எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்றபோது மேற்கொண்ட ஒப்பந்தங்களில் 10 சதவிகிதம் கூட நிறைவேறவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 14) தெரிவித்துள்ளார்.
அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்ற ஸ்டாலின், இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலினிடம், முதலீட்டு ஒப்பந்தங்கள் மற்றும் வெளிநாடு பயணம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் வெள்ளை அறிக்கை கேட்டது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஸ்டாலின், “அமெரிக்க பயணத்திற்கு முன்பாகவே பத்திரிகையாளர்களை சந்தித்து தமிழ்நாட்டிற்கு கடந்த மூன்று ஆண்டுகளில் வந்த முதலீடுகள் குறித்து நான் விளக்கமாக தெரிவித்துவிட்டேன். அதுமட்டுமல்லாமல், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவும் புள்ளி விவரங்களுடன் விளக்கியிருக்கிறார். மேலும், சட்டமன்றத்திலும் இதுதொடர்பாக பேசியிருக்கிறார்.
அதை எதிர்க்கட்சி தலைவர்கள் மட்டுமல்ல, எதிர்க்கட்சி தலைவராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியும் படித்து பார்த்து தெரிந்துகொண்டு பேசவேண்டும். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றார். அதில் 10 சதவிகித விழுக்காடு ஒப்பந்தங்கள் கூட முழுமையாக நிறைவேறவில்லை. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. அதை சொன்னால் அவருக்கு அவமானமாக இருக்கும். அதனால் நான் தவிர்க்கிறேன்” என்றார்.
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களை விட குறைவான முதலீடுகளை ஈர்த்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த ஸ்டாலின், “இதெல்லாம் அரசியல் நோக்கத்திற்காக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள். நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான முதலீடுகள் வந்திருக்கிறது. அதில் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புதிய கல்விக் கொள்கை, சென்னை மெட்ரோ… பிரதமரை சந்திக்கும் ஸ்டாலின்
மது ஒழிப்பு மாநாடு: அதிமுகவுக்கு விசிக அழைப்பு… ஸ்டாலின் ரியாக்ஷன்!