்டங்கள், களப்பணிகள் தொடர்ந்து கொண்டே இருப்பதை நாம் பார்க்கிறோம். அதுதான் தேவை.
மது மற்றும் போதை பொருள் பழக்கத்தால் சிதைந்து வரும் மனித வளத்தை பாதுகாக்க விழிப்புணர்வு ஊட்டும் பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்தியாவில் ஒரு சில மாநிலங்களைத் தவிர அனைத்து மாநிலங்களும் மதுபான வியாபாரங்களை செய்கிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ் படித்த அதிகாரிகள் அந்த பணிகளை செய்து வருகின்றனர். ஆண்டு தோறும் அதன் லாபங்களை பெருக்குவதற்கான செயல் திட்டங்களை வரையறுத்து தீவிரப்படுத்தி வருகின்றனர்.
காந்தியடிகளோடு பல்வேறு முரண்கள் இருந்தாலும் மதச்சார்பின்மை மற்றும் மது ஒழிப்பு ஆகியவற்றில் அம்பேத்கர் உடன் காந்தியடிகள் உடன்படுகிறார்.
எனவே காந்தியடிகளின் பிறந்த நாளில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டை நடத்த முடிவு செய்திருக்கிறோம். அன்றைய தினம் லட்சக்கணக்கான பெண்களை திரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
மேலும் அவர், “உங்களுடைய எதிர்பார்ப்பு எல்லாம் மறுசீரமைப்பில் உள்ள தேக்கத்தை எப்போது உடைக்க போகிறீர்கள் என்பதாகத்தான் இருக்கும். அக்டோபர், நவம்பர் மாதங்களையும் மறுசீரமைப்புக்காக ஒதுக்கியிருக்கிறோம். இந்த மாநாடு முடிந்த பிறகு மறுசீரமைப்பு பணிகளை வேக வேகமாக முடிக்க வேண்டும். இந்த தேக்கத்தை எண்ணி பதற்றம் அடைய வேண்டாம்” என்று குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
கலைஞர் நாணயம் : சென்னை வரும் ராஜ்நாத் சிங்கின் முழு பயண விவரம்!