அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து விசிக தலைவர் திருமாவளவன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்த நிலையில், திருமாவளவன் அதனை இன்று (அக்டோபர் 20) மறுத்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “சமூக நீதியை பற்றி பேசுவதற்கு திருமாவளனுக்கு அருகதை கிடையாது. சமூதாயத்தில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் இட ஒதுக்கீடு சென்று சேர வேண்டும் என்பது தான் அம்பேத்கரின் கொள்கையாக இருந்தது. ஆனால், திருமாவளவன் இரட்டை வேடம் போடுகிறார்.
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும் திருமாவளவன் எப்படி ஒரு தலித் மக்களின் தலைவராக இருக்க முடியும்? அவர் ஒரு சின்ன கட்சியை வைத்திருக்கிறார். அந்த அமைப்பின் தலைவராக தான் நான் அவரை பார்க்கிறேன். அவரது உண்மை முகம் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதனால் திருமாவளவன், முதலமைச்சராகும் கனவெல்லாம் நடக்காது” என்று தெரிவித்தார்.
எல்.முருகனின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த விசிக தலைவர் திருமாவளவன், ” எல்.முருகன் அருந்ததியர் என்பதே ஆர்.எஸ்.எஸ் சொல்லி தான் அருந்ததியர் சமுதாயத்திற்கு தெரியும். அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ் காரர். அவர் ஒருபோதும் தன்னை அருந்ததியர் என்று காட்டிக்கொண்டதில்லை. அருந்ததியர் உரிமைகளுக்காகவும், இட ஒதுக்கீட்டிற்காகவும் அவர் எந்த காலத்திலும் போராடியதில்லை.
அருந்ததியர் இட ஒதுக்கீட்டுக்கு போராடிய எந்த இயக்கத்தோடும் அவர் ஒரே மேடையில் நின்றதில்லை. தமிழ்நாட்டில் உள்ள அருந்ததியர்களுக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அருந்ததியர் இட ஒதுக்கீட்டிற்காக தொடக்க காலத்தில் இருந்து விசிக போராடி வருகிறது. முன்னாள் முதல்வர் கலைஞர் அருந்ததியர் இட ஒதுக்கீடு தொடர்பாக அழைத்து பேசிய முதல் கட்சி விசிக தான். விசிக ஆதரித்து தான் அருந்ததியர் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
விசிகவில் அதிகளவில் அருந்ததியர் சமூகத்தினர் இருப்பதனால் தான், பொறாமைப்பட்டு அவர்களை வெளியேற்றுவதற்காக திட்டமிட்டு அவதூறுகளை பரப்புகிறார்கள். உச்சநீதிமன்றத்தில் அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை எதிர்த்து விசிக வழக்கு தொடரவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பு தலித்துகளுக்கு சப் கேட்டகரேஷன் என்ற பெயரில் செப்பரேட் கோட்டா தருவதற்கு வழி வகுக்கிறது. அதுவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் தருகிறது. அதனை எதிர்க்கிறோம். பொருளாதார அளவுகோலை எதிர்க்கிறோம். இது எந்த வகையிலும் அருந்ததியர்களுக்கு எதிரானது அல்ல” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: அதிகாரிகளை வேலை வாங்காத அமைச்சர்கள் – உடைத்துப் பேசிய உதயநிதி
தீபாவளி… எவ்வளவு நேரம் பட்டாசு வெடிக்கலாம்? – வெளியான முக்கிய அறிவிப்பு!