திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம், காஞ்சிபுரத்தில் இன்று (செப்டம்பர் 28) நடைபெற்று வருகிறது.
இந்த பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசும்போது, “பவள விழா காணும் திமுக வெறும் தேர்தல் அரசியலை முன்னிறுத்தி, அதிகாரத்தை நோக்கி இயங்குகிற சராசரி இயக்கம் அல்ல. அதனால் தான் 75 ஆண்டுகளாக வெற்றி நடை போடுகிற இயக்கமாக இருக்கிறது. ஆறாவது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்கிறது.
Dravidian Legacy ஸ்டாலினிடம் இருப்பதனால் தான் இந்த ஆட்சியே திராவிட மாடல் என்று பிரகடனப்படுத்தியிருக்கிறார். கலைஞர் கூட அதை அறிவிக்கவில்லை. அண்ணா அரசு என்று தான் சொல்லியிருக்கிறார். ஆனால், இந்தியா முழுவதும் திராவிட மாடல் ஆட்சியை நடத்துகிறோம் என்று இந்தியாவிற்கே அறிவித்திருக்கிறார் ஸ்டாலின்.
அவரை வெறும் குடும்ப வாரிசு என்கிறார்கள், கருத்தியல் வாரிசு அவர். பெரியாரின் கொள்கை பேரன் அவர். பெரியார் வழியில் அவர் தொடர்ந்து இயங்குகிறார். இந்திய அளவில் கருத்தியல் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்கம் திமுக.
திமுக கூட்டணி என்பது 2017-ஆம் ஆண்டு முதல் பிரச்சனைகள் அடிப்படையில் ஒன்று சேர்ந்த அணி. தேர்தல் காலத்தில் உருவாக்கப்பட்ட அணி அல்ல. காவிரி நீர் பிரச்சனைக்காக உருவாக்கிய இந்த அணியை இன்று வரை கட்டுக்கோப்பாக வழிநடத்திக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.
மற்ற மாநிலங்களில் தேர்தல் காலத்தில் கூட்டணி உருவாகும், தேர்தல் முடிந்ததும் சிதறிப்போகும். ஆனால், இந்த அணி இன்று வரை கட்டுக்கோப்பாக இயங்குகிறது என்றால் அதற்கு ஸ்டாலின் தான் காரணம்.
இந்த நேரத்தில் அண்ணா நிறைவேற்ற முடியாத ஒன்றை ஸ்டாலினிடம் நான் கோரிக்கையாக வைக்கிறேன். இந்தி திணிப்பு போராட்டத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட போராளிகளான நடராசன், தாளமுத்து பக்கத்தில் பெரியார் இருப்பதை போல சிலை நிறுவ வேண்டும்.
என்றைன்றைக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியானது, திமுக, திராவிடர் கழகம் ஆகிய இரட்டை குழல் துப்பாக்கியோடு மூன்றாவது குழலாக இருக்கும். தொடர்ந்து இந்த களத்தில் உங்களோடு நாங்கள் சனாதன சக்திகளுக்கு எதிராக முழங்குவோம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில் மிஸ்ஸிங்…. வாழ்த்து செய்தி அனுப்பிய கமல்