ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று தான் பேசிய வீடியோவை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்த விசிக தலைவர் திருமாவளவன், சில நிமிடங்களில் அதனை டெலிட் செய்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரும் அக்டோபர் 2-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி சார்பில் கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ள மது, போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ள அதிமுகவிற்கு அழைப்பு விடுத்திருந்தார் திருமாவளவன்.
இந்த விவகாரம் தமிழக அரசியல் சூழலில் பெரும் விவாதத்திற்குள்ளான நிலையில், அமெரிக்காவில் இருந்து இன்று (செப்டம்பர் 13) சென்னை வந்த முதல்வர் ஸ்டாலின், “இது அரசியல் நோக்கத்திற்கான மாநாடு அல்ல. இதற்கும் அரசியலுக்கும் முடிச்சு போட வேண்டாம் என்று திருமாவளவனே விளக்கமளித்துவிட்டார்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று திருமாவளவன் பேசிய பழைய வீடியோ ஒன்று அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிரப்பட்டு ஒரு சில நிமிடங்களில் உடனடியாக நீக்கப்பட்டது.
திருமாவளவன் அந்த வீடியோவில் பேசும்போது, “தமிழகத்தில் இதற்கு முன்பு கூட்டணி ஆட்சி என்ற குரலை யாரும் உயர்த்தினார்களா என்று எனக்கு தெரியாது. ஆனால், 2016 தேர்தலில் கூட்டணி ஆட்சி என்ற குரலை எழுப்பிய கட்சி விசிக. பவர் ஷேர் என்பது வேறு, சீட் ஷேர் என்பது வேறு. கூட்டணியில் இடம் வேண்டும் என்பது சீட் ஷேர். கேபினட்டில் இடம் வேண்டும் ,எனக்கும் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது பவர் ஷேர்.
மூப்பனாரிடம் கூட்டணியில் சேரும் போது, ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று பேசினேன். அதனால் தான் மூப்பனாருக்கு என்னை பிடித்தது. 1999-ஆம் ஆண்டு தேர்தல் அரசியலில் விடுதலை சிறுத்தைகள் அடியெடுத்து வைத்தபோது முன்வைத்த தேர்தல் முழக்கம் இது.
நான் முதன்முதலாக நெய்வேலி அம்பேத்கர் சிலைக்கு மாலை போடும்போது சொன்ன முழக்கம், ‘கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம் , எளிய மனிதர்களுக்கும் அதிகாரம் ‘. அதிகாரத்தை மக்களிடம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஜனநாயகம் கொடுக்க வேண்டும்.
இதையெல்லாம் சொல்லுகிற துணிச்சலை பெற்ற இயக்கம் விசிக மட்டும் தான். எங்களை புரிந்துகொள்ள வேண்டும் என்றால் இந்த வரலாறை எல்லாம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று பேசியிருந்தார்.
வீடியோ நீக்கப்பட்ட விவகாரம் குறித்து மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “அட்மின் தான் பதிவிட்டிருக்கிறார். எனக்கு அந்த வீடியோவை பதிவிட்டதும் டெலிட் செய்ததும் தெரியாது. விசாரித்து சொல்கிறேன்” என்றார்.
தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற உங்கள் நிலைப்பாட்டை மாற்றியிருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, “அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் நீண்ட காலமாக பேசிவருகிறோம்” என்று திருமாவளவன் தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“கோவளம் ஹெலிகாப்டர் திட்டத்தை கைவிடுங்கள்” – அன்புமணி வார்னிங்!
சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு சோனியா, நட்டா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி!