ஆம்ஸ்ட்ராங் கொலை: பாஜக மீது சந்தேகத்தை கிளப்பும் திருமா… ஸ்டாலினிடம் முக்கிய கோரிக்கை!

Published On:

| By Selvam

சென்னை தலைமை செயலகத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று (ஜூலை 12) முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை, சட்டம் ஒழுங்கு, நீட் தேர்வு, புதிய கிரிமினல் சட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமின்றி, இதனை திட்டமிட்ட கூலி கும்பல் ஆகிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து ஒரு பதட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் சில அமைப்புகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக பாஜகவுக்கு இந்த செயல்திட்டம் இருப்பதை அறியமுடிகிறது. ஆகவே, ஆம்ஸ்ட்ராங் கொலையிலும் கூட ஒரு அரசியல் செயல்திட்டம் இருக்க வாய்ப்பு இருப்பதாக விசிக சந்தேகப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்த சில நிமிடங்களில் பாஜக கட்சியை சார்ந்த ஒருவர் தான் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அவர் தான் சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை வைத்தார்.

காவல்துறை நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்னதாகவே பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை வைப்பதற்கு முன்னதாகவே சிபிஐ விசாரணை வேண்டும் என்று பாஜகவில் இருந்து குரல் வந்தது. அதுதான் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையின் குரலாகவும் ஒலித்தது.

ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்கும் பாஜகவை சேர்ந்த சிலருக்கும் இடையில் உள்ள உறவு குறித்து கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆருத்ரா கோல்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பாஜகவில் பொறுப்பில் இருக்கிறார்கள். இப்போது ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஆருத்ரா கோல்டு விவகாரமும் பேசப்படுகிறது.

பாஜக இதில் வலிந்து தலையிடுகிறது. இதுபோன்ற விவகாரங்கள் புலனாய்வு விசாரணைக்கு உரியதாக உள்ளது. அவர்களின் அரசியல் செயல்திட்டம் என்பது திமுக அரசுக்கு எதிராக தமிழகத்தில் பதட்டத்தை ஏற்படுத்த வேண்டும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்பதாக தான் இருக்கிறது. அதற்கு துணையாக பல அமைப்புகளும் இங்கே செயல்பட்டு வருவதை பார்க்க முடிகிறது.

ஆருத்ரா கோல்டு, பாஜக, ஆம்ஸ்ட்ராங் படுகொலை என்ற முக்கோணம் இதில் இருப்பதாக தெரிகிறது.  ஆற்காடு சுரேஷ் மனைவி பாஜகவில் பொறுப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் சிலரும் நேரடியாக பாஜகவோடு தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. எனவே இதுதொடர்பாக புலன் விசாரணை நடத்த வேண்டும்.

முன்னாள் முதல்வர் கலைஞரை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சிப்பது அநாகரித்தின் உச்சமாக இருக்கிறது. அவர் மீது அரசியல் ரீதியாகவோ கருத்தியல் ரீதியாகவோ விமர்சனங்களை வைக்கலாம். அவரை கொச்சைப்படுத்துவதன் மூலம் மேலும் பதட்டத்தை உருவாக்க வேண்டும் என்பது அவர்களின் நோக்கம் என்பதை உணர முடிகிறது.

ஆக, ஒட்டுமொத்தமாக அரசியல் செயல்திட்டங்களை வரையறுத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சில சக்திகள் செயல்பட்டு வருவதை அறிந்து சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம்.

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் சமூக விரோதிகளை பாதுகாக்கக்கூடிய, அடைக்கலம் தரக்கூடிய அமைப்பினர் மற்றும் கட்சியிரை கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவாக வழங்கியிருக்கிறோம்.

ஆம்ஸ்ட்ராங் உடலை பொதுமக்களின் பார்வைக்காக அரசு பள்ளி வளாகத்தில் வைப்பதற்கு அனுமதி அளித்து உரிய பாதுகாப்பு அளித்து கண்ணியமான முறையில் அவருடைய உடலை அடக்கம்  செய்வதற்கு அரசு ஒத்துழைத்ததற்காக நன்றி தெரிவித்தோம்.

நீட் தேர்வு, கிரிமினல் சட்டத்தை சீராய்வது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று மனு அளித்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘இந்தியன் 2’ படம் எப்படி இருக்கு? – ட்விட்டர் விமர்சனம் இதோ!

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share